கேரட் - மருத்துவ குணங்கள்

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும்.

உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.

கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும்.

தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது.கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.

ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.  உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

கோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.

கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.

கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும். கேரட்டை பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். கேரட்டை பசையாக அரைக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வேண்டும்.

இதை வடிக்கட்டி குடித்துவர புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஈரல் பலம் அடைகிறது. ரத்தம் சுத்தமாகும். தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும். பித்தம், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம். கோடைகாலத்தில் குளிர்ச்சி தருகிறது. தோலுக்கு வண்ணத்தை தருகிறது.



தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறாக்கள் எதற்காக வளர்க்கபடுகிறது ?
 

1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது.

2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும்.

3. கரையான் வராது அப்படியே வந்தால் அதுவும் இரையாகி விடும். 

4. வவ்வால் உள்ளே வராது, ஆந்தையும் உள்ளே வராது புறாக்கள் எழுப்பப்படும் ஓசை அவைகளை விரட்டிவிடும். 

5. புறாக்கள் எழுப்பப்படும் ஓசையானது நோயாலிகளை குணப்படுத்தும். கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்கு தரவல்லது.

சுய ஒழுக்கம்

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர், பண்ணவும் நினைக்காதீர்.

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்.

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்.

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள். செலவு செய்தபின் Tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேட்காதீர்கள்.

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்). அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! (None of your business). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம். அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள்.அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ, பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

10. நீங்கள் ஓட்டுனராகவோ அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc) இருந்தால் கஸ்டமரின் Personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள்.

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சமயம் என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

12. நீங்கள் Guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா' என்று கடுப்பேற்றாதீர்கள்.

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய Opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப Shy டைப்பா? வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

14.  நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் / பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. 

(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான் etc).

15.  வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள்.

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள்.

அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்ட்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ? என்று கேட்காதீர்கள். எங்க ஏரியாவில் கம்மி ரேட் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.

'வீடு நல்லா இருக்கு கங்கிராட்ஸ்' என்று முதலில் சொல்லுங்கள்.

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள்.

'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி / உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள்.

உங்கள் Designation ஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம்.

9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம்.

நீங்கள் Guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள்.

10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது Offensive. (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, கோலம் போடும் போதோ, வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

23. பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

24. ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி Comment செய்யாதீர்கள்.(என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல).

25.  டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

26. மற்றவரின் Taste / Preference களைக் குறை சொல்லாதீர்கள்.

(இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!).

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28.  குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.

ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்.

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.

அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

#நாகரிகங்கள் 

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு.

நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்...



மாணவர்கள்  செய்த காரியம்..!

மாணவன் : ஆசிரியர்...நேத்து நீங்க

சொன்னா மாதிரியே..

இன்னைக்கி நாங்க

அஞ்சு பேரும்

சேர்ந்து ஒரு பாட்டியை,

ரோட்டுக்கு இந்த பக்கத்துல

இருந்து அந்தப்

பக்கமா கொண்டு வந்து விட்டோம்

ஆசிரியர்...!

ஆசிரியர் : வெரிகுட்...!! நல்ல

காரியம்! வயசானவுங்க

சாலையை கடக்க

இப்படித்தான்

உதவி செய்யணும்!!.................

அதுசரி.......

ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?!

மாணவன்

அவங்க

வரவே மாட்டேன்னு அடம்

பிடிச்சாங்க...! நாங்க

அஞ்சு பேரும்தான்

சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு, விவசாயிகள் இடையே இதுவரை 5 சுற்றுபேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே டெல்லியில் இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய வேளாண் துறையின் அழைப்பின் பேரில் 40 விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் அனுப்பிய கடிதத்துக்கு, 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 4 முக்கிய கோரிக்கைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை சட்டபூர்வமாக உறுதிசெய்ய வேண்டும். வேளாண் கழிவுகளை எரிப்பதற்காக விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்தமசோதாவை வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாய சங்க மூத்த தலைவர் அபிமன்யு டெல்லியில் நேற்று கூறும்போது, "எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 30-ம் தேதி டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைப் பகுதிகளில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம்.

அன்றைய தினம் மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் டிராக்டர் பேரணியை டிசம்பர் 31-ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளோம். மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது எங்களது 4 முக்கிய கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்" என்றார்.



