கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 பழங்கள் மாநாடு

பழங்கள் மாநாடு


உலகில் இருக்கக் கூடிய  பழங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின.

எந்தப் பழம் அதிகச் சுவையுடையது; சிறப்புடையது? என்ற கேள்வி

ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் எல்லாம் ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி.ஒன்றுக் கொன்று அடித்து கொண்டன.

ஆனால், திராட்சைப் பழம்  எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது.

இதனால் மற்ற பழங்கள் திராட்சை பழத்தை பார்த்து இழிவாக சிரித்தன.

பலாப்பழம் திராட்சைப் பழத்தைப் பார்த்து அன்புடன் நீ ஏன் மவுனமாக நிற்கிறாய்? எனக்குத் தெரியும் .

அதை நீயே உன் வாயால் சொல்ல வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களும் உன் தகுதி பற்றி அறிந்து கொள்ளும்,'' என்று கூறியது.

நீங்கள் எல்லாருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். 

ஆனால், நாங்கள், ஒரு கூட்டமாக, கொத்தாக வள்கிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு மற்றவர்களுக்கு இடம் தருகிறோம். விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும் போதும் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.

வாழ்விலும், வளர்ச்சியிலும், மரணத்திலும் நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம்.ஆனால் நீங்கள் யார் பெரியவர்கள் என்று அடித்து கொண்டு  இருக்குறீர்கள்? என்றது

மற்ற பழங்கள் வெட்கத்தால் தலைகுனிந்தன.

 மதிப்பு

பாபுவுக்கும் ஏன் சைபர் மார்க் போட்டீங்க.

பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருந்தது. ஐந்தாம் வகுப்பு ஆசிரியை பத்மாவதி கரும்பலகை போர்டில் சாக்பீசினால் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த பாலனும், பாபுவும் ஒருவருக்கொருவர் எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று எழுந்து நின்று ஒருவருக்கொருவர் சிலேட்டால் அடித்துக் கொண்டார்கள்.”"டீச்சர்… டீச்சர்… இங்க பாருங்க. பாலனுக்கும், பாபுவுக்கும் சண்டை நடக்குது…” என்று மற்ற மாணவர்கள் கோரசாகக் குரல் கொடுத்தார்கள்.பிளாக் போர்டில் எழுதுவதை நிறுத்தி விட்டுத் திரும்பினார் பத்மாவதி. அவருக்கு கோபம் வந்து விட்டது. “”பாபு… பாலன்… இரண்டு பேரும் இங்க வாங்க…” இருவரும் பயந்து நடுங்கியவாறு டீச்சர் முன்னால் வந்து நின்றார்கள்.”

“உங்களுக்குள்ள என்ன சண்டை… உண்மையைச் சொல்லுங்…” “”டீச்சர்… டீச்சர்… எங்க அப்பா எனக்கு ஒரு புது பென்சில் வாங்கிக் கொடுத்தார். அதை எங்க அம்மா நல்லா சீவி கொடுத்தாங்க. அந்தப் பென்சிலை நான் பாலன்கிட்ட காட்டினேன். அவன் உடனே, “இது என்னோட பென்சில்’னு சொல்லிப் பிடுங்கிக்கிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல. கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, சிலேட்டால என்னை அடிச்சான். நானும் திருப்பி அடிச்சேன்” என்றான் பாபு. அவன் கண்கள் கலங்கியிருந்தன.சிறிது நேரம் யோசித்த பத்மாவதி டீச்சர், “”நீ என்னப்பா சொல்றே…” என்று பாலனைப் பார்த்துக் கேட்டார். “”டீச்சர்… பாபு சொல்றது அத்தனையும் பொய். இந்தப் பென்சிலை எனக்கு எங்க அப்பாதான் வாங்கிக் கொடுத்தாரு. அவரே பிளேடால சீவியும் கொடுத்தாரு. நான் பாபுகிட்ட புது பென்சிலைக் காட்டினேன். உடனே அவன், “இது என்னோட பென்சில். என்கிட்டே கொடுத்திடுன்னு சண்டை போட ஆரம்பிச்சுட்டான்…” -எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மீண்டு பாபுவை குரூரமாகப் பார்த்தான் பாலன்.

மீண்டும் சிந்தனையில் மூழ்கினார் டீச்சர். “”சரி… அந்தப் பென்சிலை என்கிட்டே கொடுங்க…” பாலன் பென்சிலை டீச்சர் பத்மாவதியிடம் கொடுத்தான். “”சரி… பாலன் நீ முன் வரிசையில் உட்காரு. பாபு நீ கடைசி வரிசையில் போய் உட்காரு. பென்சில் யாருடையதுன்னு நான் கண்டுபிடிக்கிறேன். அதுவரைக்கும் ரெண்டு பேரும் அமைதியா இருக்கணும். நான் சொல்றதைக் கேட்கலேன்னா அடி விழும். புரியுதா..?” தொடர்ந்து பத்மாவதி டீச்சர் பிளாக் போர்டில் எழுதி முடித்தார். “”எல்லோரும் கவனியுங்க. பிளாக் போர்டிலே ரெண்டு கணக்கு எழுதியிருக்கேன். அதை அப்படியே உங்க சிலேட்டிலே எழுதி அதற்கான விடையையும் தெளிவா எழுதணும்…” என்று சொல்லிவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தார் டீச்சர்.

