Thanali Raman Stories லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

     புலவரை வென்ற தெனாலிராமன்    

தெனாலிராமன் கதைகள்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான்.

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.

மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.

 நம்பிக்கை தரும் வரிகள் !!!
 நம்பிக்கை தரும் வரிகள் !!!
ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!

ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!

கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!

கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!

இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!

கனவு நிறைவேறும்வரை முயற்சியை கலைத்து விடாதே ஏனெனில்..
முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!
வெற்றிப்பாதை!!

உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!

அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!

இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!

துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!

ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!

தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!

செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!

பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!

மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!

புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!

தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!

தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!.

யார் முட்டாள் நீதிக்கதை

ஒரு சிறுவன் ஒரு முடிதிருத்தும் கடைக்குள் நுழைந்தான். அப்போது அந்த கடைக்காரர் அங்கிருந்த வாடிக்கையாளரிடம் மெதுவாகச் சொன்னார்  “இந்த உலகிலேயே இவன்தான் மிக முட்டாள் குழந்தையென்றும் .அதை இப்போது நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்றார்.

பின்அந்த கடைக்காரர் ஒரு கையில்  5 ரூபாய் நாணயத்தையும் மறுகையில் 2 ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு அந்த பையனை அழைத்து உனக்கு எது ‌வேண்டும் என்று  கேட்டார்?.


அந்தப் பையன் 2 ரூபாயைப் பெற்றுக்கொண்டு சென்றான்.

அந்த கடைக்காரர் சொன்னார் பார்த்தீர்களா,!! இவன் முன்னேறப்போவதே இல்லை என்றார்.

கடையிலிருந்து சென்ற அந்த வாடிக்கையாளர் அந்தப் பையன் ஒரு ஐஸ்கீரிம் கடையிலிருந்து வருவதைக்கண்டார். அவர் அவனிடம் சென்று ஒரு கேள்வி கேட்கலாமா? என்று ‌கேட்டார்.

அதற்கு அந்த பையன் பதில் எதுவும் கூறாமல் சரி என்று தலையசைத்தான் ...

 ஏன் 5 ரூபாய்க்கு பதில் 2 ரூபாயை   பெற்றுக்கொண்டாய்?

அந்தப் பையன் ஐஸ்கிரீமை நக்கிக்கொண்டே ‌ சொன்னான்

[lock] “எப்‌போ நான் அவரிடம்  5 ரூபாயை எடுக்கிறேனோ அன்றோடு எனக்கு இந்த பணம் கிடைப்பதே நின்றுவிடும் என்று."[/lock]


கதையின் நீதி: 
எப்பொழுது நீ மற்றவர்களை முட்டாள் என்று எண்ணுகிறாயோ அப்போது நீ உன்னையே முட்டாளாக்கிக்கொள்கிறாய்.

தெனாலிராமன்  புரோகிதர்களுக்கு சூடு போட்ட கதை !!

மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம். அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருந்தார்.

இனிமேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்பது மன்னருக்குத் தெரிந்துவிட்டது. அவர் தன் அம்மாவிடம் “உங்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பிட என்ன வேணும் சொல்லுங்கள். நீங்கள் ஆசைப்படுவதை வாங்கித் தருகிறேன்” என்று கேட்டார்.

அவருடைய அம்மா, “எனக்கு மாம்பழம் சாப்பிடணும் போல இருக்கு” என்றார்.

அது மாம்பழ சீசன் இல்லை. ஆனால் எப்படியாவது மாம்பழம் வாங்கி வந்து தர வேண்டும் என்று மன்னர் விரும்பினார். அம்மாவின் கடைசி ஆசை அல்லவா?

தன்னுடைய வேலையாட்களை அனுப்பினார். “எங்கேயாவது போய் எப்படியாவது மாம்பழத்தை வாங்கி வாருங்கள்” என்று உத்தரவு போட்டார்.

மாம்பழம் வந்தது. ஆனால் அதற்குள் அவர் அம்மா இறந்துவிட்டார்.

