Story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 ஒரே நாளில் 4 கோடி பாடல் எழுதிய  ஔவையார்  


ஒரே நாளில் 4 கோடி பாடல் எழுதிய  ஔவையார்

ஒரு சமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார். 

நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் "என்ன வருத்தம்?" என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, அவ்வையார் இளமுருவலுடன் " இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள் கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்" என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கிநிற்க, அவ்வையார் " ஒவ்வொரு பாடலும் ஒருகோடி பொன் மதிப்புடையது சென்று கொடுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

 புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப்புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் ஆமாம்.

அவ்வையார் இயற்றியதுதான் எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் என்பது வரலாறு. 

அந்த நான்குகோடி பாடல்கள்: 

1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்.

நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாமல் வாழ்பவர் வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். அல்லது மதிக்காதவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது எனவும் பொருள் கொள்ளலாம். 

2. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும். 

உணவை அருந்த அன்புடன் அழைக்காமல், வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம். 

3. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்.

 கோடி பொன்னைக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்.

4. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும். 

கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், சொன்ன சொல் மாறாமல் வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்.


மூன்று விதைகள்

மூன்று விதைகள்


ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.

அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவன், ” ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்” என்றான்.

” என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்” என்று கோபத்துடன் சொன்னார் அவர்.

சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். தன் மனைவியிடம்,” நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினான்.

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.

இதைப் பார்த்த அவன் மனைவி ” நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்” என்று கணவனிடம் சொன்னாள்.

”பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான் அவன்.

கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.

அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.

அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.

சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.

” இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.

அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.

அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. ” இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.

மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. ” இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது ” இதை சன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன்.

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.

என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.

மகிழ்ச்சி அடைந்த அவன், ” இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றான்.

” வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்” என்றாள் மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.

சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.

அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.

உழவன் சில நாள்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார்.

அவனிடம் வந்த அவர், ” டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்” என்று கேட்டார்.

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான்.

தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.

அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.

” பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார்.

கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது.

” மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்” என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ” ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது.

எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார்.

மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.

அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார்.

அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அவரையும் அந்த மாளிகையையும் ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது.

கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.

மூன்றாவது பூசனிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை. அதற்குள் பாம்பு, தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

ஆபத்து காலத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு


ஆபத்து காலத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு
  

காட்டில் பலம் கொண்ட ஒரு யானை வாழ்ந்துவந்தது. அதன் பெரிய உருவம் கண்டு மற்ற விலங்குகளும் பறவைகளும் ஒதுங்கியே இருந்தன. இதனால் யானை நண்பர்கள் இன்றி, தனிமையில் தவித்தது. தன்னோடு நட்புடன் பழக ஒரு நண்பனைத் தேடியது. நாமே சென்று ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தது. வழியில் ஒரு மரத்தில் குரங்கைக் கண்டது.

" குரங்கே, நான் யாருடைய நட்பும் கிடைக்காமல் மிகவும் மன வேதனையில் உள்ளேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?" என்றது.அதை கேட்டதும் குரங்கு, 'ஹி..ஹி...' என்று சிரித்தது.

"ஏன் சிரிக்கிறாய்?

"யானையாரே, நான் மரத்துக்கு மரம் தாவுபவன். நீரோ தரையில் நடப்பவர். நாம் எப்படி நண்பர்களாக முடியும்? என்னைப் போல உங்களால் மரம் தாவ முடிந்தால் மட்டுமே நட்பு சாத்தியம்” என்று சொல்லி விட்டு ஓடியது.

அடுத்ததாக மரத்தின் மீது அமர்ந்தபடியே ‘கூக்கூ கூக்கூ' என்று குயில் கூவியதைக் கேட்டது யானை.

‘ஆஹா! என்ன இனிமையான குரல் வளம். இந்தக் குயிலிடம் நட்புகொண்டால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று நினைத்த யானை, ”குயிலே, என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?" என்று கேட்டது.

"என்னைப் போல உம்மால் இனிமையாகப் பாட முடியுமா? அப்படிப் பாடுவதாக இருந்தால் நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன்" என்றது குயில்.

யானை சோகத்துடன் திரும்பி நடந்தது. பாதையில் மயில் ஒன்று தன் தோகையை விரித்து அழகாக ஆடிக்கொண்டிருந்தது. மயிலின் ஆட்டத்தைக் கண்ட யானை, மெய் மறந்து நின்றது.

