short stories லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 பாம்புக்கு ஓர் யோசனை


ஏரிக்கரையோரத்தில் தவளை ஒன்று வசித்து வந்தது. அந்தத் தவளையோடு பாம்பு மிகவும் நட்பாக இருந்தது.

ஒரு நாள் பாம்பு எங்கெல்லாமோ இரைதேடி அலைந்தது. பாம்புக்கு எந்த இரையும் கிடைக்க வில்லை. மிகவும் உடல் சோர்ந்து போய் ஏரிக்கரைப் பக்கம் வந்தது.

அந்தநேரம் ஏரியின் உள்ளேயிருந்து வெளிவந்த தவளை பாம்பைப் பார்த்து “நண்பனே, நீ ஏன் இன்று சோர்வோடு காணப்படுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?” என்று அன்போடு கேட்டது.

தவளையைப் பார்த்த பாம்புக்கு திடீரென்று ஓர் யோசனை தோன்றியது. எனக்கு இப்போது அதிகப் பசியாக இருக்கின்றது.

இந்தத் தவளையைப் பிடித்து என் இரையாக்கிக் கொள்ளலாமே என்று நினைத்த பாம்பு, திடீரென தன் வாயைப் பிளந்து கொண்டு தவளையைப் பிடிக்கத் தாவியது.

அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்ட தவளை “நண்பனே! இது என்ன விளையாட்டு, என்னை ஏன் பிடித்து விழுங்க நினைக்கின்றாய்?” என்று ஆத்திரத்துடன் கேட்டது.

அதனைக் கேட்ட பாம்பு “தவளை நண்பா! என்னை மன்னித்துவிடு! உன்னைப் பார்க்கையில் எனக்கு இரக்கமே ஏற்படுகிறது. வெகுநேரமாக இரை எதுவும் கிடைக்காமல் நான் பசியோடு வாடிக் கொண்டிருக்கின்றேன்.

அதனால் தான் உன்னைப் பிடித்து உண்ணப்போகிறேன்” என்றது. அதனைக்கேட்ட தவளைக்கு அதிர்ச்சியே ஏற்பட்டது. பாம்பின் நம்பிக்கை துரோகத்தை நினைத்து மனம் வெம்பியது.

இந்த ஆபத்திலிருந்து எப்படியாவது நாம் தப்பிக்க வேண்டுமென சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது. உடனே பாம்பைப் பார்த்து “நண்பா  நீ என்னை மட்டும் சாப்பிட்டால் உன் பசி அடங்கிவிடும் என்று நினைக்கின்றாயா? நிச்சயமாக உனக்குப் பசி அடங்காது.அதனால் ஏரிக்குள் சென்று என் நண்பர்கள் இரண்டு பேரை அழைத்து வருகிறேன். அவர்களையும் சேர்த்து நீ சாப்பிடு” என்று கூறியது . பாம்பு மனம் மகிழ்ந்தது.

“நண்பன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்! உடனேயே உன் நண்பர்களை அழைத்துவா! எனக்கு இப்போது இன்னும் அதிகமாகப் பசியெடுக்கிறது. நான் கரையிலேயே காத்துக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறியது.

தவளையோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஏரிக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கி எங்கோ சென்றுவிட்டது. இனிமேல் இந்தக் கொடிய நண்பனிடம் பழகக்கூடாது என்று முடிவெடுத்தது.

நீதி:

பாம்பைப் போன்று விஷத்தன்மை உள்ளவர்களிடம் பழகக்கூடாது.

பஞ்சதந்திரம் 

பஞ்சதந்திரம் என்றால்

பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். 

அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவம் விளங்கினான். ஆனால் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும், மூடர்களாகவும் இருந்தார்கள். 

நமக்குப் பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன என்ற கவலை அரசனைப் பிடித்துக் கொண்டது. இதற்கு என்ன செய்வது? பலமுறை யோசித்த அரசன் அரச சபையைக் கூட்டி பல சான்றோர்களையும் வரவழைத்தான்.

 அவர்களிடம் மன்னன் தனது கவலையைச் சொன்னான். வந்திருந்த சான்றோர்களில் நீதிசாஸ்திரம் மட்டுமின்றி சகல சாச்த்திரத்திலும் வல்லவராக இருந்த சோமசன்மா என்பவர் எழுந்தார். அரசே! கவலைப் படாதீர்கள்.