மாணவர்கள் எழுதத் துவங்கினர். பத்மாவதி டீச்சர் வருகைப் பதிவேட்டை சரிபார்த்து வைத்தார். பின்னர், மாணவர்கள் எழுதுவதை கவனித்துக் கொண்டிருந்தார். அரைமணி நேரத்தில் எல்லா மாணவர்களும் எழுதி முடித்து விட்டனர்.”"சரி… எல்லோரும் தங்களுடைய சிலேட்டை இங்கே என்னோட மேஜையில் கொண்டு வந்து வையுங்கள். நான் பார்த்துவிட்டு மார்க் போடுறேன்” என்றார் டீச்சர். மாணவர்கள் வரிசையாக எல்லோரும் வந்து டீச்சரின் மேஜை மேல் தங்கள் சிலேட்டுகளை வைத்து விட்டுச் சென்றனர். டீச்சர் ஒவ்வொரு சிலேட்டையும் எடுத்துப் பார்த்து மார்க் போட்டார். கடைசியாக வைத்த பாலன் சிலேட்டில் சைபர் மார்க் போட்டிருந்தார். எல்லோரும் தங்களுடைய சிலேட்டுகளை டீச்சரிடமிருந்து வாங்கிக் கொண்டனர்.பாலன் மட்டும் எழுந்து நின்று கோபமாக பேசினான். “”என்ன டீச்சர்… நான்தான் கணக்கின் விடையை சரியாக எழுதியிருக்கிறேனே… எனக்கு எதுக்காக சைபர் மார்க் போட்டிருக்கீங்க..?” பத்மாவதி டீச்சர் அமைதியாகப் பதில் சொன்னார். “”உனக்கு மட்டும் சைபர் மார்க் போடலே. பாபுவுக்கும் சைபர் மார்க்தான் போட்டிருக்கேன். அவன் மவுனமாக உட்கார்ந்திருக்கிறான். நீ மட்டும் ஏன் கோபப்படுறே…” “”அவனைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. எனக்கு ஏன் சைபர் மார்க் போட்டீங்க…” என்று மறுபடியும் கோபமாகவே கேட்டான் பாலன்.

பாலன் பேசுவது மற்ற மாணவர்கள் அச்சத்தோடு பார்த்தார்கள்.”"நீ உனக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருந்த கணேஷைப் பார்த்து காப்பியடிச்சே. போர்டிலே நான் போட்டிருந்த கணக்கை உங்க சிலேட்டிலே எழுதி அதற்குரிய விடையை எழுதணும். இதிலே என்னக் கஷ்டம். வாய்ப்பாடு ஒழுங்கா படிச்சிருந்தா எல்லோரும் கணக்கை சரியாகப் போட்டிருக்கலாம். நீ வீட்டிலே வாய்ப்பாடு படிக்கிறதில்லே போலிருக்கு. அதனால்தான் பக்கத்திலே உட்கார்ந்திருந்த கணேஷைப் பார்த்துக் காப்பியடிச்சிருக்கே. நீ காப்பியடிச்சதினாலே உனக்கு சைபர் மார்க் போட்டேன்” என்றார் டீச்சர்.

பாலனின் மனம் வேறு கோணத்தில் திரும்பியது. “”சரி… அப்புறம் பாபுவுக்கும் ஏன் சைபர் மார்க் போட்டீங்க. அவன் நல்லா கணக்குப் போட்டிருப்பானே…” என்று கேட்டான் பாலன்.புன்முறுவலுடன் பாலனை மடக்கினார் டீச்சர். “”அவன் நல்லா படிப்பானா..? உனக்குத் தெரியுமா..?” “”நல்லா தெரியும். அவன் நல்லா படிப்பான். அதனால்தான் எனக்கு அவன்மேல் பொறாமை. எப்படியாவது அவன்கிட்டே வம்பளப்பேன்” என்றான் பாலன்.”

“பாலன்… இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா. நல்லா படிக்கிற பையனைப் பார்த்து, அவனைப் போல நாமும் நல்லா படிச்சு அதிக மார்க் வாங்கணும்னு நெனைக்கிறது தானே நியாயம். நீ ஏன் அவன் மேலே பொறாமைப்படுறே. அவன் பென்சிலை உன்னுடையதுன்னு ஏன் பொய் சொல்லுறே..?” பாலனின் முகம் வாடியது.”"அது எப்படி டீச்சர் உங்களுக்குத் தெரியும்..?” என்று முகத்தில் அசடு வழியக் கேட்டான் பாலன்.”"உன் முகம் காட்டிக் கொடுத்து விட்டது. அது மட்டுமில்லே… நேற்று நான் எழுதுபொருள் வாங்குவதற்காகப் போயிருந்த கடையில் பாபுவின் அப்பா புதிதாக பென்சில் வாங்கியதைப் பார்த்தேன்” என்றார் டீச்சர்.பாலனின் மனம் அமைதி பெறவில்லை.

“”எல்லாம் சரி, பாபுவுக்கு ஏன் சைபர் மார்க் போட்டீங்க. அதை மட்டும் சொல்லிடுங்க” என்றான். மறுபடியும் டீச்சர் முகத்தில் புன்முறுவல்.”"சொல்றேன். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.

இந்தச் சின்ன வயசில உங்ககிட்ட பொறாமைக் குணம் இருக்கவே கூடாது. போட்டி மனப்பான்மை இருக்கலாம். அதில் தவறு இல்லை. எல்லாருமே நல்லா படிச்சு நெறைய மார்க் வாங்கணும்னு நினைக்கணும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. கணக்கை எல்லோரும் சிலேட்டில போட்டுக்கிட்டு இருந்தப்ப பாபுவுக்கு பக்கத்திலே உட்கார்ந்திருந்த பையன் சேகர் பல்பத்தை எடுத்து வரல போலிருக்கு. உடனே பாபு தன்னோட பல்பத்தை பாதியை ஒடிச்சு சேகர்கிட்ட கொடுத்து உதவியதை நான் பார்த்தேன். அதனால்தான், பாபுவுக்கு சைபர் மார்க் போட்டு அவனுக்கு கோபம் வருதான்னு பார்த்தேன். ஆனா… பாருங்க, பாபுவுக்கு கோபம் வரலே.” இப்பொழுது கைகளைக் கட்டிக் கொண்டு பாபு எழுந்து நின்றான். “”டீச்சர்… எங்க அம்மா தினமும் என்கிட்டே சொல்லுவாங்க. மாதா, பிதா, குரு, தெய்வம்னு டீச்சரை தெய்வமா நெனைக்கணும். அவங்க சொல்றதைக் கவனிக்கணும். அப்படீன்னு தினமும் சொல்லுவாங்க. அதனால எனக்கு உங்க மேலே கோபமே ஏற்பட மாட்டேங்குது.”எல்லா மாணவர்களும் பாபுவை வியப்போடு பார்த்தனர்.