'ஆஹா! மயில் எவ்வளவு அழகாக ஆடுகிறது! இதனோடு நட்பு கொண்டால் தினமும் இதன் ஆட்டத்தைக் கண்டு ரசிக்கலாம்’ என்று நினைத்த யானை, மயிலிடம் தன் விருப்பத்தைக் கூறியது.

"யானையாரே, நீர் ஆசைப்படுவது விநோதமாக உள்ளது. என் திறமைக்கு முன்னால் நீங்கள் எல்லாம் பூஜ்யம். தள்ளிப் போங்கள்" என்று தோகையை ஆட்டிக்கொண்டே சென்றுவிட்டது.

அப்போது ஓர் எலி வந்தது. உடனே தன் கோரிக்கையை வைத்தது யானை.

"யானையாரே, உம்மோடு நட்புகொள்ள எனக்கும் ஆசைதான். ஆனால் நம் இருவருக்கும் உருவ வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமாக உள்ளது. நீங்கள் என்னைப் போல உருவத்தைச் சிறியதாக்கிக் கொண்டு வந்தால் அப்போது நட்புகொள்ளலாம்" என்றது எலி.

சட்டென்று புதரிலிருந்து வெளியே வந்தது ஒரு புலி. அதன் பிடியில் குரங்கு மாட்டிக்கொண்டு உயிருக்குப் போராடியது. அதன் வேதனைக் குரல் கேட்ட யானை, ஓடிவந்து புலியுடன் போராடியது.யானையின் பலத்தை, புலியால் சமாளிக்க முடியவில்லை. யானை புலியைத் தூக்கி வீசியது.

"என்னை விட்டு விடு. இனி நீ இருக்கும் பக்கமே வர மாட்டேன்" என்று சொல்லி விட்டுத் தலைதெறிக்க ஓடி மறைந்தது புலி. அதுவரை மறைவில் நின்று வேடிக்கை பார்த்த குரங்கு, மயில், குயில், எலி எல்லாம் வெளியில் வந்தன.

"யானையாரே, எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள்தங்களை மிகவும் இழிவாகப் பேசிவிட்டோம். இந்தப் புலியால் பலர் உயிரை இழந்துள்ளார்கள். தக்க சமயத்தில் புலியிடமிருந்து எங்களைக் காப்பாற்றியதுடன் எங்களுடைய கர்வத்தையும் அழித்துவிட்டீர்" என்று உருக்கமாகப் பேசியது குரங்கு.

"என்னையும் மன்னித்துவிடுங்கள். ஆபத்து காலத்தில் உதவுவதுதான் நல்ல நண்பனுக்கும் உண்மையான நட்புக்கும் இலக்கணம் " என்றது மயில்.

"யானையாரே, உம்மை நண்பராக அடைவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றது குயில்.

தனக்கு நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியை அவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தது யானை.


 பணம் சேர்ப்பது எப்படி?

பணம் சேர்ப்பது எப்படி?

பணம் சேர்ப்பது தவறல்ல. அதை எப்படி சேர்க்க வேண்டும் .

* வெறும் பகட்டின் மூலம் சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவில் குறைந்து போகும். ஆனால் உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குகிறான்.

* பொய் சொல்லித் திரட்டும் பெரும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்றே.

* செல்வம் என்றுமே நிலையானதல்ல. கிரீடங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை.

* எரிக்கும் உஷ்ணத் துடன் சூரியன் உக்கிரமாக உதயமானவுடனேயே, புல் பூண்டு மீது பட்டு அது உலர்கிறது. செடியின் பூக்கள் உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது. அது போலவே செல்வந்தனும் தன் போக்குகளினால் அழிந்து போகிறான்.

பணத்தை நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும். தன் தேவை போக மிஞ்சியதை தேவைப்படுவோருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் சேர்த்த பணத்திற்கு மரியாதை கிடைக்கும்.

 குறுக்கு வழி

குறுக்கு வழி

சாதாரண விஷயத்துக்குக் கூட குறுக்கு வழியை கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நாளை எதையுமே நேர் வழியில் செய்ய மனசு வராது. அது கடைசியில் நமக்கு கெட்டப் பெயரையும், அவப் பெயரையும்தானே தேடித் தரும். எப்போதும் நேர் வழியில் செல்லுங்கள்.. அது உங்களது கெளரவத்தை உயர்த்தும்,மனசுக்கு நிம்மதி தரும். பெருமையுடன் நடக்க சக்தி தரும்.


 ஏன் சோகமாக இருக்கிறீர்கள் நஷ்டம்

நஷ்டம்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு இவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றால் அவர்.