 நான் இவர்களுக்குத் தகுந்தமாதிரி கல்வியைப் புகட்டுகிறேன் என்றான். சோமசன்மா அரச குமாரர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முறைப்படி நீதி சாஸ்திரத்தை பஞ்சதந்திரக் கதையாகக் கூறத் தொடங்கினார். 

பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள். அவை மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரித்துவம் என்பனவாகும். 

அப்படிஎன்றால்? சிநேகத்தைக் கெடுத்துப் பகை உண்டாக்கல். சுகிர் லாபமானது தங்களுக்குச் சமமானவரோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல். சந்திவிக்கிரமாவது பகைவரை அடுத்துக் கெடுத்தல், அர்த்த நாசமாவது தன் கையில் கிடைத்தப் பொருளை அழித்தல், அசம்பிறேட்சிய காரித்துவமாவது ஒரு காரியத்தைத் தீர விசாரிக்காமல் செய்தல் என்று அர்த்தம். 

இக்கதைகளைக் கேட்டால் இவ்வுலக நடைமுறைகளையும் அதில் உண்டாகும் பிரச்சனைகளைச் சமாளிக்கிற விதங்களையும் தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி அரச குமாரர்களுக்கு நீதிக்கதைகளை போதிக்கத் துவங்கினார். அரசகுமாரர்களும் ஆர்வத்துடன் அந்தக் கதைகளைக் கேட்டு அப்படியே நல்ல போதனைகளைக் கதைவடிவில் கற்கத்துவங்கினார்கள்.

 பஞ்சதந்திரக் கதைகள். இப்படித்தான் உருவாயின. அவற்றில் ஒவ்வொன்றாக இனி வரும் நாட்களில் பார்ப்போம். சரியா! நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.


உதாரணம்


மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*

இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 

 This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking

அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்.._..

இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்  "Being Professional & Focus only on what you are trained

கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று .

மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.

இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!

This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! "

கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.

வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "

 This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .

இதுதான் சுயநலமான உலகம்!

This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.

மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி.

கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் .

எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை .

கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.

ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது

இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்

True. Knowledge is nowadays very important than money in this world.

 பழங்கள் மாநாடு

பழங்கள் மாநாடு


உலகில் இருக்கக் கூடிய  பழங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின.

எந்தப் பழம் அதிகச் சுவையுடையது; சிறப்புடையது? என்ற கேள்வி

ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் எல்லாம் ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி.ஒன்றுக் கொன்று அடித்து கொண்டன.

ஆனால், திராட்சைப் பழம்  எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது.

இதனால் மற்ற பழங்கள் திராட்சை பழத்தை பார்த்து இழிவாக சிரித்தன.

பலாப்பழம் திராட்சைப் பழத்தைப் பார்த்து அன்புடன் நீ ஏன் மவுனமாக நிற்கிறாய்? எனக்குத் தெரியும் .

அதை நீயே உன் வாயால் சொல்ல வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களும் உன் தகுதி பற்றி அறிந்து கொள்ளும்,'' என்று கூறியது.

நீங்கள் எல்லாருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். 

ஆனால், நாங்கள், ஒரு கூட்டமாக, கொத்தாக வள்கிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு மற்றவர்களுக்கு இடம் தருகிறோம். விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும் போதும் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.

வாழ்விலும், வளர்ச்சியிலும், மரணத்திலும் நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம்.ஆனால் நீங்கள் யார் பெரியவர்கள் என்று அடித்து கொண்டு  இருக்குறீர்கள்? என்றது

மற்ற பழங்கள் வெட்கத்தால் தலைகுனிந்தன.

 இனிமையான சொற்கள் 

இனிமையான சொற்கள்



இனிமையான சொற்கள் கனிகளை ஒதுக்கி காய்களை சாப்பிடுவதற்கு  சமம்..

தெருவில்  சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று என்று ஒரே கூச்சல்.

ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அப்போது ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான் பிறகு ஆட்டம் கலைந்தது. 

இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் அந்தப் பையனை தன் வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்தார்.

அவன் எதிரில் ஒரு தட்டு, அதில் இரண்டு மாம்பழங்கள், நான்கு மாங்காய்கள். பெரியவர் சொன்னார், தம்பி நீ நன்றாக விளையாடினாய் அதற்குப் பரிசு தான் இது எடுத்து சாப்பிடு என்றார்.

