பதிவு செய்த நாள் :
ஞாயிற்றுக்கிழமை,
டிசம்பர் 01,
6:00 PM IST
கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சுய தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின்கீழ் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
உற்பத்தி
தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சமும், சேவைத் தொழில்களுக்கு அதிகபட்சம்
ரூ. 3 லட்சமும், வியாபாரத் தொழில்களுக்கு ரூ. 1 லட்சமும் வங்கி கடனாக
வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட
தனிநபர்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர்
அதிகபட்சம் 35 வயதுக்குள்ளும், சிறப்புப் பிரிவினர் 45 வயதுக்குள்ளும்
இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1
லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் திட்ட
மதிப்பில் 10 விழுக்காடும், சிறப்புப் பிரிவினர் 5 விழுக்காடும்
பங்களிப்பு செய்ய வேண்டும். மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும்.
இக்கடன் பெறுவதற்கு சொத்துப் பிணையம் தேவையில்லை.
அடுமனைப்
பொருட்கள், பொறியியற் கூடங்கள், ஆயத்த ஆடைகள், விசைத்தறி, பாக்குமட்டை
தட்டு, ஹாலோ பிளாக், கயிறு தொழில்கள் போன்ற உற்பத்தி தொழில்களும், அழகு
நிலையங்கள், கணினி மையங்கள், கைபேசி பழுது நீக்கம், வாகன பழுது நீக்கம்,
ஆட்டோ, ரத்த பரிசோதனைக் கூடம், போட்டோ மற்றும் வீடியோ கவரேஜ், கட்டுமானப்
பொருட்கள் வாடகைக்கு விடுதல், அலங்கார பந்தல் வாடகைக்கு விடுதல்,
குளிர்சாதனப்பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டி பழுது நீக்கம், உள்
அலங்கார வேலைகள், வீட்டு உபயோக தொழில் நுட்ப பணிகள் ஆகிய சேவைத் தொழில்கள்
இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
நடப்பு
நிதியாண்டில் இத்திட்டத்தில் 225 நபர் களுக்கு ரூ. 84.90 லட்சம்
மானியத்துடன் கூடிய ரூ.5 கோடியே 66 லட்சம் கடன்கள் வங்கிகளால்
ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 208 நபர்களுக்கு தொழில் மேலாண் பயிற்சி
வழங்கப்பட்டு, 100 நபர்களுக்கு ரூ. 38.66 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 2
கோடியே 57 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்
பயன்கள் ஊரக பகுதி தொழில் முனைவோர்களுக்கும் கிடைக்கும் வகையில், ஒவ்வொரு
வட்டாரத்திலும் விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் உடனடி நேர்காணல்கள்
நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 9 ஊராட்சி ஒன்றியங்களில் இக்கூட்டங்கள்
நடத்தப்பட்டு, 408 விண்ணப் பங்கள் வங்கி கிளைகளுக்கு பரிந்துரைக்கப்
பட்டுள்ளன.
03.12.2013 செவ்வாய்க் கிழமை பொள்ளாச்சி (தெற்கு),
04.12.2013 புதன்கிழமை பொள்ளாச்சி (வடக்கு), 05.12.2013 வியாழக்கிழமை
ஆனைமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் காலை 10.30 மணி முதல்
விழிப்புணர்வு கூட்டங்களும், அவற்றை தொடர்ந்து உடனடி கடன் திட்ட
நேர்காணல்களும் நடத்தப்படவுள்ளது.
இக்கடன் திட்டத்திற்கான
விண்ணப்பம், ஆவண இணைப்புகள் மற்றும் தொழில் திட்டங்களை www.dickovai.com
என்ற வலைதளத்திலிருந்து மனுதாரர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, எந்திர கொள்முதல்
விலைப் பட்டியல், கல்வி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை அல்லது
இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இரட்டை
நகல்களில் மனுதாரர் நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியும்,
ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள் சாத்தியக்கூறுள்ள தொழில் திட்டங்களை
தேர்ந்தெடுத்து இந்த நேர்காணல்களில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
கோவை
மாவட்டத்தில் உள்ள ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெத்தநாயக்கனூர்
மற்றும் பில்சின்னாம்பாளையம் ஊராட்சிகளிலும், சுல்தான் பேட்டை ஊராட்சி
ஒன்றியத் திற்குட்பட்ட பாப்பம் பட்டி மற்றும் பூராண்டாம் பாளையம்
ஊராட்சிகளிலும், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தேவராயபுரம்
ஊராட்சி யிலும், சூலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மயிலம் பட்டி
ஊராட்சியிலும் தமிழக அரசின் விலை இல்லாத ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ்
பயனாளிகள் தேர்வு செய்தல் தொடர்பாக வருகிற 10, 19–ந் தேதிகளில் காலை 11
மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆனைமலை,
கூல்தான் பேட்டை, சூலூர், அன்னூர் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி
ஒன்றியங்களுக் குட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொது மக்கள்
தங்கள் ஊராட்சியில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல்
கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார
இயக்கத்தின் கீழ் கிராமப்புறங்களில் தொடர்ந்து செயல்படும் சுய
உதவிக்குழுக்களின் விவரம் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கடன்
7 சதவீதத்தில் வழங்கப்படுவதற்கு தற்சமயம் உள்ள வட்டி விகிதத்தின்
வித்தியாசத்திற்கு உரிய தொகை சம்மந்தப்பட்ட சுய உதவிக்குழுக்களின் வங்கிக்
கணக்கில் செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சிறப்பு கிராம
சபா கூட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும்
5–ந் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு கிராம
கூட்டத்திற்கு ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய
உதவிக்குழுக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.