"50 கோடி ரூபாய்" என்றார் இவர்.

"அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் "ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்

இவர் "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.

அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

நஷ்டம் கஷ்டம் உங்களை திரும்பிபார்க்க  வைக்கும்

உண்மை

உண்மை

 ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு நல்ல நீதிக் கதைகளைக் கூறி வளர்த்து வந்தார். அந்தத் தாய், கஷ்டப்பட்டாலும் தனது மகன் நல்லவனாக பிற்காலத்தில் வாழ்ந்து சிறப்புப் பெற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள்.

உண்மைஅதனால் அவனுக்குத் தீய பழக்கங்கள், தீய நண்பர்கள் சேர்ந்துவிடாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

அவன் வாலிபனான். வேலைக்குச் சென்றால்தான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

வேறு ஒரு ஊருக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. தாயைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற வருத்தம் இருந்தாலும், நன்கு வேலை பார்த்துத் தாயைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஊரை விட்டுக் கிளம்பினான்.

அவன் ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தாய் மிகுந்த அக்கறையுடன் செய்து முடித்தாள். அவன் கிளம்பும் நாள் வந்த போது தாய் அவனிடம் -

“மகனே! உனக்கு என்ன நேர்ந்தாலும் உண்மை பேசுவதை மட்டும் விட்டுவிடாதே! எங்கும் எப்போதும் யாரிடத்திலும் உண்மையை மட்டுமே நீ பேச வேண்டும். இதை மட்டும் மறக்காதே!’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

அக்காலத்தில் எங்கு சென்றாலும் நடைப் பயணம்தான். வாகன வசதிகள் கிடையாது. ஆகவே, அந்த வாலிபன் ஒரு கூட்டாத்தாருடன் சேர்ந்து தனது பயணத்தைத் துவக்கினான்.

செல்லும் வழியில் சில கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தை வழிமறித்தனர். கூட்டத்தினரிடம் இருந்த பொருள்களையெல்லாம் பறித்தனர்.

அந்த வாலிபனிடம் ஒரு கொள்ளையன் வந்து, “உன்னிடம் என்ன உள்ளது?’ என்று கேட்டான்.

அப்போது, அந்த வாலிபன் தனது தாய் சொன்னது போல, மறைக்காமல் உண்மையைக் கூறினான் -

“என்னிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே உள்ளன…’

கொள்ளையர்கள் அவனைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஆச்சரியமைடந்தனர். அவன் சொன்னது போலவே அவனிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே இருந்தன.

கொள்ளையர்களின் தலைவன் அசந்து போனான்.

அந்த சிறிய வாலிபனிடம் இருந்த உண்மை பேசும் குணம் கொள்ளையனின் மனதைக் கரைத்தது.

ஆபத்திலும் இவ்வளவு நேர்மை, உண்மை ஒரு மனிதனிடம் காணப்பட்டதைக் கண்டு மனம் மாறினான்.

அன்றே தனது திருட்டுத் தொழிலை விட்டுவிட முடிவெடுத்தான். அவர்களிடமிருந்து திருடிய பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்ல மனிதனாக மாறி உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பிச் சென்றான், 

இந்த உலகம் கண்ணாடி மாதிரி 

அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும், எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி" என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?" பெரியவர் சிரித்துக்கொண்டே,

"ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.

"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்.

"அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர்  "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.

 உண்மை பேசுவோம் 



அது ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். 

முத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவன் மாலையில் வீடு திரும்புவான்.

ஒரு நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான்.

காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.

தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென "புலி வருது, புலி வருது", என்று கூச்சலிட்டான்.

ராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் "புலி எங்கே" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, "புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.

அடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.

மூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே "புலி வருது, புலி வருது" என்று கூச்சலிட்டான்.

ராமு அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.

பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது.

நான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான்.

ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என  நம்ப மாட்டார்கள்.

கடுமையான முயற்சி 

கடுமையான முயற்சி

 போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

     புலவரை வென்ற தெனாலிராமன்    

தெனாலிராமன் கதைகள்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான்.

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.

மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.


கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் ..!

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் ....!

மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.

வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.

தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.

அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.

வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.


மன்னன் மூவன் 

நாம் வாய்க்கு வந்ததையெல்லாம் பேச கூடாது..!

சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.

இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார்.

புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.

“அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.”

ஓ, அப்படியா செய்தி!”

“நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!”

“இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!”

“அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.”

“நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்… யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.”

“இல்லை, நானே சென்றுவிடுகிறேன்.”