அவன் ஆவலோடு மாம்பழங்களை எடுத்து உண்டான் பின்பு அந்தப் பெரியவருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான்.

அவனைத் தடுத்தப் பெரியவர், தட்டில் மீதமிருப்பத்தையும் சாப்பிடலாமே என்றார். அவை எனக்கு வேண்டாம் அய்யா. ஏன்? அவை காய்கள். பெரியவர் காய்கள் என்றால் சாப்பிடக் கூடாதா? எனக்குப் பிடிக்காது. ஏன்? அவை புளிக்கும்.

பரவா இல்லை சாப்பிட்டு பாரேன். இல்லை அய்யா அந்த சுவையை என் உள்ளம் ஏற்காது என்றான்.

″ உன் உள்ளம் விரும்புவதை மட்டும் ஏற்கும் நீ.. அடுத்தவர் உள்ளம் விரும்பாததை, நீ விரும்புகின்றவற்றை கொடுக்கின்றாயே அது நியாயமா?

 புரியவில்லை அய்யா?

சற்றுமுன் ஒரு சிறுவனை வாயில் வந்தபடி திட்டி அழ வைத்தாயே. உன் சொற்க்களை அவனுடைய உள்ளம் உவகையுடன் ஏற்றதா? இல்லை அய்யா. அவனுக்கு துன்பம் தந்திருக்கும்.

நீ மட்டும் உன் உள்ளம் விரும்பாத காய்களை ஒதுக்குவாய் ஆனால் பிறர; உள்ளம் ஏற்க விரும்பாத சொற்களை அள்ளி வீசுவாயா? தம்பி உனக்கு கோபம் வந்தால் சுடு சொற்களை வீசவேண்டும் என்பதில்லை.

உன்னிடம் எவ்வளவோ நச்சுத் தன்மையற்ற இனிய சொற்கள் இருக்கின்றனவே அவைகளை வீசி அந்தப் பையனின் தவறை சுட்டிக் காட்டி தலை குனிய வைத்திருக்கலாம்.

அதை விட்டுவிட்டு அவன் உள்ளத்தை காயப்படுத்தி விட்டாயே. தன் தவறை உணர்ந்த அவன் தலைகுனிந்து நின்றான்.

விளக்கம்:

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும். 

 மறக்க முடியாத  உதவி

மறக்க முடியாத  உதவி

 இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர்.

வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.

கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.

அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.

தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.

இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.

உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே.

பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.

அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?

என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.

அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர்.

வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில்,

"இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.

ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.

அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.

திடீரென நண்பனின் நினைவு வந்தது.

இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.

குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும்.

நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.

உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.

பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர்.

ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,

"என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்"

என்று எழுதி வைத்தான்.

உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய்.

உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய்.

அது ஏன்? என்று கேட்டான்.

நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை.

அதனால் அதை மணலில் எழுதினேன்.

ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது.

ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.

ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும்.



 குறுக்கு வழி

குறுக்கு வழி

சாதாரண விஷயத்துக்குக் கூட குறுக்கு வழியை கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நாளை எதையுமே நேர் வழியில் செய்ய மனசு வராது. அது கடைசியில் நமக்கு கெட்டப் பெயரையும், அவப் பெயரையும்தானே தேடித் தரும். எப்போதும் நேர் வழியில் செல்லுங்கள்.. அது உங்களது கெளரவத்தை உயர்த்தும்,மனசுக்கு நிம்மதி தரும். பெருமையுடன் நடக்க சக்தி தரும்.


 மூட்டையில் கல்

பணமூட்டை


முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநூறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.


மேலும் கதைகள்



கிழ ஆந்தையின் அறிவுரை 

இரவு நேரம். தெருவோரமாக நின்ற மின்கம்பத்தில் ஆந்தைகள் எல்லாம் கூட்டமாகக் கூடின. அந்த ஆந்தைகளில் பிரிதிவாதன் என்ற ஒரு ஆந்தையுமிருந்தது.