 இட்லி

இட்லி

கொரோனாவுல மட்டுமில்லைங்க.. இதுலயும் நாலு ஸ்டேஜ் இருக்கு.

 இப்போ உங்க வீட்ல என்ன ஸ்டேஜ் நடக்குது?

 சென்னை: கொரோனா தாக்கம் இந்தியாவில் எந்த ஸ்டேஜில் இருக்கிறது என்ற குழப்பமே இன்னும் தீராத நிலையில், வீடுகள் எந்த ஸ்டேஜில் உள்ளது என்ற வேடிக்கையான சமூகவலைதளப் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. கொரோனோ பரவலில் மொத்தம் நான்கு நிலை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் மூன்றாவது கட்டத்திற்கு இந்தியா சென்று விடக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வீட்டுச் சாப்பாடு சரியில்லை என ஹோட்டலுக்கு படையெடுத்தவர்கள் கூட, இன்று வேறு வழியில்லாமல் வாயை மூடிக் கொண்டு போடுவதை சாப்பிட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் இட்லி மாவை வைத்து வேடிக்கையான ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளார் நெட்டிசன் ஒருவர். சமூகவலைதளத்தில் பார்த்த அந்தப் பதிவு ரசிக்கும்படி இருக்கவே, இதோ உங்களிடமும் அதை பகிர்ந்து கொள்கிறோம். 

இட்லி மாவிலும் அதாகப்பட்டது, இட்லி மாவிலும் நான்கு ஸ்டேஜ்கள் இருக்கிறாதாம்.

 மாவு அரைத்த மறுநாள் கெட்டியான மாவில் இட்லி ஊற்றுவோமே அது முதல் ஸ்டேஜ். 

பின் அடுத்த நாள், அந்த மாவில் சற்று நீர் ஊற்றி தோசையாக வார்ப்பது இரண்டாவது ஸ்டேஜ்.

  3வது ஸ்டேஜ் மூன்றாவது நாள் சற்று புளிக்க ஆரம்பித்த மாவில், லேசாக ரவை கலந்து பனியாரமாக ஊற்றுவது மூன்றாவது ஸ்டேஜ். 

இந்த ஸ்டேஜிலேயே மாவு தீர்த்து விட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் பாக்கியவான்கள். அப்படி இல்லாமல், இன்னமும் மாவு இருந்தால் அவர்கள் நிலை பாவம் தான். 

மோசமான நிலை மிகவும் புளித்துப் போன அந்த மாவில் வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, தோசை வார்த்துச் சாப்பிடுவது தான் நான்காவது ஸ்டேஜ். 

முந்தைய மூன்று நிலைகளில் கூட மாவின் ருசி மாறாமல் சாப்பிட நன்றாகத் தான் இருக்கும். இந்த நான்காவது நிலை தான் மோசம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 

கொடுமையிலும் கொடுமை வாயிலேயே வைக்க முடியாத அளவிற்கு புளித்துப் போன மாவில் தோசை சாப்பிடுவது கொடுமையிலும் கொடுமை. எனவே குடும்பத் தலைவிகளே உங்கள் வீடுகளில் மிச்சமிருக்கும் மாவு மூன்றாவது நிலையைக் கடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இது போன்ற புலம்பல்கள் அதிகமாகி விடும்.


தங்க ஹோட்டல் 

தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல்

பொதுவாக காட்டுக்குள் ஹோட்டல், மலைக்கு மேல் ஹோட்டல், கடலுக்கு அடியில் ஹோட்டல் என விதவிதமான ஹோட்டல்கள் இருக்கின்றது. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி வியட்நாமில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசிய சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்புடைய ஹோட்டல் என்ற பெருமையை அடைந்துள்ளது எனலாம்

இந்த ஹோட்டலானது, வியட்நாமின் ஹனோய் மத்திய மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் என்ற பெயரில் அமைந்துள்ளது. இங்கு உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்தும் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட  பின்னர் உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் என்று இணையத்தில் வைரலாகியது. தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள், கழிப்பறைகள் என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. ஹோட்டல் வசதிகளில் கூரையின் மேல் 24 காரட் தங்க-டைல்ட் உள்ளதாகவும், ஒரு இரவு 250 டாலர் (R3 800) தான் தொடக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொடுக்கப்படும் உணவிலும் மர்மமான தங்கப் பொருளுடன் வழங்குவதாகவும், ஹோட்டலின் காபி கோப்பைகள் கூட 24 காரட் தங்கத்தால் ஆனவை என அங்கு சென்று வந்தோர் தெரிவிக்கின்றனர்.