முன் வரிசையில் நின்றிருந்த பாலன் ஓடிச் சென்று பாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு, “”பாபு… பாபு… உன்னைப் போல எனக்கு ஒரு நண்பன் கெடைச்சா போதும். நான் நல்லா படிப்பேன். என்னை மன்னிச்சிடு பாபு. இனிமேல் யார் மேலேயும் பொறாமைப்பட மாட்டேன். இது சத்தியம்” என்றான். பாலனை தழுவிக் கொண்டான் பாபு.

 ஒரே நாளில் 4 கோடி பாடல் எழுதிய  ஔவையார்  


ஒரே நாளில் 4 கோடி பாடல் எழுதிய  ஔவையார்

ஒரு சமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார். 

நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் "என்ன வருத்தம்?" என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, அவ்வையார் இளமுருவலுடன் " இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள் கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்" என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கிநிற்க, அவ்வையார் " ஒவ்வொரு பாடலும் ஒருகோடி பொன் மதிப்புடையது சென்று கொடுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

 புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப்புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் ஆமாம்.

அவ்வையார் இயற்றியதுதான் எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் என்பது வரலாறு. 

அந்த நான்குகோடி பாடல்கள்: 

1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்.

நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாமல் வாழ்பவர் வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். அல்லது மதிக்காதவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது எனவும் பொருள் கொள்ளலாம். 

2. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும். 

உணவை அருந்த அன்புடன் அழைக்காமல், வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம். 

3. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்.

 கோடி பொன்னைக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்.

4. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும். 

கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், சொன்ன சொல் மாறாமல் வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்.


மூன்று விதைகள்

மூன்று விதைகள்


ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.

அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவன், ” ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்” என்றான்.

” என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்” என்று கோபத்துடன் சொன்னார் அவர்.

சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். தன் மனைவியிடம்,” நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினான்.

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.

இதைப் பார்த்த அவன் மனைவி ” நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்” என்று கணவனிடம் சொன்னாள்.

”பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான் அவன்.

கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.

அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.

அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.

சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.

” இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.

அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.

அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. ” இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.

மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. ” இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது ” இதை சன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன்.

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.

என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.

மகிழ்ச்சி அடைந்த அவன், ” இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றான்.

” வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்” என்றாள் மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.

சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.

அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.

உழவன் சில நாள்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார்.

அவனிடம் வந்த அவர், ” டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்” என்று கேட்டார்.

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான்.

தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.

அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.

” பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார்.

கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது.

” மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்” என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ” ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது.

எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார்.

மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.

அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார்.

அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அவரையும் அந்த மாளிகையையும் ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது.

கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.

மூன்றாவது பூசனிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை. அதற்குள் பாம்பு, தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

 வாழ்க்கை மாற்றும் செயல்கள் 

வாழ்க்கை மாற்றும் செயல்கள்

பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி நடந்து வந்தார்.

நீதான் பை நிறைய பென்சில்கள் வைத்து கொண்டிருக்கிறாயே, நான் ஏன் உனக்கு சும்மா பணம் கொடுக்க வேண்டும், அதனால் 10-ரூபாய்க்கு சமமான பென்சில்களை எனக்கு கொடு என்று கேட்டார். அதனை கேட்டு முகம் சுழித்த பிச்சைக்காரன், பார்ப்பதற்கு பெரிய பணக்காரன் போல் இருந்து கொண்டு பிச்சை போட்ட பணத்தை திரும்ப கேட்க்கிறீர்களே என்றான். நான் ஒன்றும் பணத்தை கேட்கவில்லையே, பணத்திற்கு பதிலாக நீ வைத்திருக்கும் பென்சில்களை கொடு என்று தானே கேட்டேன் என்றார்.

சிறுது நேரம் பேசி பார்த்த பிச்சைக்காரன் முனகிக்கொண்டே தான் வைத்திருந்த பென்சில்களை அந்த பணக்காரரிடம் கொடுத்தான். பென்சில்களை வாங்கிக்கொண்ட பணக்காரரும் பையில் வைத்து புகைவண்டியில் ஏறி புறப்பட்டார்.

பிச்சைக்காரனும் வழக்கம் போல் யாசகம் கேட்க ஆரம்பித்தான்.

சில மாதங்களுக்கு பிறகு பெரிய வியாபாரிகளுக்கான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பணக்காரர், தான் சண்டை போட்டு பென்சில் வாங்கிச்சென்ற பிச்சைக்காரன் கோட் சூட் போட்டு விருந்தில் பல பெரிய வியாபாரிகளுடன் பேசிக்கொண்டிருந்ததை கண்டு ஆச்சர்யமடைந்தார்.

அவன் அருகில் சென்ற பணக்காரர் என்னப்பா… என்னை அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டார் ….

உடனே அந்த பிச்சைக்காரன், ஐயா உங்களை மறக்க முடியுமா? நான் வெகு நாட்களாக உங்களை தான் நான் நன்றி சொல்ல தேடிக்கொண்டிருதேன். என் வாழ்க்கையை மாற்றியது நீங்கள் தான், நான் இப்போது இந்த சமுதாயத்தில் மதிக்கப்படும் ஒருவனாக இருப்பதும் உங்களால் தான் என்றான்.

தலை சுற்றிப்போன பணக்காரர் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அழுக்கு துணியுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாய், இப்போது என்னை விட பெரிய பணக்காரர்களெல்லாம் உன்னிடம் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருக்கிறது, தயவு செய்து என்ன நடந்தது என்று சொல்லிவிடு என்று கேட்டார்.