அந்த ஆந்தை மற்ற ஆந்தைகளைப் பார்த்து, ""நண்பர்களே! நாம் எல்லாரும் கூட்டமாகக் கூடி இருக்கிற இந்த இரவுப் பொழுதில், அழகான பாடல் ஒன்றினை நாம் எல்லாருமாகச் சேர்ந்து பாடலாமே!'' என்றது.

அதனைக் கேட்ட ஒரு கிழ ஆந்தை, ""பிரதிவாதா! உன் எண்ணத்தை உடனடியாக மாற்றிக்கொள். இந்த இரவு நேரத்தில் நாம் எல்லாரும் சேர்ந்து சப்தமிட்டால், இந்தத் தெருவாசிகளின் தூக்கம் கலைந்துவிடும். எல்லாரும் உடனேயே படுக்கையை விட்டு எழுந்து தெருவிற்கு வந்துவிடுவர்.

""நம்மைப் பார்த்தால் எரிச்சலில் கண்டதைக் கையிலெடுத்து நம்மைத் தாக்கினாலும் தாக்கி விடுவர். அதனால் நாம் சிறிதுநேரம் அமைதியாக இந்த மின்கம்பத்தில் இருந்துவிட்டு அதன் பின்னர் நம் இருப்பிடத்திற்கு செல்லலாம்!'' என்று அறிவுரை கூறியது.

எல்லா ஆந்தைகளும் கிழ ஆந்தையின் அறிவுரையை ஏற்றுக் கொண்டன. ஆனால், பிரதிவாதன் ஆந்தை மட்டும் கிழ ஆந்தையைக் கோபத்துடன் பார்த்தது. ""கிழவா! உனக்கு வயதாகிவிட்டதால் அறிவும் மழுங்கி விட்டது. அதனால்தான் எங்களின் மனநிலை தெரியாமல் எங்களை எல்லாம் உன்னைப்போன்று அஞ்சி ஓடச் சொல்கிறாய். மற்றவர்கள் வேண்டுமானால் உன் பேச்சைக் கேட்டு உன்பின்னால் வரட்டும். ஆனால், நான் என்றுமே உன் பின்னால் வரமாட்டேன்!'' என்று பிடிவாதமாக மின்கம்பத்தில் அமர்ந்து கொண்டது.

கிழ ஆந்தையின் பேச்சை மதித்த மற்ற ஆந்தைகள் எல்லாம் மின்கம்பத்தைவிட்டு சென்றுவிட்டன. பிரதிவாதன் மட்டும் மின்கம்பத்தில் அமர்ந்த படி பலமாக சப்தம் கேட்கும்படியாக "ஆ... ஆ... ஆ...' என்று கத்தியது.

வீட்டினுள் தூக்கத்தில் இருந்த தெருவாசிகளுக்கு, ஆந்தையின் சப்தம் சங்கு ஊதுவது போன்ற ஒலியை ஏற்படுத்தவே, அவர்கள் அனைவரும் படுக்கையைவிட்டு எழுந்து கதவைத் திறந்து வேகமாக வெளியே வந்து பார்த்தனர்.

அங்கே பிரதிவாதன் மின்கம்பத்தில் அமர்ந்தபடி, "ஆ... ஆ... ஆ...' என்று அலறிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட கூட்டத்திலிருந்த ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டது.

""ஆந்தையே! இரவு நேரம் என் வீட்டின் முன்னே வந்து அலறி என் தூக்கத்தை கெடுத்துவிட்டாயே... இதோ உன்னை என்ன செய்கிறேன் பார்!'' என்று கூறியபடி தன் நடை வாசலின் அருகே கிடந்த கல்லை எடுத்தார்.

மிகவும் நேர்த்தியாக குறி பார்த்து பிரதிவாதன் மீது எறிந்தார். அவர் எறிந்த கல் குறி தவறாமல் பிரதிவாதன் மீது நச்சென்று மோதியது.

அடுத்த நிமிடம் பிரதிவாதன் சுருண்டு தரையில் பொத்தென்று விழுந்தது. அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. அதனைக் கண்ட அந்தத் தெருவாசிகள் எல்லாம் ஓடிவந்து கற்களாலும், கம்பாலும் பிரதிவாதனைக் கண் மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர்.

