எலன் மஸ்க்
சிலிக்கான் வேலியில் 1 பில்லியன் மதிப்புள்ள மூன்று நிறுவனங்களை நிர்வகித்த இரண்டாவது நபர் என்ற மாபெரும் சாதனைக்கு உரியவர் Elon Musk (எலன் மஸ்க்). முதல் நபர் James H. Clark. எலன் மஸ்க் உருவாக்கிய மிகப்பெரிய கம்பெனிகள் பேபால் (PayPal), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), and டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors). எலன் மஸ்க் தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவரெல்லாம் இல்லை. ஆனாலும் எப்படி எலன் மஸ்க் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை அமைத்தார்.
சாதிக்க அவர் சிறு வயதில் செய்த விசயங்கள் என்ன? எலன் மஸ்க் பில்லியனர் ஆனது எப்போது? கனவுகளை நோக்கி அவர் எவ்வாறு பறந்தார்? என்பதைத்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் மந்திரக்கோலாக எலன் மஸ்க் அவர்களின் வாழ்க்கை பயணம் அமையும் என நம்புகிறேன்.
12 வயதில் முதல் கேம் விற்பனை
எலன் மஸ்க் ஜூன் 28, 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா பகுதியில் பிறந்தார். ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் பிறந்த எலன் மஸ்க் க்கிற்கு 9 வது வயதிலேயே அவருடைய பெற்றோர்கள் கணினியை வாங்கி கொடுத்தார்கள் [Commodore VIC-20] . எப்படி இளமை காலத்தில் பில்கேட்ஸ் சாதனைக்கு பள்ளியில் கணினி அறிமுகம் கிடைத்தது மிகப்பெரிய காரணமாக அமைந்ததோ அதைப்போலவே எலன் மஸ்க் க்கிற்கும் அமைந்தது.
கணினியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட எலன் மஸ்க் தன்னுடைய 12 ஆம் வயதில் தானே உருவாக்கிய Blastar எனும் சூட்டிங் கேமை $500 க்கு விற்றார்.
அமெரிக்காவிற்கு செல்ல ஆசைப்பட்ட எலன் மஸ்க்
தென் ஆப்ரிக்காவில் பிறந்த எலன் மஸ்க் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவிற்கு இடம்பெயர ஆசைப்பட்டார். தனது கனவுகளை நினைவாக்கிக்கொள்ள பெற்றோரை விட்டு தனித்தே அமெரிக்கா செல்ல அவர் தீர்மானித்து இருந்தார். ஆனால் அப்போது அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மனம் தளராத எலன் மஸ்க் கனடாவில் இருக்கின்ற தன் அம்மாவின் உறவினர் வீட்டில் தங்கினார். அங்கு கிடைக்கின்ற சின்ன சின்ன வேளைகளில் ஈடுபடுத்திக்கொண்டு அப்போதைய வறுமையான பொழுதுகளை கழித்ததாக நினைவு கூறுகிறார். பின்னர் கனடாவின் குடியுரிமையை பெற்ற பிறகு, 19 ஆம் வயதில் ஓண்டாரியாவில் இருக்க கூடிய Queens University in Kingston எனும் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவே அமெரிக்கா பயணிக்கிறார்.
அங்கு இரண்டு ஆண்டுகள் படிப்பினை முடித்த பிறகு 1992 இல் அமெரிக்காவிற்கு நிரந்தரமாக இடம்பெயருவதற்கான வாய்ப்பு கிட்டியது. அதற்க்கு முக்கிய காரணம் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் படிப்பதற்கான இடம் கிடைத்ததே. அந்த கல்லூரியில் தான் இயற்பியல் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் இளங்கலை பட்டம் பெற்றார்.
உலகை மாற்றும் கண்டுபிடிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பிய எலன் மஸ்க்
எலன் மஸ்க் தன்னுடைய கல்லூரி காலங்களில், உலகை மாற்றக்கூடிய கண்டுபிடிப்புகளில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்பினார். வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமானது “ஒரு சரியான கேள்வியை உருவாக்குவது தான்” அதனை செய்துவிட்டால் பின்னர் அதனை நோக்கி பயணிப்பது மிக எளிமையானது என்கிறார் எலன் மஸ்க்.