அன்று என்னிடமிருந்து நீங்கள் வாங்கி சென்ற பென்சில்கள், என் மகளுக்காக நான் வாங்கி வைத்திருந்தது. இரவு நான் பிச்சை எடுத்து முடித்து, வீடு திரும்புவதற்குள் கடைகளெல்லாம் மூடிவிடும். அதனால் காலையில் வரும்போதே வாங்கி வந்து பையில் வைத்திருந்தேன். அதை தான் நீங்கள் வாங்கி சென்றீர்கள். நீங்கள் சென்றவுடன் உங்களை திட்டிக்கொண்டே வழக்கம் போல பிச்சை எடுக்க ஆரம்பித்தேன்.

இரவு வரை பிச்சை எடுத்துவிட்டு, வீடு திரும்பிய நான் நடந்தவற்றை என் மனைவியிடம் கூறி அந்த 10-ரூபாயை அவளிடம் கொடுத்து நாளை காலை நீயே கடைக்கு சென்று பென்சில் வாங்கி மகளிடம் கொடுத்துவிடு என்றேன். நான் சொன்னதைக்கேட்டு கண்ணீர் வடித்த என் மனைவி, இந்த 10- ரூபாய் தான் என் வாழ்நாளில் நான் மரியாதையுடன் சம்பாதித்த ஒரே பணம். தினமும் பிச்சை எடுத்த காசில் சாப்பிடுவதற்கே அசிங்கமாக இருக்கும், இன்று தான் என் வாழ்நாளில் என் கணவன் உழைத்து சம்பாதித்த பணத்தில் சாப்பிட போகிறேன் என்று கூறி மீண்டும் அழுதாள்.

எங்கிருந்தோ வந்த அந்த மனிதர் நீ வாழ ஒரு வழியை காண்பித்துவிட்டார், நாளை முதல் நீ பிச்சை எடுக்க கூடாது. இந்த 10-ரூபாய்க்கு மீண்டும் பென்சில் வாங்கிக்கொண்டு போய் ரயில் நிலையத்தில் விற்றுவிட்டு வா என்றாள்.

மறுநாள் சுத்தமாக குளித்துவிட்டு 10-ரூபாய்க்கு பென்சில் வாங்கிக்கொண்டு வந்து ரயில் நிலையத்தில் விற்க தொடங்கினேன். அன்று மாலைக்குள் 30- ரூபாய் லாபம் சம்பாதித்தேன். என்னுள் இருந்த வியாபாரியை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை பிச்சை எடுத்து வீணடித்துவிட்டேனே என்று மனம்நொந்துகொண்டேன். அன்று முதல் இரவு,பகல்,மழை, வெயில் எதுவும் பார்க்காமல் தினமும் தன்னம்பிக்கையுடன் வியாபாரம் செய்தேன். இன்று உங்கள் முன் இப்படி நிற்கிறேன் என்றான். உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமை பட்டிருக்கிறேன் என்றான்.

திகைத்து போன அந்த பணக்காரர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்…..

நம் வாழ்க்கையிலும் பல நேரங்களில் இதுபோல தான் நம் திறமையை வெளிகொண்டு வரவே இன்னொருவர் தேவைப்படுகிறார்….


தன்னம்பிக்கை கதைகள்



ஆபத்து காலத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு


ஆபத்து காலத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு
  

காட்டில் பலம் கொண்ட ஒரு யானை வாழ்ந்துவந்தது. அதன் பெரிய உருவம் கண்டு மற்ற விலங்குகளும் பறவைகளும் ஒதுங்கியே இருந்தன. இதனால் யானை நண்பர்கள் இன்றி, தனிமையில் தவித்தது. தன்னோடு நட்புடன் பழக ஒரு நண்பனைத் தேடியது. நாமே சென்று ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தது. வழியில் ஒரு மரத்தில் குரங்கைக் கண்டது.

" குரங்கே, நான் யாருடைய நட்பும் கிடைக்காமல் மிகவும் மன வேதனையில் உள்ளேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?" என்றது.அதை கேட்டதும் குரங்கு, 'ஹி..ஹி...' என்று சிரித்தது.

"ஏன் சிரிக்கிறாய்?

"யானையாரே, நான் மரத்துக்கு மரம் தாவுபவன். நீரோ தரையில் நடப்பவர். நாம் எப்படி நண்பர்களாக முடியும்? என்னைப் போல உங்களால் மரம் தாவ முடிந்தால் மட்டுமே நட்பு சாத்தியம்” என்று சொல்லி விட்டு ஓடியது.

அடுத்ததாக மரத்தின் மீது அமர்ந்தபடியே ‘கூக்கூ கூக்கூ' என்று குயில் கூவியதைக் கேட்டது யானை.

‘ஆஹா! என்ன இனிமையான குரல் வளம். இந்தக் குயிலிடம் நட்புகொண்டால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று நினைத்த யானை, ”குயிலே, என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?" என்று கேட்டது.

"என்னைப் போல உம்மால் இனிமையாகப் பாட முடியுமா? அப்படிப் பாடுவதாக இருந்தால் நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன்" என்றது குயில்.

யானை சோகத்துடன் திரும்பி நடந்தது. பாதையில் மயில் ஒன்று தன் தோகையை விரித்து அழகாக ஆடிக்கொண்டிருந்தது. மயிலின் ஆட்டத்தைக் கண்ட யானை, மெய் மறந்து நின்றது.

'ஆஹா! மயில் எவ்வளவு அழகாக ஆடுகிறது! இதனோடு நட்பு கொண்டால் தினமும் இதன் ஆட்டத்தைக் கண்டு ரசிக்கலாம்’ என்று நினைத்த யானை, மயிலிடம் தன் விருப்பத்தைக் கூறியது.

"யானையாரே, நீர் ஆசைப்படுவது விநோதமாக உள்ளது. என் திறமைக்கு முன்னால் நீங்கள் எல்லாம் பூஜ்யம். தள்ளிப் போங்கள்" என்று தோகையை ஆட்டிக்கொண்டே சென்றுவிட்டது.

அப்போது ஓர் எலி வந்தது. உடனே தன் கோரிக்கையை வைத்தது யானை.

"யானையாரே, உம்மோடு நட்புகொள்ள எனக்கும் ஆசைதான். ஆனால் நம் இருவருக்கும் உருவ வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமாக உள்ளது. நீங்கள் என்னைப் போல உருவத்தைச் சிறியதாக்கிக் கொண்டு வந்தால் அப்போது நட்புகொள்ளலாம்" என்றது எலி.