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான்.

மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.

“என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!” எனத் துõதுவனை
அனுப்பினான்.

மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, “”மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்,” என்றான்.

“கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்… இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?”

“மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.”

“தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.”


“எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.”

“உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.”

“உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.”

“அடே தூதுவனே… இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!”

தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

“தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்,” என்று முடிவு கட்டினான் இரும்பொறை.

“மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்.” தளபதி வீரமுழுக்கமிட்டான்.

“அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!”

“சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.”

“தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, “யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!’ என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.”

“உத்தரவு மன்னா!”

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர்.

நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.

நாம் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்..! 🤼மக்களே   உஷார்..!

                                   

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்..! 🤼மக்களே   உஷார்..!

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

😂😂😂

ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

🤔

இதைக் கண்டுப் பலர் வியந்தனர். 

இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

😄

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.😊

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂

.

.

.சார் நீங்க, 


நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன். 

.

.நானும் வரேன். 

.

.

.சார் நானும் 

.

.

.ஐயா வாங்க 

.

.

.அம்மா வாங்க 

.

.

.

.அக்கா நீயுமா 

.

'

'வா வா, உக்கார்ந்து. 

..400, ரூவா, 

.

.

.வாவா 

.

.

.

.


அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.🤣

"வாங்க சார்... வாங்க சார்...

ஸ்டராங்கான நாற்காலி சார்...

இது சீக்கிரத்துல உடையாது சார்...

😂😂

400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்.


😩😩😩😩😂

நீதி :

வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. 

நல்லா யோசிக்கணும்.

சாத்தியமான்னு பார்க்கணும்.

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.

😊😊😊😊😊😊😊😊😊

 இனி வருவது தேர்தல் காலம் ..!

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்

 சிந்தித்து செயல்படுங்கள்  மக்களே..!

                                                தொழிலதிபரின் மகன்  சேட்டை...!

தொழிலதிபரின் மகன்  சேட்டை...!

ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் அதிக தீய பழக்கங்கள் கொண்டவனாக விளங்கினான்; அவனை திருத்த எவ்வளவோ முயன்றும் அந்த தொழிலதிபரால் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால், அவர் ஒரு வயது முதிர்ந்த ஞானியிடம் தனது பையனைத் திருத்த உதவி கேட்டார்.அந்த ஞானியும் ஒப்புக்கொண்டு அத்தொழிலதிபரின் பையனை சந்தித்து நடை பயணம் மேற்கொள்ள அழைத்து சென்றார்.

அச்சமயம் அவர்கள் இருவரும் வனப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கையில், அந்த வயதான ஞானி சிறுவனிடம் ஒரு சிறு செடியைக் காட்டி, “அதை உன்னால் பிடுங்க இயலுமா?” என்று கேட்டார்; சிறுவனும் உடனே அதைப் பிடுங்கிக் காட்டினான். பின்னர் ஞானி சற்று பெரிய தாவரத்தை காட்டி, “இதை பிடுங்க இயலுமா?” என வினவினார்; சிறுவனும் எளிதாகப் பிடுங்கிக் காட்டினான்.

சற்று தூரம் சென்ற பின் ஒரு முட்புதரைக் காட்டி, இதனைப் பிடுங்கிட முடியுமா என்று வினவ சிறுவனும் தனது சக்தியைப் பயன்படுத்தி அதைப் பிடுங்கிக் காட்டினான்; பின்னர் ஞானி ஒரு சிறிய மரத்தைக் காட்ட, பெரும்முயற்சி மேற்கொண்டு சிறுவன் அதை சாய்த்துக் காட்டினான். இப்பொழுது ஞானி வயது முதிர்ந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டி பிடுங்குமாறு சிறுவனிடம் கூற, சிறுவன் செய்வதறியாது நின்றான். அப்பொழுது ஞானி சிறுவனிடம், “பழக்கங்களும் இது போன்றதே!தீயப் பழக்கத்தை முளையில் கிள்ளி எறிந்துவிடலாம். ஆனால் அது வளர்ந்து விட்டால், அதிலிருந்து விடுபட்டு நற்பழக்கங்களை மேற்கொள்வது கடினம்.” என்று கூறினார்.

 தீய பழக்கங்கள் நமது வழக்கமாகி விட்டால், அவற்றிலிருந்து மீள்வது கடினம்; ஆகையால், அவற்றை ஆரம்ப கால கட்டத்திலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.


உன்னைப்போல் பிறரையும் நினை...!