ராஜாவுக்கு ஒரே துக்கம். மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற அம்மாவின் கடைசி ஆசையைகூட நிறைவேற்ற முடியவில்லையே என்று வருத்தம். அம்மாவுடைய ஆத்மா சாந்தி அடையாதோ என்று பயந்தார். இதற்கு என்ன செய்யலாம் என்று புரோகிதர்களிடம் கேட்டார்.

புரோகிதர்களுக்குப் பேராசை. “உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம இறந்ததால், இதுக்கு பரிகாரம் பண்ணணும்” என்றார்கள்.

என்ன பரிகாரம்?

“தங்கத்தால் ஆன 108 மாம்பழங்களை 108 புரோகிதர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அம்மாவின் ஆத்மா சாந்தியடையும். இதுதான் பரிகாரம்” என்றார்கள் புரோகிதர்கள்.

ராஜாவும் அவர்கள் சொன்ன மாதிரியே பரிகாரம் செய்து புரோகிதர்களை மகிழ்வித்தார்.

தெனாலிராமன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் புரோகிதர்கள் ராஜாவை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.

தெனாலிராமன் அந்தப் புரோகிதர்களிடம் போய், “என் அம்மாவுக்குத் திதி வருது. எனக்கும் பரிகாரம் பண்ணணும். நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க” என்றார்.

புரோகிதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. நல்ல வருமானம் கிடைக்கும் என்று கிளம்பினார்கள்.

தெனாலிராமன் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு புரோகிதராகப் பூஜை அறைக்கு வரச் சொன்னார். அங்கே பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை வைத்திருந்தார். அந்தக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டார்.

புரோகிதர்கள் கதறிக்கொண்டே ராஜாவிடம் போய் புகார் செய்தார்கள். ராஜாவுக்கு ரொம்பக் கோபம். “தெனாலிராமா! ஏன் இப்படி சூடு போட்ட?” என்று கோபத்துடன் கேட்டார்.

தெனாலிராமன் பணிவாக பதில் சொன்னார். “ராஜா! நான் எந்தத் தப்பும் பண்ணல. எங்கம்மா ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருந்தாங்க. சாகிற நேரத்துல அவருக்கு வலிப்பு நோய் வந்துடுச்சி. வைத்தியர்கள் அவருக்கு சூடு போடச் சொன்னாங்க. ஆனா சூடு போடறதுக்கு முன்னாலயே அவர் செத்துபோயிட்டார். எங்கம்மா ஆத்மா சாந்தி அடையணும்னா புரோகிதர்களுக்கு சூடு போடணும்னு பெரியவங்க சொன்னாங்க. அதைத்தான் செஞ்சேன்” என்றார்.

“நீ சொல்வது ரொம்ப முட்டாள்தனமா இருக்கே!” என்றார் ராஜா.

“இதில் என்ன முட்டாள்தனம் இருக்கு? உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம செத்துப் போனபோது புரோகிதர்களுக்கு தங்கத்துல மாங்கா செஞ்சு குடுத்தீங்க இல்லயா? அதே மாதிரிதான் இது” என்றார்.

அப்போதுதான் தான் செய்த முட்டாள்தனம் அவருக்குப் புரிந்தது. புரோகிதர்களின் பேராசையும் புரிந்தது. தெனாலிராமன் செய்ததை எண்ணி அவருக்குச் சிரிப்பு வந்தது.

சிரித்துக்கொண்டே தெனாலிராமனைப் பாராட்டினார்.

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.

தெனாலிராமன் கதைகள்
தெனாலிராமன் கதைகள்


ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.

” கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்” என்று தண்டனையளித்தார். மன்னரும் ” அப்படியே செய்யுங்கள்” என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்.

ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர்.
ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர்.

மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது. “அய்யா!” தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான்.

அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் “பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்.”என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான்.

“யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?” என்றான்.

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.

“அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது” என்றான்.

கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது.

அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி
தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர்.

உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார்.

இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.

மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை.

சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.

இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.

உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். 


தெனாலிராமன் கதைகள்
தெனாலிராமன் கதைகள் 

மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். 

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். 

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். 

சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். 

தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான். 

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். 

அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. 

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.

அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.

அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.

இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.

அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.

இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.

இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.

"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.

ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.

இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.

"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்

வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.

இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.