சட்டென்று புதரிலிருந்து வெளியே வந்தது ஒரு புலி. அதன் பிடியில் குரங்கு மாட்டிக்கொண்டு உயிருக்குப் போராடியது. அதன் வேதனைக் குரல் கேட்ட யானை, ஓடிவந்து புலியுடன் போராடியது.யானையின் பலத்தை, புலியால் சமாளிக்க முடியவில்லை. யானை புலியைத் தூக்கி வீசியது.

"என்னை விட்டு விடு. இனி நீ இருக்கும் பக்கமே வர மாட்டேன்" என்று சொல்லி விட்டுத் தலைதெறிக்க ஓடி மறைந்தது புலி. அதுவரை மறைவில் நின்று வேடிக்கை பார்த்த குரங்கு, மயில், குயில், எலி எல்லாம் வெளியில் வந்தன.

"யானையாரே, எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள்தங்களை மிகவும் இழிவாகப் பேசிவிட்டோம். இந்தப் புலியால் பலர் உயிரை இழந்துள்ளார்கள். தக்க சமயத்தில் புலியிடமிருந்து எங்களைக் காப்பாற்றியதுடன் எங்களுடைய கர்வத்தையும் அழித்துவிட்டீர்" என்று உருக்கமாகப் பேசியது குரங்கு.

"என்னையும் மன்னித்துவிடுங்கள். ஆபத்து காலத்தில் உதவுவதுதான் நல்ல நண்பனுக்கும் உண்மையான நட்புக்கும் இலக்கணம் " என்றது மயில்.

"யானையாரே, உம்மை நண்பராக அடைவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றது குயில்.

தனக்கு நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியை அவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தது யானை.


 ரா. பி. சேதுப்பிள்ளை


ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். 

உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே .

சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். 

ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.

 பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங் கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார்.

 உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்கு தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார்.

 வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

 கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.

அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது. 

சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

 மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. சேதுப்பிள்ளை ஏப்ரல் 25, 1961ல் தம் 65 -ஆம் வயதில் இறந்தார்

 பணம் சேர்ப்பது எப்படி?

பணம் சேர்ப்பது எப்படி?

பணம் சேர்ப்பது தவறல்ல. அதை எப்படி சேர்க்க வேண்டும் .

* வெறும் பகட்டின் மூலம் சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவில் குறைந்து போகும். ஆனால் உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குகிறான்.

* பொய் சொல்லித் திரட்டும் பெரும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்றே.

* செல்வம் என்றுமே நிலையானதல்ல. கிரீடங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை.

* எரிக்கும் உஷ்ணத் துடன் சூரியன் உக்கிரமாக உதயமானவுடனேயே, புல் பூண்டு மீது பட்டு அது உலர்கிறது. செடியின் பூக்கள் உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது. அது போலவே செல்வந்தனும் தன் போக்குகளினால் அழிந்து போகிறான்.

பணத்தை நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும். தன் தேவை போக மிஞ்சியதை தேவைப்படுவோருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் சேர்த்த பணத்திற்கு மரியாதை கிடைக்கும்.

 இனிமையான சொற்கள் 

இனிமையான சொற்கள்



இனிமையான சொற்கள் கனிகளை ஒதுக்கி காய்களை சாப்பிடுவதற்கு  சமம்..

தெருவில்  சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று என்று ஒரே கூச்சல்.

ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அப்போது ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான் பிறகு ஆட்டம் கலைந்தது. 

இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் அந்தப் பையனை தன் வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்தார்.

அவன் எதிரில் ஒரு தட்டு, அதில் இரண்டு மாம்பழங்கள், நான்கு மாங்காய்கள். பெரியவர் சொன்னார், தம்பி நீ நன்றாக விளையாடினாய் அதற்குப் பரிசு தான் இது எடுத்து சாப்பிடு என்றார்.

அவன் ஆவலோடு மாம்பழங்களை எடுத்து உண்டான் பின்பு அந்தப் பெரியவருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான்.

அவனைத் தடுத்தப் பெரியவர், தட்டில் மீதமிருப்பத்தையும் சாப்பிடலாமே என்றார். அவை எனக்கு வேண்டாம் அய்யா. ஏன்? அவை காய்கள். பெரியவர் காய்கள் என்றால் சாப்பிடக் கூடாதா? எனக்குப் பிடிக்காது. ஏன்? அவை புளிக்கும்.

பரவா இல்லை சாப்பிட்டு பாரேன். இல்லை அய்யா அந்த சுவையை என் உள்ளம் ஏற்காது என்றான்.

″ உன் உள்ளம் விரும்புவதை மட்டும் ஏற்கும் நீ.. அடுத்தவர் உள்ளம் விரும்பாததை, நீ விரும்புகின்றவற்றை கொடுக்கின்றாயே அது நியாயமா?

 புரியவில்லை அய்யா?

சற்றுமுன் ஒரு சிறுவனை வாயில் வந்தபடி திட்டி அழ வைத்தாயே. உன் சொற்க்களை அவனுடைய உள்ளம் உவகையுடன் ஏற்றதா? இல்லை அய்யா. அவனுக்கு துன்பம் தந்திருக்கும்.

நீ மட்டும் உன் உள்ளம் விரும்பாத காய்களை ஒதுக்குவாய் ஆனால் பிறர; உள்ளம் ஏற்க விரும்பாத சொற்களை அள்ளி வீசுவாயா? தம்பி உனக்கு கோபம் வந்தால் சுடு சொற்களை வீசவேண்டும் என்பதில்லை.

உன்னிடம் எவ்வளவோ நச்சுத் தன்மையற்ற இனிய சொற்கள் இருக்கின்றனவே அவைகளை வீசி அந்தப் பையனின் தவறை சுட்டிக் காட்டி தலை குனிய வைத்திருக்கலாம்.