"கிழ ஆந்தையின் அறிவுரையைக் கேட்டு நடந்திருந்தால், இப்போது நமக்கு இப்படி ஒரு ஆபத்து நேர்ந்திருக்காதே!' என்று மிகவும் கவலைப்பட்டது. பிரதிவாதனின் அழுகுரலைக் கேட்டு மனம் பொறுக்காத கிழ ஆந்தை, தூரத்திலிருந்த கம்பத்தில் உட்கார்ந்து கத்தத் தொடங்கியது. எல்லாரும் அதை அடிக்க ஓடினர். அந்த நேரத்தை பயன்படுத்திக் பிரதிவாதன் தப்பிப் பறந்தது. பறந்து கொண்டே அது கிழ ஆந்தைக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

 ஏன் சோகமாக இருக்கிறீர்கள் நஷ்டம்

நஷ்டம்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு இவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றால் அவர்.

"50 கோடி ரூபாய்" என்றார் இவர்.

"அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் "ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்

இவர் "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.

அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

நஷ்டம் கஷ்டம் உங்களை திரும்பிபார்க்க  வைக்கும்

உண்மை

உண்மை

 ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு நல்ல நீதிக் கதைகளைக் கூறி வளர்த்து வந்தார். அந்தத் தாய், கஷ்டப்பட்டாலும் தனது மகன் நல்லவனாக பிற்காலத்தில் வாழ்ந்து சிறப்புப் பெற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள்.

உண்மைஅதனால் அவனுக்குத் தீய பழக்கங்கள், தீய நண்பர்கள் சேர்ந்துவிடாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

அவன் வாலிபனான். வேலைக்குச் சென்றால்தான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

வேறு ஒரு ஊருக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. தாயைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற வருத்தம் இருந்தாலும், நன்கு வேலை பார்த்துத் தாயைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஊரை விட்டுக் கிளம்பினான்.

அவன் ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தாய் மிகுந்த அக்கறையுடன் செய்து முடித்தாள். அவன் கிளம்பும் நாள் வந்த போது தாய் அவனிடம் -

“மகனே! உனக்கு என்ன நேர்ந்தாலும் உண்மை பேசுவதை மட்டும் விட்டுவிடாதே! எங்கும் எப்போதும் யாரிடத்திலும் உண்மையை மட்டுமே நீ பேச வேண்டும். இதை மட்டும் மறக்காதே!’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

அக்காலத்தில் எங்கு சென்றாலும் நடைப் பயணம்தான். வாகன வசதிகள் கிடையாது. ஆகவே, அந்த வாலிபன் ஒரு கூட்டாத்தாருடன் சேர்ந்து தனது பயணத்தைத் துவக்கினான்.

செல்லும் வழியில் சில கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தை வழிமறித்தனர். கூட்டத்தினரிடம் இருந்த பொருள்களையெல்லாம் பறித்தனர்.

அந்த வாலிபனிடம் ஒரு கொள்ளையன் வந்து, “உன்னிடம் என்ன உள்ளது?’ என்று கேட்டான்.

அப்போது, அந்த வாலிபன் தனது தாய் சொன்னது போல, மறைக்காமல் உண்மையைக் கூறினான் -

“என்னிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே உள்ளன…’

கொள்ளையர்கள் அவனைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஆச்சரியமைடந்தனர். அவன் சொன்னது போலவே அவனிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே இருந்தன.

கொள்ளையர்களின் தலைவன் அசந்து போனான்.

அந்த சிறிய வாலிபனிடம் இருந்த உண்மை பேசும் குணம் கொள்ளையனின் மனதைக் கரைத்தது.

ஆபத்திலும் இவ்வளவு நேர்மை, உண்மை ஒரு மனிதனிடம் காணப்பட்டதைக் கண்டு மனம் மாறினான்.

அன்றே தனது திருட்டுத் தொழிலை விட்டுவிட முடிவெடுத்தான். அவர்களிடமிருந்து திருடிய பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்ல மனிதனாக மாறி உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பிச் சென்றான், 

பூதம் சிரித்து விவசாயிக்கு குழப்பம் 

பூதம் சிரித்து விவசாயிக்கு குழப்பம்

ஒரு விவசாயி ஒருநாள் குடும்பத்துடன் வெகுதூரத்தில் இருந்த நகரத்தை நோக்கிப் பயணமானார். இரண்டாம் நாள், உச்சி வேளைக்கு சாலை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் தங்கினர். அங்கே இரவு வரை தங்கி இளைப்பாறத் தீர்மானித்தனர்.