 ஒரு நாள் ஒரு நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்; அச்சமயம் ஒரு புதரில் ஓர் பூனை மாட்டிக்கொண்டு விடுபட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. புதரில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாததால் பூனை மிரண்டு போயிருந்தது.அதன் நிலையைக் கண்ட அந்த நபர் அதற்கு உதவ முற்பட்டார். புதரில் மாட்டியிருந்த பூனையை வெளியே கொண்டு வர முயற்சிக்கையில் பூனை தனது கரங்களால் அந்த நபரை கீறி, காயத்தை ஏற்படுத்தியது.

அந்த நபர் ஒவ்வொரு முறை அதைத் தொட்டு விடுவிக்க முயற்சிக்கையிலும், அப்பூனை இவ்வாறு கீறுவதை தொடர்ந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு நபர் இதைப் பார்த்துவிட்டு, பூனைக்கு உதவ முயலும் நபரிடம், “அப்பூனையை அப்படியே விட்டு விடுங்கள்; வீணாக நீங்கள் காயம் அடைவது ஏன்? அதுவே வெளியே வந்து விடும் என்று அறிவுறுத்தினார்.”

ஆனால் பூனைக்கு உதவிக்கொண்டிருந்த நபர், மற்றொரு நபர் கூறிய அறிவுரையைக் காதிலேயே வாங்கி கொள்ளாமல், பூனையை விடுவிக்க முனைந்தார். பின்னர் அந்த நபரிடம், “பூனை ஒரு மிருகம்.அதனால் அது அதன் தன்மையை வெளிப்படுத்தியது. நான் ஒரு மனிதன.ஆக நான் எனது மனிதத்தன்மையை வெளிப்படுத்தினேன்.” என்று கூறினார்.

உன்னைப்போல் பிறரையும் நேசி! உனக்கான குறிக்கோள் மற்றும் கொள்கைகளை நீயே வகுத்து, அதன்படி நடக்க முயல்...!

 விசாரணை

விசாரணை..!

இரவு நேரம் 2 போலீஸ் அதிகாரிகள். கார்த்திக் மற்றும் அவரின் உதவியாளர் பிரவீன். அந்த ஊரின் அருங்காட்சியகம் நோக்கிச் சென்றனர். அந்த இடத்தைச் சென்று அடைந்ததும் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ‘வணக்கம் சார்’ என அங்கு ஏற்கனவே கூடி இருந்த சில காவலர்கள் இருவரையும் வரவேற்றனர். இந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று  கார்த்திக் உத்தரவிட்டார். 

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இரண்டு பழங்காலத்து சிற்பங்கள் மற்றும் சில வைரங்களைக் கொள்ளையர்கள் திருடி விட்டனர். இதைக் கவனித்து போலீசுக்கு அங்கிருந்த அருங்காட்சியகத்து காவலாளி தகவல் தெரிவித்துள்ளார்.

நடந்தவற்றை போலீஸ் கேமராவில் அங்கிருந்த காவலாளியின் உதவியுடன் பார்த்தனர். அங்கிருந்த நுழைவு வாயில் கேமராவுக்கு நேராக வந்த ஒரு முகமூடி அணிந்த திருடன், அந்தக் கேமராவை உடைத்தான். பின்பு நேராகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, அந்தத் திருடன் அருங்காட்சியகத்தின் அனைத்து கேமராக்களையும் நிறுத்துவது போன்ற காட்சிகளைப் பார்த்தனர்.

அவர்கள் சந்தேகப்படும்படி இருந்த அனைத்தையும் நோட்டமிட்டனர். கேமராவை நோக்கிச் சரியாக அந்தத் திருடன் நடந்து வருவதையும் எந்த ஒரு குழப்பமுமின்றி நேராகக் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்வதையும் கவனித்த அவர்களுக்கு இந்த இடத்தை ற்றி நன்கு தெரிந்த ஒருவர் தான் இதன் பின்னால் இருப்பதாக உணர்ந்தனர்.

தற்போது அவர்களின் சந்தேகம் மூன்று நபர்கள்மீது பாய்ந்தது.

ஒன்று அந்த அருங்காட்சியகத்தின் மேலாளர். அவருக்குத் தான் கட்டுப்பாட்டு அறை எங்கே இருக்கிறது என்ற விவரம் அனைத்தும் தெரியும்.

இரண்டாவது அருங்காட்சியகத்தின் காவலாளி. தினமும் ரோந்து போகும் அவர் திருடர்கள் வரும் நேரம் உறங்கியது சந்தேகத்தைத் தூண்டியது. மேலும் காவலாளிக்கும் கட்டுப்பாட்டு அறைபற்றிய தகவல்கள் தெரியும்.
 