அதை விட்டுவிட்டு அவன் உள்ளத்தை காயப்படுத்தி விட்டாயே. தன் தவறை உணர்ந்த அவன் தலைகுனிந்து நின்றான்.

விளக்கம்:

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும். 

 சிறுவன் சொல்ல, நிங்கள் என்ன  நினைக்கிறார்கள்

சிறுவன் சொல்ல, நிங்கள் என்ன  நினைக்கிறார்கள்

தன்னம்பிக்கை ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். 

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.

அலெசான்றோ வோல்ட்டா

அலெசான்றோ வோல்ட்டா

  • மின்துறை என்ற ஒரு துறை உண்டாவதற்கு வழிகாட்டியாக இருந்த அலெசான்றோ வோல்ட்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
  • 1775ஆம் ஆண்டு மின் ஏற்பை உருவாக்கும் எலெக்ட்ரோஃபோரஸ் (electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776ஆம் ஆண்டு மீத்தேனை கண்டுபிடித்தார். 1800ஆம் ஆண்டுகளில் முதல் மின்கலத்தை உருவாக்கினார்.
  • வோல்ட் என்னும் மின்னழுத்த அலகானது இவருடைய பங்களிப்பை பெருமை செய்யவும், நினைவுக்கூறவுமே வைக்கப்பட்டது. இதனாலேயே மின்னழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி (Voltmeter) என்று அழைக்கின்றோம்.
  •  முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவரான அலெசான்றோ வோல்ட்டா 82வது வயதில் (1827) மறைந்தார்.

கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை  ..?

கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை  ..?

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

 தோல்விக்கான 10 விதிகள்

தோல்விக்கான 10 விதிகள்



1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.

2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்

3. மேனேஜரோ/சி.இ.ஓ.வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.

4. நான் தவறே செய்யமாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.

5.தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள்

 தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.

6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.

7. வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.

8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.

9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.

10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல்படுங்கள்.

வெற்றிக்கான 10 விதிகள்

வெற்றிக்கான 10 விதிகள்


  • நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான  மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.
  • நீங்கள் செய்வதை விரும்புங்கள்.
  • நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும்.
  • நீங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள்.
  • ஒவ்வொரு விழித்திருக்கும் மணி நேரமும் கடுமையாக உழையுங்கள்.
  • உங்கள் முக்கிய பணியின் மீது கவனம் செலுத்துங்கள்.
  • தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக  எதையும் படைக்க இயலாது.
  • உங்களுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள்.
  • வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.





தன்னம்பிக்கை கதைகள்



 மூட்டையில் கல்

பணமூட்டை


முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநூறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.


மேலும் கதைகள்



கிழ ஆந்தையின் அறிவுரை 

இரவு நேரம். தெருவோரமாக நின்ற மின்கம்பத்தில் ஆந்தைகள் எல்லாம் கூட்டமாகக் கூடின. அந்த ஆந்தைகளில் பிரிதிவாதன் என்ற ஒரு ஆந்தையுமிருந்தது.

அந்த ஆந்தை மற்ற ஆந்தைகளைப் பார்த்து, ""நண்பர்களே! நாம் எல்லாரும் கூட்டமாகக் கூடி இருக்கிற இந்த இரவுப் பொழுதில், அழகான பாடல் ஒன்றினை நாம் எல்லாருமாகச் சேர்ந்து பாடலாமே!'' என்றது.

அதனைக் கேட்ட ஒரு கிழ ஆந்தை, ""பிரதிவாதா! உன் எண்ணத்தை உடனடியாக மாற்றிக்கொள். இந்த இரவு நேரத்தில் நாம் எல்லாரும் சேர்ந்து சப்தமிட்டால், இந்தத் தெருவாசிகளின் தூக்கம் கலைந்துவிடும். எல்லாரும் உடனேயே படுக்கையை விட்டு எழுந்து தெருவிற்கு வந்துவிடுவர்.

""நம்மைப் பார்த்தால் எரிச்சலில் கண்டதைக் கையிலெடுத்து நம்மைத் தாக்கினாலும் தாக்கி விடுவர். அதனால் நாம் சிறிதுநேரம் அமைதியாக இந்த மின்கம்பத்தில் இருந்துவிட்டு அதன் பின்னர் நம் இருப்பிடத்திற்கு செல்லலாம்!'' என்று அறிவுரை கூறியது.

எல்லா ஆந்தைகளும் கிழ ஆந்தையின் அறிவுரையை ஏற்றுக் கொண்டன. ஆனால், பிரதிவாதன் ஆந்தை மட்டும் கிழ ஆந்தையைக் கோபத்துடன் பார்த்தது. ""கிழவா! உனக்கு வயதாகிவிட்டதால் அறிவும் மழுங்கி விட்டது. அதனால்தான் எங்களின் மனநிலை தெரியாமல் எங்களை எல்லாம் உன்னைப்போன்று அஞ்சி ஓடச் சொல்கிறாய். மற்றவர்கள் வேண்டுமானால் உன் பேச்சைக் கேட்டு உன்பின்னால் வரட்டும். ஆனால், நான் என்றுமே உன் பின்னால் வரமாட்டேன்!'' என்று பிடிவாதமாக மின்கம்பத்தில் அமர்ந்து கொண்டது.

கிழ ஆந்தையின் பேச்சை மதித்த மற்ற ஆந்தைகள் எல்லாம் மின்கம்பத்தைவிட்டு சென்றுவிட்டன. பிரதிவாதன் மட்டும் மின்கம்பத்தில் அமர்ந்த படி பலமாக சப்தம் கேட்கும்படியாக "ஆ... ஆ... ஆ...' என்று கத்தியது.

வீட்டினுள் தூக்கத்தில் இருந்த தெருவாசிகளுக்கு, ஆந்தையின் சப்தம் சங்கு ஊதுவது போன்ற ஒலியை ஏற்படுத்தவே, அவர்கள் அனைவரும் படுக்கையைவிட்டு எழுந்து கதவைத் திறந்து வேகமாக வெளியே வந்து பார்த்தனர்.