 புத்தர் சிலை

ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை ..!

ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை நிறுவப்பட்டது. இதே தேதிஉலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவிய நாள்: 29-12-1993

 இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 * 1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயார்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர். 

 * 1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

 * 1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28-வது மாநிலமாக இணைந்தது.

 * 1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

 * 1876 - ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் ரெயில்வே பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர். 

 *1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

 * 1891 - தாமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார். 

 *1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார். 

 *1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.


 உண்மை பேசுவோம் 



அது ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். 

முத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவன் மாலையில் வீடு திரும்புவான்.

ஒரு நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான்.

காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.

தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென "புலி வருது, புலி வருது", என்று கூச்சலிட்டான்.

ராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் "புலி எங்கே" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, "புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.

அடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.

மூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே "புலி வருது, புலி வருது" என்று கூச்சலிட்டான்.

ராமு அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.

பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது.

நான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான்.

ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என  நம்ப மாட்டார்கள்.

             முள்ளங்கி

முள்ளங்கி

குளிர்கால காய்கறிகளில் இந்தியாவில் முள்ளங்கி முக்கியமானது. இது நீர்ச்சத்து நிறைந்த நன்றாக சாப்பிட கூடிய வேர் காய்கறியாகும். முள்ளங்கி சமையலுக்கு பயன்படுவதையும் தாண்டி பல மருத்துவ நோக்கங்களையும் கொண்டுள்ளது.

மேலும் முள்ளங்கியின் இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் விதைகள் என தாவரத்தின் அனைத்து பகுதிகளும் உணவாக பயன்படுகின்றன. முள்ளங்கியில் ஏராளமான எண்ணெய் கலவைகள் உள்ளன. முள்ளங்கியை சமைத்தோ, பச்சையாகவோ அல்லது ஊறுகாயாக . துவையலாக செய்தும் சாப்பிடலாம்.இந்த முள்ளங்கி ஏன் குளிர்காலத்தில் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்வோமா?

முள்ளங்கியில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ரசாயன கலவைகள் உள்ளன. எனவே முள்ளங்கியை சாப்பிடுவதால் உங்கள் உடலின் இயற்கையான அடிபோனெக்டிக் (புரத ஹார்மோன்) உற்பத்தியையும் இது மேம்படுத்துகிறது.

மேலும் முள்ளங்கியில் நீரிழிவு உருவாவதை தடுக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற ஆற்றலும் உள்ளது. அதனால் முள்ளங்கியை தவிர்க்காமல் அதிகமாகவே பயன்படுத்துங்கள்.

உடலில் கல்லீரல் சருமத்துக்கு அடுத்து மிகப்பெரிய உறுப்பு.உடலில் நோய்த்தொற்று ஏற்படும் போது தானாகவே அதை சரிசெய்து கொள்ளும் குணம் இந்த கல்லீரலுக்கு உண்டு. முள்ளங்கியில் கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் கல்லீரல் சேதத்தில் இருந்து பாதுக்காக்கும் கலவைகள் உள்ளன. மேலும் இந்த கலவைகள் சிறுநீரகங்களில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகின்றன.

முள்ளங்கியில் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன. மேலும் முள்ளங்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் நைட்ரேட்களை அதிகமாக கொண்டுள்ளன.

முள்ளங்கியில் அதிக அளவு குளுக்கோசினோலேட்டுகள் உள்ளன. அவை கந்தக கலவைகள் ஆகும். இவை புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களில் இருந்து உடலில் உள்ள செல்களை பாதுக்காக்கும். மேலும் புற்றுநோய் கட்டி உருவாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் திறனை இவை கொண்டுள்ளன. இதனால் இது புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் அற்புதமான மருந்தாக பார்க்கப்படுகிறது.

முள்ளங்கி இயற்கையாகவே பூஞ்சை காளான் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களை எதிர்க்கும் திறனை கொண்டுள்ளது. இது பொதுவாக பூஞ்சை தொற்றுநோய்களின் உயிரணு இறப்பிற்கு உதவும் ஒரு பூஞ்சை காளான் புரதத்தை கொண்டுள்ளது. இதை கொண்டே இவை பூஞ்சை காளான்களை எதிர்க்கின்றன.