விவசாயி எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால், ஓய்வு எடுக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று நினைத்தார். தன் மூத்த மகனை அனுப்பிக் கொஞ்சம் சணல் நார் வாங்கி வரச்சொன்னார். இரண்டாவது மகனை அனுப்பிக் காய்கறிகள் வாங்கி வரச்சொன்னார். மூன்றாவது மகனிடம் சமையலுக்கு மளிகைக் சாமான்கள் வாங்கி வரும்படிச் சொல்லி அனுப்பினார்.

மருமகள்களுக்கும் வேலை கொடுத்தார். மூத்த மருமகளை அனுப்பி, தண்ணீர் கொண்டு வரச்சொன்னார். அடுத்த மருமகளை அனுப்பி விறகு சேகரித்து வரச்சொன்னார். மூன்றாவது மருமகளை ரொட்டி சுட, மாவு பிசையும்படிச் சொன்னார். எல்லாரும் அவரவருக்குச் சொன்னபடி கொண்டு வந்ததும், மரத்தடியில் அமர்ந்து சணல் நாரைக் கொண்டு கயிறு திரிக்கத் தொடங்கினார்.

அந்த மரத்தில் ஒரு பூதம் வசித்து வந்தது. விவசாயி வந்து மரத்தடியில் அமர்ந்தது முதல், அது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தது. இந்த ஆள் ஏன் இவ்வளவு பெரிய கயிற்றைத் திரிக்கிறான் என்று ஆச்சரியப்பட்டது. ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கடைசியில் அது மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்தது. விவசாயியின் முன்னால் வந்து அதுபற்றி அவரிடம் கேட்டது.

பூதத்தைப் பார்த்ததும் விவசாயிக்குப் பயம் ஏற்பட்டது. ஆனால், அதை வெளிக் காட்டி கொள்ளவில்லை. வேலையில் கவனமாக இருப்பது போல் நடித்தார். பிறகு நிமிர்ந்து பார்த்து, “உன்னைக் கட்டுவதற்குத் தான்” என்றார்.

பூதத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. பார்க்கப் பிரம்மாண்டமாக இருந்தாலும் அது மனதுக்குள் மிகவும் கோழை. எனவே, அது பயந்து போய் விவசாயியின் காலில் விழுந்து கருணை காட்டும்படி கெஞ்சியது.

“என்னை விட்டுவிடு. உன்னைப் பெரும் பணக்காரனாக ஆக்குகிறேன்” என்றது.

உடனே, பூமியைத் தோண்டி ஒரு பெரும் புதையலை எடுத்து அவருக்குத் தந்தது.

விவசாயிக்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி. தனது பயணத்தைத் தொடராமல், பெரும் செல்வத்துடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.

விவசாயி பெரும் செல்வத்துடன் வீடு திரும்பியதைக் கேள்விப்பட்ட அவரது பக்கத்து வீட்டுக்காரர் விவரத்தைக் கேட்டறிந்தார். தானும் அந்த பூதத்திடமிருந்து பெரும் செல்வத்தைப் பெற்றுவரவேண்டும் என்று பேராசை கொண்டார். அவரும் தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சென்று அதே ஆலமரத்தடியில் தங்கினார். தன் பிள்ளைகளுக்கும், மருமகள்களுக்கும் ஆளுக்கு ஒரு வேலை கொடுத்தார்.

ஆனால், அவரது மக்கள் சுத்த சோம்பேறிகள். அவர்கள் அந்த ஆலமரத்தின் குளுமையான நிழல் சுகத்தைத் துறக்க விரும்பவில்லை. அதனால் தந்தை சொன்ன வேலைகளைச் செய்ய மறுத்துவிட்டனர். மருமகள்களும் அவரை அலட்சியப்படுத்தினர். எனவே, எல்லா வேலைகளையும் அவரே செய்ய வேண்டியிருந்தது. பிறகு, சேகரித்து வந்த சணல் நாரைக் கொண்டு கயிறு திரிக்கத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தபடியே, பூதம் மரத்திலிருந்து இறங்கி வந்தது.

அவர் முன்னால் வந்து, “இந்தக் கயிற்றை எதற்காகத் திரிக்கிறாய்?” என்று பூதம் கேட்டது.

“உன்னைக் கட்டுவதற்குத்தான்!” என்றார் அவர்.