அங்கே பிரதிவாதன் மின்கம்பத்தில் அமர்ந்தபடி, "ஆ... ஆ... ஆ...' என்று அலறிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட கூட்டத்திலிருந்த ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டது.

""ஆந்தையே! இரவு நேரம் என் வீட்டின் முன்னே வந்து அலறி என் தூக்கத்தை கெடுத்துவிட்டாயே... இதோ உன்னை என்ன செய்கிறேன் பார்!'' என்று கூறியபடி தன் நடை வாசலின் அருகே கிடந்த கல்லை எடுத்தார்.

மிகவும் நேர்த்தியாக குறி பார்த்து பிரதிவாதன் மீது எறிந்தார். அவர் எறிந்த கல் குறி தவறாமல் பிரதிவாதன் மீது நச்சென்று மோதியது.

அடுத்த நிமிடம் பிரதிவாதன் சுருண்டு தரையில் பொத்தென்று விழுந்தது. அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. அதனைக் கண்ட அந்தத் தெருவாசிகள் எல்லாம் ஓடிவந்து கற்களாலும், கம்பாலும் பிரதிவாதனைக் கண் மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர்.

"கிழ ஆந்தையின் அறிவுரையைக் கேட்டு நடந்திருந்தால், இப்போது நமக்கு இப்படி ஒரு ஆபத்து நேர்ந்திருக்காதே!' என்று மிகவும் கவலைப்பட்டது. பிரதிவாதனின் அழுகுரலைக் கேட்டு மனம் பொறுக்காத கிழ ஆந்தை, தூரத்திலிருந்த கம்பத்தில் உட்கார்ந்து கத்தத் தொடங்கியது. எல்லாரும் அதை அடிக்க ஓடினர். அந்த நேரத்தை பயன்படுத்திக் பிரதிவாதன் தப்பிப் பறந்தது. பறந்து கொண்டே அது கிழ ஆந்தைக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

 ஏன் சோகமாக இருக்கிறீர்கள் நஷ்டம்

நஷ்டம்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு இவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றால் அவர்.

"50 கோடி ரூபாய்" என்றார் இவர்.

"அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் "ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்

இவர் "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.

அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

நஷ்டம் கஷ்டம் உங்களை திரும்பிபார்க்க  வைக்கும்

உண்மை

உண்மை

 ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு நல்ல நீதிக் கதைகளைக் கூறி வளர்த்து வந்தார். அந்தத் தாய், கஷ்டப்பட்டாலும் தனது மகன் நல்லவனாக பிற்காலத்தில் வாழ்ந்து சிறப்புப் பெற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள்.

உண்மைஅதனால் அவனுக்குத் தீய பழக்கங்கள், தீய நண்பர்கள் சேர்ந்துவிடாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

அவன் வாலிபனான். வேலைக்குச் சென்றால்தான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

வேறு ஒரு ஊருக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. தாயைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற வருத்தம் இருந்தாலும், நன்கு வேலை பார்த்துத் தாயைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஊரை விட்டுக் கிளம்பினான்.

அவன் ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தாய் மிகுந்த அக்கறையுடன் செய்து முடித்தாள். அவன் கிளம்பும் நாள் வந்த போது தாய் அவனிடம் -

“மகனே! உனக்கு என்ன நேர்ந்தாலும் உண்மை பேசுவதை மட்டும் விட்டுவிடாதே! எங்கும் எப்போதும் யாரிடத்திலும் உண்மையை மட்டுமே நீ பேச வேண்டும். இதை மட்டும் மறக்காதே!’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

அக்காலத்தில் எங்கு சென்றாலும் நடைப் பயணம்தான். வாகன வசதிகள் கிடையாது. ஆகவே, அந்த வாலிபன் ஒரு கூட்டாத்தாருடன் சேர்ந்து தனது பயணத்தைத் துவக்கினான்.

செல்லும் வழியில் சில கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தை வழிமறித்தனர். கூட்டத்தினரிடம் இருந்த பொருள்களையெல்லாம் பறித்தனர்.

அந்த வாலிபனிடம் ஒரு கொள்ளையன் வந்து, “உன்னிடம் என்ன உள்ளது?’ என்று கேட்டான்.

அப்போது, அந்த வாலிபன் தனது தாய் சொன்னது போல, மறைக்காமல் உண்மையைக் கூறினான் -

“என்னிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே உள்ளன…’

கொள்ளையர்கள் அவனைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஆச்சரியமைடந்தனர். அவன் சொன்னது போலவே அவனிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே இருந்தன.

கொள்ளையர்களின் தலைவன் அசந்து போனான்.

அந்த சிறிய வாலிபனிடம் இருந்த உண்மை பேசும் குணம் கொள்ளையனின் மனதைக் கரைத்தது.

ஆபத்திலும் இவ்வளவு நேர்மை, உண்மை ஒரு மனிதனிடம் காணப்பட்டதைக் கண்டு மனம் மாறினான்.

அன்றே தனது திருட்டுத் தொழிலை விட்டுவிட முடிவெடுத்தான். அவர்களிடமிருந்து திருடிய பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்ல மனிதனாக மாறி உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பிச் சென்றான், 

 உன்னுடன் இருப்பது யார்

உன்னுடன் இருப்பது யார்

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், 

“சார் பின்னாடி போய் உட்காருங்க. 

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, 

விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். 

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! 

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

 *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

 *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

 *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*, 

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

 *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!* 

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*. 

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

 *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!* 

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?* 

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா.*

சிறுவன் உபதேசம்

சிறுவன் உபதேசம்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அரசனாம். அவனுக்குத் தான் அரசனாகவும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் ஆன்ம இலாபம் தரும் ஞான வினையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தணியாத ஆவல். உடனே மந்திரியைக் கூப்பிட்டு, “நம் நட்டில் உள்ள குருமார்கள் இங்கு அரண்மனைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஞான வித்தைகளை எனக்குப் பயமின்றி உபதேசிக்கலாம்; அப்படி செய்யும் உபதேசங்களில் என் மனதைக் கவரும் உபதேசம் எதுவோ அதற்கு, உபதேசித்தவர் கேட்பதைப் பரிசிலாகத் தருவோம்” என பறையறிவிக்கச் சொன்னான்.