முள்ளங்கி சாறானது வீக்கத்தை குறைக்கவும் சிறுநீர் பாதையில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் சிறுநீர் வரும்போது எரியும் உணர்வு போன்றவற்றை குறைக்கவும் சிறப்பாக செயல்படுகிறது. சிறுநீரக அமைப்பில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் இது உதவுகிறது. 

முள்ளங்கியை சாம்பாராக மட்டும் வைக்காமல் வெள்ளை வினிகர், பூண்டு, கிராம்பு, கருப்பு மிளகுத்தூள், பெருஞ்சீரகம் விதைகள், கொத்தமல்லி விதைகள், மிளகாய் மற்றும் கடுகு போன்றவற்றை பயன்படுத்தி முள்ளங்கி ஊறுகாய் தயாரிக்கலாம்.

புதிதாக செய்யும் சாலட்டில் வெட்டப்பட்ட அல்லது துருவிய முள்ளங்கியை சேர்க்கலாம்.

ஒரு பர்கரில் வெட்டப்பட்ட முள்ளங்கி மற்றும் கீரையை சேர்க்கலாம்.

காய்கறிகள் உள்ள தட்டில் கொஞ்சம் முள்ளங்கியை சேர்த்து உண்ணலாம்.

முள்ளங்கி சிறிது பூண்டு மற்றும் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து சமைத்து உண்ணலாம்.


சட்டம் அறிவோம்

பிரிவு 420 - மோசடி சட்டம் அறிவோம்..!

 ஒருவரை ஏமாற்றி அதன்மூலம் நேர்மையின்றி அவரைத் தூண்டி, ஒரு சொத்தைப் பிறருக்கு கொடுக்கும்படி செய்தாலும் அல்லது ஒரு மதிப்புள்ள காப்பீட்டை உருவாக்கும்படி அல்லது மாற்றும்படி அல்லது அளிக்கும்படி செய்தாலும் அல்லது மதிப்புள்ள காப்பீடாகக் கையெழுத்திடப்பட்டு முத்திரை இட்டுப் பயன்படுத்துவதற்கும் பொருளை அவ்வாறு உருவாக்க மாற்ற அல்லது அளிக்கத்தக்க செயல் புரியும்படி செய்தாலும் அத்தகைய வஞ்சனை புரிந்தவருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.


 தஞ்சை பெரிய கோயில் 

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க உலக பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. ராஜ ராஜ சோழன் எப்படி இந்த கோயிலை கட்டினார், அதன் பின்னனி, சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். 


பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கோயில் பெயர் மாற்றம்:
பிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.

கோபுர அதிசயம்:
இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் மதிய வேளைகளில் இந்த கோவிலில் உள்ள கோபுரத்தின் நிழல் ஆனது கீழே விழுவதில்லை என்பதாகும்.

கிரகண நேரத்திலும், நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில் எங்குள்ளது தெரியுமா?- ஓயாமல் பசி எடுக்கும் சுவாமி இதோ

அதே போல் கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதை விட அதிசயமாக அதை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என வியக்க வைப்பதாக உள்ளது.

கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கமானது அதிகப்படியான மின்காந்த ஆற்றலை வெளியிடுவதாகவும் அந்த ஆற்றலானது, இந்த ஒற்றை கல்லினாலான மேற்கூரைகள் எதிரொளிக்கப்பட்டு, ஒருமுகப்படுத்த படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நேர்மறையான எண்ணங்களால் ஆன இந்த ஆற்றலானது, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சாந்தியையும், கொடுப்பதுடன், அவர்களையும் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

உலகில் அதிகமானோர் தரிசிக்கும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் இந்து கோயில்!

சப்தம், ஞானிகளின் ஞான ஆற்றல் மூலம் அந்த பெரிய கல்லை மேலே ஏற்றியிருக்கலாம் என பலரும் தெரிவிக்கின்றனர்.

நந்தி சிலை மாற்றம்:
இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. அதோடு ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை மாற்றப்பட்டு, மராட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலை தான் இப்போது உள்ளது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்... கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்புகள்

ராஜ ராஜன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அதில் அதிர்ச்சியும், பிரம்மிப்பும் அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலையை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இன்றளவும் அந்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கட்டுமானம்;
மாமன்னர் ராஜராஜ சோழன் இலங்கைக்கு சென்று வந்த பிறகு இந்த கோயிலை வடிவமைத்தார். இலங்கையில் இந்து மன்னர்கள் வேதத்தை தழுவிய இந்து கோயில்களால் கவரப்பட்டதானாலேயே அந்த வடிவமைப்பில் இந்த பெரிய கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்க வேண்டிய வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்!