மூன்றாவது அந்த அருங்காட்சியகத்திற்கு எதிரே புதிதாகக் குடி வந்திருந்த நபர். அந்த வீட்டிற்கு யாருமின்றி தனியாக அவர் மட்டும் நான்கு வாரங்கள் முன்பு குடி வந்திருந்தார். நுழைவு வாயிலின் வருகை பதிவேட்டில் அவரின் பெயர் பல முறை காணப்பட்டது. அருங்காட்சியகத்தைப் பல முறை சுற்றிப் பார்த்துப் பின் சரியான நாளுக்காகத் திட்டமிட்டு இருக்கலாம் என்று தோன்றியது.

முதலில் அங்கிருந்த அருங்காட்சியகத்தின் காவலாளியை அழைத்து விசாரித்தனர். ‘தினமும் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருக்கும் நீ நேற்று மட்டும் உறங்கியதாகக் கூறுகிறாய். சரியா?’ என்று கார்த்திக் தொடங்கினார்.

‘சார். நான் 11 மணிக்கு ரோந்து செல்வேன். நேற்று என்னவென்று தெரியவில்லை தேநீர் அருந்திய பின்பும் தூக்கம் வந்துக் கொண்டே இருந்தது. என்னை அறியாமல் உறங்கிவிட்டேன். 1 மணிக்குப் பொருட்கள் திருடு போன சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். போலீசுக்கு உடனே தகவல் அளித்தேன்’ என்று பதில் அளித்தார்.

கார்த்திக் பிரவீனிடம் ஏதோ செய்கை செய்ய ‘சரி நீ செல்லலாம்’ என்றான் பிரவீன்.

அருங்காட்சியகத்தில் திருட்டு நடந்துள்ளது என்ற செய்தியைத் தெரிவித்து மேலாளரை நல்லிரவிலே அழைத்தனர். அவரிடம் விசாரணையைத் தொடங்கினர்.‘சம்பவம் நடக்கும்பொழுது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’ என்று பிரவீன் தொடங்கினான்.

‘சார் திருட்டு நடந்த 11 மணிக்கு நான் ஊரிலே இல்லை. என் நண்பனைக் காண பக்கத்து ஊருக்கு இரயிலில் சென்றுக் கொண்டிருந்தேன். காவலர்கள் என்னைத் தொடர்புக் கொண்டு திருட்டு நிகழ்ந்ததை கூறியதும், அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கி வேறு இரயில் பிடித்து இங்கே வந்தேன்’ என்று கூறினார் மேலாளர்.

‘சரி நீங்கப் போகலாம்’ என்று கார்த்திக் கூறினான். ஆனால் பிரவீனை உடனே அழைத்து அவர் கூறிய தகவல்களைச் சரி பார்க்கும்படி உத்தரவிட்டான். பிரவீன் விசாரித்ததில் அனைத்து தகவல்களும் உண்மை தான் என்று இரயில் நிலையத்தின் கேமராக்கள் மற்றும் பயனியர் தகவல்களைப் பார்த்ததில் தெரிந்தது.

அருங்காட்சியகத்திற்கு எதிரே தங்கியிருந்தவரை விசாரணைக்கு அழைத்தனர்.

‘இங்கு நடந்த திருட்டை பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? சந்தேகத்திற்குரிய வகையில் எதையாவது பார்த்தீர்களா?’ எனக் கேட்டான் பிரவீன்.

‘தினமும் இரவு சுமார் 11 மணிக்கு என் வீட்டிலிருந்து அருங்காட்சியகத்தை எதர்ச்சியாகப் பார்ப்பேன். ஒரு டார்ச் லைட் வெளிச்சம் மட்டும் தெரியும். இரவு ரோந்து பணியைக் காவலாளி மேற்கொள்வதாக நினைப்பேன். நேற்று இரவும் அவ்வாறு ஒரே ஒரு டார்ச் லைட் தெரிந்தது, ரோந்து பணியாக இருக்கும் என்று தான் நினைத்தேன். சந்தேகத்திற்குறிய வகையில் எதுவும் எனக்குத் தென்படவில்லை’ என்றுக் கூறினான் எதிர்வீட்டுக்காரன்.

‘சரி, நீ அருங்காட்சியகத்திற்கு அடிக்கடி வருவதற்கு காரணம் என்ன?’ என்று கார்த்திக் கேட்டான்.

‘சார், நான் வீட்டில் தனியாக வசிக்கிறேன். பேச்சு துணைக்கு யாருமில்லை. தனிமையை உணரும் வேளையில் எதிரே இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் பொழுதைக் கழிப்பேன்’ என்று பதில் உரைத்தான் எதிர் வீட்டுக்காரன்.