பூதம் சிரித்தது. விவசாயிக்குப் பூதம் பயப்படாமல் சிரிப்பதைக் கண்டு குழப்பம் ஏற்பட்டது.

“ஆக, நீ பயப்படவில்லையா?” என்று கேட்டார்.

“நான் ஏன் பயப்பட வேண்டும்? உன் குடும்பமே உன்னைக் கண்டு பயப்படாத போது, நான் எதற்குப் பயப்பட வேண்டும்? இந்தக் கயிற்றைக் கொண்டு என்னைக் கட்டுவதை விட்டு, உன் மகன்களையும் மருமகள்களையும் கட்ட முயற்சி செய்!” என்று சொல்லிச் சிரித்துவிட்டு மீண்டும், மரத்தின் மீது ஏறிக் கொண்டது பூதம்.

தன் திட்டம் பலிக்காததை கண்ட பக்கத்து வீட்டுக்காரன், முதலில் தன் குடும்ப உறுப்பினர்களை சரி படுத்த எண்ணியபடியே ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

இந்த உலகம் கண்ணாடி மாதிரி 

அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும், எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி" என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?" பெரியவர் சிரித்துக்கொண்டே,

"ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.

"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்.

"அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர்  "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.

 முட்டாள் ஆடுகள்

முட்டாள் ஆடுகள்

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.

அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.

முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.

ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.


விட்டுக்கொடுப்பவன், கெட்டுப்போவது இல்லை! 

கெட்டுப்போகிறவன், விட்டுக்கொடுப்பது இல்லை!!

நமது வாழ்க்கை சமாதானமாக இருக்க வேண்டுமானால், 

பசுவோடு சண்டை

பசுவோடு சண்டை


 ஒருவர் தன் பசுவோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது.  சிறிய அளவிலான அந்த ரோட்டில் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது.

 மாட்டுகாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை எழுப்ப முடியவில்லை.  வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். மாட்டுகாரனுடன் சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். 

பசு அசையவில்லை  அப்போது  விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் இருந்த பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர்.  

போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து மூன்று பேர் நகர்த்துவதைப் பார்த்து நகைத்தார்.  

மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை.  அந்த வழியாக ஒரு  வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவிற்கு கொடுத்தான்.  பசு புல்லை சாப்பிட எழுந்தது.

 சிறுவன் புல்லை  காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது. 

 அன்பால் எதையும் சாதிக்கலாம்

தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையில் முடியும்.

தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையில் முடியும்.தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையில் முடியும்.

ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது. 

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.

பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.

அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.

பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.

 

தவளை தன் வாயால் கெடும்..!

தவளைக்கு வந்த சோதனை


 சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.

ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது.  தவளை  எலியிடம் உனக்கு நீச்சல் தெரியுமா?" என்று கேட்டது. எலியும்  தெரியாது என்றது.தவளை, "உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றது.

அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம்... தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.

இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.


மருத்துவத்தொழில்

மருத்துவத்தொழில்

“விஜய்ப்பூர்” என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் எல்லோருக்கும் அவர்களுக்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் அனைவருக்கும் உதவி வந்தான். இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் அவனுக்கு திருமணம் செய்தால் இக்குணம் மாறும் எனக்கருதி, சிறந்த அறிவாற்றல் மிக்க “ரமா” என்கிற பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். 

திருமணம் முடிந்து சில காலம் கழித்து தன் கணவன் ரகுவிடம் அவன் இதற்கு முன்பு உதவி செய்த அனைவருக்கும் அதனால் பயன் கிட்டியதா என்பதை அறிந்து வருமாறு கூறினாள். 

இதை கேட்டு அவர்கள் அனைவரிடமும் விசாரித்த ரகு அவர்களுக்கு தான் செய்த உதவியினால் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து வந்து ரமாவிடம் கூறினான். அப்போது ரமா, பிறருக்கு நேர்மையாக உதவுவதற்கு மருத்துவத்தொழிலைக் கற்று, அதன் மூலம் உதவுமாறு கூறினாள். அதைக் கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்று ரகு கூறிய போது “சந்திரநகர்” என்ற ஊரில் வைத்தியநாதன் என்ற மருத்துவரிடம் ஒரு வருடத்திலேயே மருத்துவத்தொழிலை யாரும் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, ரகுவை அவரிடம் சென்று மருத்துவம் பயிலக்கூறினாள் ரமா.

