5 ரூபாயில் 180 கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: கல்லூரி மாணவர்கள் சாதனை
வெறும் 5 ரூபாய்க்கு சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை பயணிக்கக் கூடிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
தனலட்சுமி சீனிவாசன் எஞ்சினியரிங் கல்லூரியில் பயின்று வரும் சி.பிரடெரிக், கே.கோபிநாத், டி.மனோஜ் பிரபாகர், எஸ்.குரு மற்றும் கணேஷ் பிரியன் ஆகிய மாணவர்கள் இணைந்து இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளனர்.
சிறிது நேரம் சார்ஜ் செய்து கொண்டு ஸ்கூட்டரை கிளப்பினால் போதும். இரண்டு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரிகளில் மின்சாரம் சேகரிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் மற்றொரு மோட்டார் பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி ஸ்கூட்டரை இயக்குகிறது.
தற்போது சாதாரண எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒரு முறை அதாவது 8 மணி நேரம் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60 கிமீ வரை செல்ல முடியும். ஆனால், இந்த ஸ்கூட்டருக்கு ஒரு முறை சார்ஜ் செய்யும்போது ஒரு யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி 180 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதற்கு 5 ரூபாய் மட்டுமே செலவாகும் என்கின்றனர் மாணவர்கள்.
பெட்ரோல், டீசல் எரிபொருளால் காற்று மாசுபாடு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மாணவர் பிரடெரிக் சமீபத்தில் பலர் முன்னிலையில் ஓட்டிக் காட்டினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்காலத்துக்கு தேவையான அடிப்படை தொழில்நுட்பமாக அமையும் என கருத்து தெரிவித்தனர்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் சார்லஸ், தாளாளர் சீனிவாசன் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்பத்தை எஞ்சினியரிங் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி என்ற பன்னாட்டு ஆய்வு இதழ் ஏற்றுக் கொண்டுள்ளதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.