கட்டிடக் கலை வல்லுனர்:
இந்த கோவிலில் பொரித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம், இந்த கோவிலானது குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் எனும் கட்டிடக்கலை நிபுணர்கள் கட்டப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, நேர்த்தியான இவரது படைப்புகளில் மூலமே அவரது பெயரில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது, மேலும் இவரது வாஸ்து சாஸ்திரம் எனும் கலை இன்றும் போற்றப்படுகிறது.

சுரங்கப்பாதை:
இந்தப் பெரிய கோவிலானது பல சுரங்கப் பாதைகளை கொண்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. பல்வேறு இடங்களை இணைக்கும் இந்த பாதைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதையில அந்த காலத்தில் வாழ்ந்த முனிவர்கள், ராஜாக்கள், ராணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரகசியமாக செல்ல பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக தீபாவளி மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பாதைகள்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிரானைட் கற்கள்:
கோயிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்:
தஞ்சை கோயில் வெறும் கோயிலாக மட்டும் பார்க்கப்படாமல், பாரம்பரியம், வரலாறு தொல்லியல் தன்மை ஆகியவை வியக்க வைக்கும் வகையில் உள்ளதால் யுனெஸ்கோவால் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

கடுமையான முயற்சி 

கடுமையான முயற்சி

 போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

 

முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.

'' கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி ...

'' ஷேவ் பண்றதுக்கு... என் முகம் தெரியுற மாதிரி கண்ணாடி  ஒன்னு வாங்கி வா...'' என்று அனுப்பி வைத்தார்.

வேலைக்காரன் திரும்பி வரவே இல்லை... நீண்ட நேரத்திற்கு பின் வெறுங்கையோடு  வேலைக்காரன் வந்தான்.

 கண்ணாடி வாங்கலன்னு கேட்டார் முதலாளி...

'' பஜார் முழுக்க அலைஞ்சேன் முதலாளி... ஆனாலும் நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல அதுதான் வாங்கல';

'' ஏன்... பெருசாவா இருந்தது..?

'' இல்ல, சின்னதாதான் இருந்தது...''

'' பிறகு ஏன் வாங்கல ...?

'' எல்லா கண்ணாடியிலும் என் முகம்தான் தெரிஞ்சிது. அதான் வாங்கல...''


 இஞ்சி

இஞ்சி

இஞ்சியின் நன்மைகள்:

இஞ்சி காரத்தன்மை கொண்டதால், அதனை பச்சையாக உண்பது சற்று கடினமான காரியமே! ஆனால், உணவு மற்றும் பான வகைகளில் இஞ்சி சேர்த்து உட்கொண்டால் பற்பல ஆரோக்கிய, அழகு மற்றும் கூந்தல் நன்மைகளை அடைய முடியும்.

இஞ்சி என்பது ஆயுர்வேத “மருந்துகளின் இருதயம்” என்று கருதப்படுகிறது; இது பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகிறது.

 1.சுவாச பிரச்சனைகள்:

இஞ்சியில் உள்ள ஆன்டிஹிஸ்டமைன் பண்புகள் ஒவ்வாமைகளை குணப்படுத்த உதவும் பயனுள்ள மருந்தாக விளங்குகின்றன. இது காற்றுப்பாதையில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, கோழை திரவ உருவாக்கத்தை தூண்டிவிட உதவுகிறது. சளி மற்றும் காய்ச்சலை விரட்டி அடிக்க, பல நூற்றாண்டுகளாக இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது; ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து உட்கொண்டால், சளி மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் அடையலாம்

2. செரிமானம் :

நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஜீரணிக்க இஞ்சி பயன்படுகிறது; கூடுதலாக, வயிற்று பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வாயு தொல்லையால் ஏற்படும் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி பயன்படுகிறது

3.புற்றுநோய் :

மிச்சிகன் பல்கலைக்கழத்தின் ஆய்வுப்படி, இஞ்சிப்பொடி கருப்பை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது; மேலும் இது புரோஸ்டேட் புற்றுநோய் செல்களை அழித்து, அந்நோயை குணப்படுத்த உதவுகிறது. இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (gingerol) எனும் உறுப்பு ஆன்டி மெட்டாஸ்டாடிக் பண்புகளை வெளிப்படுத்தக்கூடியது மற்றும் இது மார்பக & கருப்பை புற்றுநோய்களை குணப்படுத்த உதவுகிறது