வாயிலில் ஒரு ஆராய்ச்சி மணியையும் கட்டினான். வந்தவர்கள் மணியை அடிக்க, மந்திரி அவர்களை அழைத்துப் போய், நீராட, உண்ண, உடுக்க எல்லா வசதிகளையும் செய்துகொடுத்து அரசவைக்கு இட்டுச் செல்வார்.

இதைக் கேள்வியுற்ற குருமார்களும், அறிஞர்களும் அரசவை சென்று தங்களுக்குத் தெரிந்தவற்றை உபதேசிக்க மன்னனுக்குத் திருப்தி இல்லை. அவர்களையெல்லாம் விருந்தினர் மாளிகையிலேயே சிறை வைத்துவிட்டான்.

அவ்வூரில், ஒரு சிற்றூரில் அட்டகோணலுடன் விகாரமான சிறுவன் இருந்தான். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவனை உன் தந்தை யாரெனக்கேலிபேச, வீட்டுக்கு வந்தவன் அன்னையிடம், “என் தந்தை எங்கே?” எனக் கேட்டான். “அப்பா மகனே! உன் தந்தையை அரசன் சிறை வைத்துள்ளான்” என முழுக் கதையையும் கூற, “அம்மா! நான் போய் அப்பாவை மீட்டு வருகிறேன்” எனத் தாய் தடுத்ததையும் மீறிக் கிளம்பி அரசவை வந்தான். அவன் உருவையும், வயதையும் கண்டு எல்லோரும் எள்ளி நகையாடினார்கள்.

எல்லோரும் நகைத்ததைக் கண்ட சிறுவன் அரசனை நோக்கி, “ஏன் சிரித்தீர்கள்? என் உருவைக் கண்டா? அல்லது சிறுவனா நமக்கு உபதேசம் செய்யப் போகிறான்? என்று என் வயதைக் கண்டா?” என்று கேட்டான். ஒருவரும் பதில் பேசவில்லை.

பின்னரும் அரசனை நோக்கி,”அரசே! ஏன் நகைத்தீர்? குயவனைப் பார்த்து நகைத்தீரா? அல்லது பாண்டத்தைப் பார்த்து நகைத்தீரா? என வினவினான்.அரசனுக்குக் குயவன் என்றால் யார்? பாண்டம் என்றால் எது? எனப் புரியவில்லை. சிந்தை மருண்ட மன்னனோ, உடனே சிறுவனை நோக்கி, “எனக்கு ஞான உபதேசம் செய்வித்து அருளல் வேண்டும்; தங்களின் சித்தம் என்னவோ அதுபோல் நான் நடக்கிறேன்” எனக் கேட்டுக் கொண்டான்.

அதற்கு, சிறியவன், “அரசே! நீ உனக்குச் சொந்தமாக எண்ணியிருப்பதை எனக்குத் தானம் செய்; பின்னர் உபதேசிக்கிறேன்” என்றான்.

அரசன் : கழுத்தில் கிடந்த விலையுயர்ந்த மணிமாலையயும் என் ஆபரணங்களையும் தந்துவிட்டேன் என்றான்.

சிறுவன் : “இவையெல்லாம் உன் பிள்ளைகளுக்குறியது. உனக்கல்ல. எனவே வேண்டாம் .”

அரசன் – “இந்த நாட்டையே தருகிறேன்.”

சிறுவன் – “இந்த நாடு மக்களுக்குச் சொந்தம். இதுவும்வேண்டாம். உனக்கு உரிய, சொந்தமான பொருளை உணர்ந்து கொடு.”

அரசன் – “என் உடல் எனக்குத்தன் சொந்தம். அதைத் தருகிறேன்.”

சிறுவன் – “உன் உயிர் பிரிந்ததும், அது மண்ணுக்குச் சொந்தம். நீ தூங்கும்போது, உன் உடலின்மேல் ஒரு பாம்பு ஊர்ந்தாலும் உனக்குத் தெரிவதில்லையே? அப்படி இருக்க உனக்கு அது எப்படிச் சொந்தம்?”

இப்படியே ஒவ்வொன்றையும் சிறுவன் மறுத்துச் சொல்ல அரசனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள். தந்து விடுகிறேன் என்றான்.

“உன் மனம்தான் உனக்குச் சொந்தம். எல்லோர் முன்னிலையிலும் தானம் கொடு” என்றான் சிறுவன்.

அப்படியே தான சம்பிரதாயங்கள் முடிவடைய சிறுவன் வெளியில் புறப்பட்டான். அரசன் சிறுவனை நோக்கி, “குருவே! உபதேசம் செய்யாமல் செல்லுகிறீர்களே!” என வினவ அச் சிறுவன்,”அரசே! உன் மனதை எனக்குத் தானம் செய்தது உண்மையில்லை. இன்னும் உன் மனம் உன்னிடமே இருக்கிறது.எப்படி நான் உபதேசிக்காமல் செல்வதை நீ எப்படி உணர்ந்து கேட்டாய்?” என்றான்.

அரசன் திடுக்கிட்டு வணங்கி, “குருவே! உங்களின் ஆணைப்படியே நடக்கிறேன். இனி என் வயம் ஏதுமில்லை” என்றான்.

“சிறைப்பிடித்தவர்களை விடுதலை செய்க” என்றான் சிறுவன். அப்படியே நடந்தது. பின்னர் சிறுவன் உபதேசித்தான்.

என்ன உபதேசித்திருப்பான்?

“அரசே உருக்கண்டு எள்ளாமை வேண்டும். உன் உடலில் உயிர் உள்ளவரை உனக்கு உன் மனம் மட்டுமே சொந்தம். அதுவும் உணர்வு இருக்கும்போது மட்டுமே. தூங்கும்போது மனம் உனக்குச் சொந்தமல்ல. ஆகவே, உணர்வால் மனத்தை அடக்கு. எப்பொழுதும் நீ உன் உணர்விலேயே நில். அது உனக்கு இறைவனை அடைய வழிகாட்டும்.”

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.