 ரகுவும் வைத்தியநாதனிடம் ஒரு வருடம் மாணவனாக இருந்து வைத்தியமுறைகளை கற்று தேர்ந்தான். அப்போது வைத்தியநாதன் ரகு தனது வைத்திய தொழிலை நேர்மையாக செய்யும் பட்சத்தில் தன்னிடமுள்ள அனைத்து வைத்திய குறிப்பு சுவடிகளையும் தருவதாக உறுதியளித்தார்.

பின்பு ஊருக்கு திரும்பிய அவன் தினமும் தனது வீட்டிலேயே மக்கள் அனைவருக்கும் வைத்தியம் பார்க்கத்தொடங்கினான். அப்படி ஒரு முறை ஏழை ஒருவருக்கு ரகு வைத்தியம் பார்க்கும் போது செல்வந்தர் ஒருவர் குறுக்கிட்டு தனக்கு உடனடியாக வைத்தியம் பார்க்குமாறும், அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக கூறினான். 

ஆனால் ரகு மறுத்துவிட்டான். மற்றொருநாள் அந்த நாட்டு மன்னரின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் அரண்மனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் படி அரசாங்க வீரர்கள் ரகுவை அழைத்தனர். தான் அரண்மனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் இங்கிருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதால் மன்னரின் தாயாரை தனது வீட்டிற்கு அழைத்துவந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி விட்டான். 

 இதையெல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்த துறவி ஒருவர் கவனித்து ரகுவை பாராட்டி ஆசிர்வதித்தார். அதோடு சந்திராநகர் சென்று, அவரது குருவிடம் மீதமிருக்கும் மருத்துவ ஓலைகளை வாங்கிவந்து அதன் மூலம் மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ரகுவிடம் அடிக்கடி கூறிவந்தார். ரகுவும் ஒவ்வொருமுறையும் அங்கு செல்ல காலம் தாழ்த்தி வந்தான். 

ரகுவை அந்த சுவடிகளை வாங்கி வர ஒருநாள் அவன் மனைவி ரமாவே தனக்கு உடல் நலம் சரியில்லாது போலும், அவள் கணவணான ரகு தரும் எம்மருந்துகளை உட்கொண்டாலும் அவள் குணமாகாத மாதிரி நடித்தாள். இதனால் வேறு வழியின்றி ரகு தனது குரு வைத்தியநாதனிடம் சென்று ஓலைகளை வாங்கிவந்து, மருந்து தயாரித்து அதை ரமாவிற்கு கொடுத்தான். அவளும் அதை உண்டு குணமடைந்தது போல் நடித்தாள்.

 பிறருக்கு சிகிச்சை அளிக்க தன் குருவிடம் சுவடிகளை வாங்கச் செல்லாதவன், தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் ஓலைகளைப் பெற்றது சரியா?


 உணவு தந்துக் காப்பாற்றியவனுக்கு பரிசு இல்லை

உணவு தந்துக் காப்பாற்றியவனுக்கு பரிசு இல்லை

வசு,ராமு இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அவர்களிடம் அவன், “”சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட வசு அவனுக்கு உணவு தந்தான்.

இதைப் பார்த்த ராமு , “”அண்ணா! இப்படிப்பட்ட சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசு உணவு தந்தான். மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் ராமு .

“”சோம்பேறிப் பயலே! அடுத்த முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!” என்று கத்தினான் ராமு . மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தால் துடித்த ராமு  அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.

“”இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை.

பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர் கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று இருந்தது. வசுவும், ராமுவும்  அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை ராமுவிடம் தந்தார் அவர். “”என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றார்.

தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது வசுவிக்கு தெரிந்தது.

கோபத்தால் துடித்த அவன், “”நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக் காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான். ஆனால், அவரோ, “”இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!” என்று உறுதியாகச் சொன்னார். இதை வசு ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றான். நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.

வசுவை பார்த்து அவர், “”நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார். நிலையான உதவி செய்த ராமுவுக்கு இவர் தூண்டிலைப் பரிசு அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் ராமுகே உரியது. இதுவே என் தீர்ப்பு!” என்றார்.

புத்திசாலி கழுதை

புத்திசாலி கழுதை

 முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.