‘சரி, நீ செல்லலாம்’ என்று சிந்தித்தப்படி கூறினான் கார்த்திக்.

கார்த்திக்கும் பிரவீனுக்கும் 'யார் திருடியிருப்பார்?' என்று குழப்பமாக இருந்தது. அனைவர் கூறியதும் உண்மையாக இருந்தது. இருவரும் பல கோணங்களில் ஆழ்ந்து யோசித்துக் கொண்டே இருந்தனர்.

விசாரணையிலிருந்து சரியான காரணத்துடன் குற்றவாளியை கார்த்திக்கும் பிரவீனும் கண்டுபிடித்து விட்டனர். 

இவர்கள் மூவரில் யார் குற்றவாளியாக இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காரணத்துடன் குறிப்பிட மறவாதீர்கள்.

காளானால் கனத்த இதயம்..!

 வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து Software Engineer ஆக பணிபுரியும் கார்த்திக், வேலையே முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் மாலை நேரம் மறைந்து சற்றே இருள் சூழ்ந்த நேரத்தில் பேருந்திலிருந்து இறங்கினான். வரும் வழியில் சற்று பசிக்கவே, ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று நினைத்து கடைத் தேடினான். சற்று தொலைவில், சிறு கூட்டம் சூழ்ந்து, சிறு விளக்கு ஒன்று மிளிர, ஒரு சிறு வண்டி கடையை ஒன்று இருந்ததைக் கண்டான்.

சற்று அருகில் சென்று பார்த்தான். அது ஒரு தள்ளு வண்டி கடை.  அங்கு சிலர் தங்களுடைய ஆர்டர்களை தெரிவித்துவிட்டு காத்திருந்தனர். கார்த்திக் சற்றே பார்த்தவண்ணம், “அண்ணா, எனக்கு காளான் ஒரு ப்ளேட்”  என்று கூறிவிட்டு வேடிக்கை பார்கத்துவங்கினான். அங்கு மாட்டபட்டிருந்த பலகையில், விலைப்பட்டியல் எழுதப்பட்டிருந்தது. கார்த்திக்கின் கண் பார்வை அதையும் கடந்து சென்றது.

சற்று நேரத்தில் “சார், காளான் ரெடி” என்று குரல் கேட்டது. கார்த்திக் உடனே அதை பெற்று கொண்டான். சற்று மெதுவாக ஊதி விட்டு, சாப்பிட ஆரம்பித்தான். அங்கு காளான் விற்பவரின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர்களுக்குள் சிறு உரையாடல். கார்த்திக் அதை கேட்டுகொண்டிருந்தான்.

“என்னப்பா, ராஜவேலு. எப்படி இருக்க. இன்னிக்கி என்ன லேட்டா கடைய போட்டிருக்க?” என்றான் நண்பர்.

“ஆமப்பா. கொஞ்சம் உடம்பு முடியல. அதனாலதாம்பா.” என்றான் சற்று தோய்ந்த குரலுடன் காளான் கடைக்காரன்.

நண்பர், “அப்டின்னா கடைய மூடிட்டு, இனிக்கு ஒருநாள் ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதானே”.

காளான் கடைக்காரன் “பெருசாலாம் ஒன்னு இல்லப்பா. அதுவும் இல்லாம, லீவ் எடுத்துட்டா யாவாரம் நிக்காதுப்பா. அதாம்ப்பா லேட் ஆனாலும் கடைய கொஞ்ச நேரத்துக்கு போடலாமுன்னு வந்துட்டேன்”.

இதைகேட்டுகொண்டிருந்த கார்த்தி தன மனதில் “பாவம் இவர். தினசரி உழைத்தால்தான் வண்டி ஓடும் போல இருக்கு. காளான் 25 ரூவாய், மசாலா சுண்டல் 20 ரூவாய், பாணி பூரி 20 ரூவாய். ம்ம் இத வச்சிட்டு எப்படிதான் இந்த சென்னைல இருக்காரோ” என்று நினைத்துக்கொண்டே தன் நிலைய சற்று பெருமையாக எண்ணிகொண்டான்.

சற்று நேரத்தில் அவர் நண்பர் அங்கிருந்து நகர்ந்தார். கார்த்திக் காளானை சாப்பிடும்போதே “அண்ணா கார்ன் கொஞ்சம் போடுங்க னா” என்று கேட்டு வாங்கி சாப்பிடுவதை தொடர்ந்தான்.

சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை நிறைய தட்டுகள் குமிந்துள்ள இடத்தில் வைத்துவிட்டு கையை கழுவிவிட்டு, தண்ணீர் குடித்தான். தன் பர்சில் உள்ள 100 ரூபாயை எடுத்து நீட்டினான். காளான் கடைக்காரரும் அதை வாங்கிகொண்டு கல்லாவை திறந்து நோட்டுக்களை அள்ளினார். அதில் சில நோட்டுக்களை எடுத்து மற்றும் சில்லறையையும் சேர்த்து திருப்பிக்கொடுத்தார்.

அதைப்பார்த்த கார்த்தி, “நிறைய சில்லறை வைத்திருப்பார் போல” என எண்ணிக்கொண்டே, “தேங்க்ஸ் னா” என்றான்.

கார்த்தி “அண்ணா எவ்ளோ நேரம்னா கடை இருக்கும்” என்று எதேச்சையாக வினவினான்.

கடைக்காரர் “இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் ப்பா. இன்னிக்கி கொஞ்சம் டல் தாம்பா. மொத்தமே ரெண்டு மணி நேரம்தான் போட்டிருக்கேன்” என்று கூறிக்கொண்டே தன்னிடம் வந்த ஆர்டருக்கானவற்றை செய்துகொண்டிருந்தார்.

கடைக்காரர் “நான் வழக்கமா நாலு மணிநேரம் கடைய போடுவேன். இனிக்கி வெறும் ரெண்டு மணி நேரம் தாம்பா. வெறும் அம்பது பேரு யாவாரம் தாம்பா ஓடும்” என்று வேகமாக வேலை செய்துகொண்டே.

இதை கேட்ட கார்த்திக்குக்கு சற்று “திக் திக்” என்று இருந்தது. சற்றே அவனின் கணக்கை துவங்கினான் தன மனதில்.

“இன்று ஐம்பது பேர் என்றால், ஒருத்தன் கிட்ட 20 ரூபாய் யாவாரம்னு வச்சிகிட்டா, 50 இண்ட்டு 20  இஸ் ஈகோல்ட்டு 1000.” சற்றே வியந்தான்.

“அப்டின்னா 100 பேருன்னா ரெண்டாயிரம். ஒரு மாசத்துக்கு முப்பது நாள் போட்டா, அறுபதாயிரமா” என்று அசந்து போனான்.

இருந்தாலும் அதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்து கடைக்காரரிடம் சாதரணமாக கேட்டான். அவரும் “சர்வ சாதாரணமாக ஆமப்பா, எப்படியும் அறுபது வந்திடும்ப்பா” என்றார்.

கடைக்காரர் “சென்னைல நாப்பதுக்கு குரைஞ்சி சம்பாதிச்சா சமாளிக்க மிடியுமாபா.” என்று கூறிவிட்டு அடுத்த ஆர்டரை வாங்கிவிட்டு “சார் காளான், சுண்டல் ரெடி” என்று உரைத்தார்.

கார்த்திக் சற்று கலக்கத்துடன் “நாமளும்தான் மாங்கு மாங்குன்னு இன்ஜினியரிங் படிச்சோம். வேலைக்கு வந்து 3 வருஷம் ஆச்சி. வெறும் முப்பதாயிரம் தான் வாங்குறோம். அவர் என்னடானா 40 இருந்தான் வாழலாம்னு சொல்றாரு. மாசா மாசம் சிக்ஸ்டி தௌசண்ட் டேக் ஓவர் ஆஹ். அதுவும் ஒரு நாளைக்கு வெறும் நாலு மணிநேரம் தான் வேலை. அவருக்கு யாரும் முதலாளி இல்ல, அவரே முதலாளி. முக்கியமா அவரு நினைக்குக்போது லீவ் எடுத்துப்பாரு. டாக்ஸ் தொல்லையே இல்ல..ம்ம் மனுஷன் வாழ்றாரு. பேசாம நாமளும் காளான் சுண்டல் கடைய போற்றலாம்போல” என்று கனத்த இதயத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் கார்த்திக்.

உங்களுக்கு இது போன்ற ஏதாவது அனுபவம் இருந்தால் அது யாரைப்பார்த்து “அவர்களை போல நாமளும் கடைய போடலாம் போல” என்று தோன்றியிருந்தால், அவரை பற்றிய உங்கள் அனுபவத்தை பின்னூட்டத்தில் இடுங்கள். இதை உங்கள் நண்பர்களுடன் பகிர நினைத்தால், Share பொத்தானை அழுத்தி பகிருங்கள்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.