4. குமட்டல் :

இஞ்சியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகளே முக்கிய காரணம்; குமட்டல் உணர்வை ஏற்படுத்தும் நோய் பாதிப்புகளான, வயிற்றுப்போக்கு குறைபாடு, மலச்சிக்கல் நோய்க்குறைபாடு மற்றும் மேலும் பல குறைபாடுகளை குணப்படுத்த இஞ்சி உதவுகிறது. இஞ்சியின் மருத்துவ பயன்பாடுகளுள் இது ஒரு குறிப்பிடத்தக்க நன்மை.

 5. வலி நிவாரணி :

பொதுவான தசை அசௌகரிய குறைபாடு கொண்ட நோயாளிகளின் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த இஞ்சி உதவுகிறது; ஆர்த்ரிடிஸ் வீக்கத்திற்காக வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளும் நபர்களுக்கு இஞ்சி வேர் ஒரு அற்புத மருந்து ஆகும்; இதனை உட்கொண்டால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். 




திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி

 பிறப்பு:

திருபாய் அம்பானி அவர்கள் குஜராத்திலுள்ள மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடா என்னுமிடத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி, 1932 ல் பிறந்தார்.

சிறப்புகள்:

  • திருபாய் அம்பானி  அவர்கள் முதலில் 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
  • இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர்.
  •  தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து “மஜின்” என்ற நிறுவனத்தை துவக்கினார்.
  • மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது.
  • துணி வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்த திருபாய் தனது முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977-ஆம் ஆண்டில் துவங்கினார்.
  • 1975 ஆம் ஆண்டில், உலக வங்கியில் இருந்தான ஒரு தொழில்நுட்ப குழு ரிலையன்ஸ் துணியாலையின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டது.“வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது” என்கிற சான்றிதழை அந்த காலகட்டத்தில் பெற்ற அபூர்வ சிறப்பு அந்த பிரிவுக்கு கிட்டியது.
  • இந்தியாவில் பங்கு முதலீட்டு பழக்கத்தை பரவலாக்கிய பெருமை திருபாய் அம்பானிக்கு உரியது.
  • 1982-ஆம் ஆண்டில், பகுதியாக மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் தொடர்பாக உரிமைப் பிரச்சினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வந்தது.
  • காலப் போக்கில், திருபாய் தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். முதன்மையான சிறப்புக்கவனம் பெட்ரோலிய வேதிகள் துறையில் இருக்க, தொலைத்தொடர்பு, தகவல்தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் கூடுதல் ஆர்வம் செலுத்தப்பட்டது.
  • அவர் மீது முறையற்ற செயல்களில் ஈடுபட்டார், அரசாங்க கொள்கைகளை தனது சொந்த தேவைகளுக்கு ஏற்ற வகையில் சாதகமாக்கிக் கொண்டார்.
  • ஊடகங்கள் வணிக-அரசியல் தொடர்பு குறித்து பேச முற்படுகின்றன என்றாலும், நாடெங்கிலும் புயல் கிளப்பும் ஊடகப் புயல்களில் இருந்து எப்போதும் அம்பானியின் வணிகக்குடும்பம் கூடுதல் பாதுகாப்பையும் ஆதரவையும் பெற்று வந்திருக்கிறது.

விருதுகள்:

நவம்பர் 2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவரது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கெம்டெக் பவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வேர்ல்டு அமைப்புகள் அவருக்கு ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ விருதினை வழங்கின.

2000, 1998 மற்றும் 1996 – ஆசியாவீக் இதழ் வெளியிட்ட ‘பவர் 50 -ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.

ஆகஸ்டு 2001 – வாழ்நாள் சாதனை க்காக தி எகனாமிக் டைம்ஸ் பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டுக்கான விருது வழங்கியது.

இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பு (FICCI), திருபாய் அம்பானியை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக த் தேர்வு செய்தது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா 2000-ஆம் ஆண்டில் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று அவரை “நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக” தேர்வு செய்தது.

இறப்பு:

திருபாய் அம்பானி அவர்கள் 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்:

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்:

மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதுதான் மக்களாட்சி. மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில்- ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. எனவே தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தமிழ்மொழிதான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.

ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள்:

ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. இன்றியமையாத சில ஆணைகள் மட்டும் இப்பகுதியில் சுட்டிக்காட்டப் பெறுகிறது.

  1. அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண். 1134, நாள்.26.01.1978.
  2. அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண்.2618, நாள்.30.01.1981.
  3. பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பொதுத்துறை நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971
  4. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், மைய, மற்றும் பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தி்ல் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே ஆட்சிமொழித் திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் கடிதப் போக்குவரத்துகள் தமிழிலேயே அமைதல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.
  5. அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பணியாளர் நிருவாகச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.
  6. அலுவலக வரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.
  7. அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்களின் அளவு இடம் பெற வேண்டுவது தொடர்பாகவும் ஆணையிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றம் பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.
ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இவை போன்று பல அரசாணைகளை அரசு பிறப்பித்துள்ளது.

ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இத்துடன் தமிழ் வளர்ச்சிக்கான சில திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

தமிழ்மொழிக்கும் இலக்கியவளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் 

திட்டங்கள்:

தமிழ்மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில் பல திட்டங்கள் தமிழ் வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்பெறுகின்றன.

     புலவரை வென்ற தெனாலிராமன்    

தெனாலிராமன் கதைகள்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான்.

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.

மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.

ஆற்றுத்தும்மட்டி

ஆற்றுத்தும்மட்டி  மருத்துவ‌ பயன்கள்..!

 ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத் தன்மை அதிகம் இருக்கும். விதைகள் மூலம்இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதற்கு கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி என்ற வேறுப் பெயர்களும் உண்டு.

மருத்துவக் குணங்கள்:

ஆற்றுத்தும்மட்டியின் சமூலம் நுண்புழு கொல்லும். நஞ்சு முறிக்கும்.

காய் சிறு நீர், மலம் பெருக்கும்.

புழுவெட்டினால் முடி கொட்டும் இடங்களில் காயை நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.

பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய்புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக உலர்த்திப் பொடித்து சமனளவு கலந்து அரைத் தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் முறியும்.

தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய்பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய், வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம், திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம், சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சின்னலவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப் போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத் தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும் 2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு) 4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள், ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு, இடுப்புவலி, வாயு முதலியவை தீரும். 

           வாழை தண்டை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பது எப்படி ?

வாழை தண்டை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பது எப்படி ?

வாழை  தண்டுகளை எடுத்து வெட்டி அதில் துளைபோட்டு உலர்ந்த மாட்டு சாணம் மற்றும் மண்ணின் கலவையால் நிரப்பபட்ட பிறகு, காய்கறி விதைகளை அதில்  போடவேண்டும்.

வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை செடிகள் நன்றாக வளரும். 

விதைகள் நாற்றுகளாக வளர்ந்ததும், அவை தாய் மண்ணுடன் மெதுவாக வயலுக்கு மாற்றவேண்டும். இந்த நுட்பத்தை வீட்டுத் தோட்டங்களில் எளிதாகப் பயன்படுத்தலாம்.

🌴🌴🌴🌴🌴




கேள்வியும்?  பதிலும்..!

ஆசிரியர் கேள்வியும்? மாணவன் பதிலும்..!

டீச்சர்: நம் தேசிய பார்வை எது?

மாணவன் : 'மயில்போல பொண்ணு ஒண்ணு'...

டீச்சர் : நம் தேசிய விலங்கு எது?

மாணவன் : 'புலி உறுமுது.. புலி உறுமுது'

டீச்சர் : நம் தேசிய மலர் எது

மாணவன்: 'ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே'...

டீச்சர்: நம் நாட்டின் தலைநகரம் எது?

மாணவன்: 'டெல்லிக்கு ராஜானாலும் '

டீச்சர்: நம் தேசிய பழம் எது?

மணவன்: 'மாம்பழமாம் மாம்பழம்'

டீச்சர்: எனக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு தெரியுமா?

மாணவன்: 🤔🤔🤔🤔🤔

டீச்சர்: 'நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு நாளு தூங்க மாட்ட'...

மாணவன்:😲😲😲😲





கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் ..!

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் ....!

மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.

வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.

தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.

அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.

வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.


  சட்டம் பிரிவு 498A

சட்டம் பிரிவு 498A என்ன  சொல்கிறது..!

ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். விளக்கம்: இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்; 1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலைக் குறிக்கும் (அது உடலுக்கு அல்லது உள்ளத்துக்கு கேடுபயக்கக் கூடியதாகக் கூட இருக்கலாம்) 2. சட்ட விரோதமாக ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அந்தப் பெண் மூலம் அல்லது அவளுடைய உறவினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது அப்படி அவளால் அல்லது அவளுடைய உறவினரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத சங்கடங்களை உண்டாக்குவதைக் குறிக்கும்.

கொய்யா பழம்

கொய்யாப் பழத்தின் மருத்துவ‌ பயன்கள்..!

 கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைகிறது.கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.கொய்யாப்பழத்தின் நன்மைகளைப் பார்க்கும் முன் நாம் எந்தச்சூழலில் கொய்யாப் பழத்தினை நாடி வந்துள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மனிதனின் உண்மைச் செல்வம் உடலும் உயிருமே ஆகும். நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மிக மிக இன்றியமையாதது உடல் நலம் ஆகும். அவசரமயாமான  இக்காலக் கட்டத்தில் நமக்கு ஒரு நோய் அல்லது குறைபாடு ஏற்படுவதற்கு முன்னர் நம் உடல் நலத்தில் நாம் அக்கறைக் கொள்வது இல்லை. நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி பல காலம் ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் உண்ணும் உணவில் எடுத்துக் கொண்ட அக்கறை தான் அதற்குக் காரணம். பச்சை காய்கறிகள், இயற்கையான பழங்கள் போன்றவற்றை தான் உணவாக உண்டு வந்தனர். இவ்வாறு உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்த்தியையும் உடலுக்கு வழங்குகிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் உண்ணும் உணவிலும் கவனம் செலுத்துவதில்லை. மனிதனுக்கு இயற்கை அளிக்கும் ஒப்பற்ற செல்வங்கள் தான் காய்கற்களும், பழங்களும்.

கொய்யா பழத்தின் நன்மைகள்:

1.இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

2.நோய்த் தடுப்பாற்றலை அதிகரித்தல்.

3.கொய்யாப் பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினை மேம்படுத்துகிறது. இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. 

4. கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிக்ரரிகிறது. கொய்யாப் பழம் பொதுவாகக் கண்புரை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறாது.

5.கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய்வழிப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்டுவதாக அறியப் படுகிறது.

6.கொய்யாப் பழத்திதில் நிறைந்துள்ள மெக்னீசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வடையச் செய்ய உதவுகிறது.

7.கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது.

8. கொய்யாப் பழத்தில் தான் வைட்டமின் ‘சி’ மற்றும் இரும்புச்சத்து அதிக அள்வில் உள்ளது. இவை இரண்டும் சலி மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது.

9. வயதான பின் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து தோலைப் பாதுகாக்க உதவி செய்கிறது. தினம் ஒரு கொய்யா சாப்பிட்டால், தோல் சுருக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

10.கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ கரோட்டினாய்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை செரிமான மண்டலத்தை வழுவாக்குகின்றன. அதோடு மேற்கூடிய காரணங்களால் இரைப்பைக் குடல் அழற்சிக்கான (Gastroenteritis) சிகிச்சையில் கொய்யா மிகுந்த பயனளிக்கிறது.

11.கொய்யாக்கள் செம்புக்கு (Copper) நல்ல ஆதாரமாக விளங்குகிறது. இதனால் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.

மன்னன் மூவன் 

நாம் வாய்க்கு வந்ததையெல்லாம் பேச கூடாது..!

சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.

இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார்.

புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.

“அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.”

ஓ, அப்படியா செய்தி!”

“நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!”

“இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!”

“அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.”

“நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்… யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.”

“இல்லை, நானே சென்றுவிடுகிறேன்.”

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான்.

மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.

“என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!” எனத் துõதுவனை
அனுப்பினான்.

மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, “”மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்,” என்றான்.

“கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்… இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?”

“மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.”

“தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.”


“எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.”

“உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.”

“உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.”

“அடே தூதுவனே… இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!”

தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

“தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்,” என்று முடிவு கட்டினான் இரும்பொறை.

“மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்.” தளபதி வீரமுழுக்கமிட்டான்.

“அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!”

“சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.”

“தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, “யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!’ என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.”

“உத்தரவு மன்னா!”

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர்.

நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.

நாம் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.