அப்படி எலன் மஸ்க் அவர்களுக்கு தோன்றிய கேள்வி தான் “what things would have the great impact on the future of humanity’s destiny?” அதாவது மனிதர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் கண்டுபிடுப்பு எது. அந்த கேள்விக்கு பதிலாக அவர் நினைத்தது இணையம் (Internet), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் (renewable energy sources), விண்வெளி குடியேற்றம் (space colonization).
Zip 2 & PayPal உருவாக்கம்
தன்னை எதில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்ட எலன் மஸ்க் க்கிற்கு தான் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய விசயங்கள் அதிக பணம் தேவைப்படுகிற விசயங்கள் என்பதும் தெரிந்தே இருந்தது. அதற்க்கான பணியில் ஈடுபட ஆரம்பித்தார் எலன் மஸ்க்.
Physics and materials science இல் படிப்பதற்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறது. சேர்ந்த இரண்டு நாட்களில் கல்லூரியில் இருந்து வெளியேறி தன்னுடைய சகோதரர் கிம்பல் மஸ்க் உடன் இணைந்து Zip2 எனும் ஐடி நிறுவனத்தை துவங்குகிறார். அதிகாலையில் வேலையை துவங்கினால் மாலை வரை கடுமையாக உழைக்கும் பேர்வழி எலன் மஸ்க். வேலை முடிந்த பின்னரும் அங்கேயே தங்கிவிடும் அவர் குளிப்பது உள்ளிட்டவைகளுக்கு அருகில் இருக்கக்கூடிய விளையாட்டு அரங்கை பயன்படுத்தி வந்தார். இரண்டு ஆண்டுகள் இந்த கடின சூழலை சமாளித்துக்கொண்டு பணியாற்றினார் எலன் மஸ்க்.
அப்போது தான் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக வளரத்துவங்கியிருந்த காலம், ஆனால் ஒருவரும் அதிலிருந்து கணிசமான லாபத்தை சம்பாதித்திருக்கவில்லை. ஆனால் அதனை செய்வதற்கு தயாரானது எலன் மஸ்க் இன் கம்பெனி. ஆமாம் செய்தி நிறுவனங்களுக்காக தளங்களை உருவாக்கினார்.
1999 இல் புகழ்பெற்ற அல்டாவிஸ்டா (Altavista) எனும் சர்ச் என்ஜின் நிறுவனம், எலன் மஸ்க் இன் Zip 2 கம்பெனியை $307 மில்லியன் பணம் மற்றும் $34 மில்லியன் காப்புத்தொகைக்கு வாங்கியது.
எலன் மஸ்க் - PayPal
Zip 2 கம்பெனியை விற்றபிறகு எலன் மஸ்க், எலெக்ட்ரானிக் பணம் செலுத்தும் முறையிலான தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினார். X.com என்ற நிறுவனத்தை துவங்கினார். பின்னர் இந்த நிறுவனம் Confinity எனும் நிறுவனத்துடன் இணைந்தது. அதன் பிறகே, 2001 இல் புதிய நிறுவனத்திற்கு Paypal என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. Paypal நிறுவனத்தின் சேர்மன் ஆக உயர்ந்தார் எலன் மஸ்க்.
2002 இல் Paypal நிறுவனத்தை ebay 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. எலன் மஸ்க் அவர்களின் பங்காக 180 மில்லியன் டாலர் அவருக்கு கிடைத்தது. தனது கனவுகளை நோக்கி பயணிக்க தேவையான பணம் ஓரளவிற்கு கிடைத்துவிட்டதாக நம்பினார் எலன் மஸ்க்.
டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors)
Martin Eberhard and Marc Tarpenning எனும் இரண்டு பேரால் 2003 ஆண்டு தொடங்கப்பட்டது தான் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம். பெட்ரோல் மற்றும் டீசல் அல்லாத, மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய காரினை வடிவமைப்பதில் ஈடுபட்ட முதல் பெருமைக்குரிய நிறுவனம் என்றே சொல்லலாம்.
மாற்று எரிபொருள் பற்றிய தனது விருப்பத்தோடு டெஸ்லா ஒத்துப்போனதால் 70 மில்லியன் டாலரை தனது பங்களிப்பாக கொடுத்து இணைந்துகொண்டார். இதன் மூலமாக இயக்குனராக இணைந்துகொண்டார். அப்படி பெரிய பொறுப்பில் இணைந்திருந்தாலும் அவர் வடிவமைப்பு நிர்வாகத்திலேயே பணியாற்றினார். அதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது.
Tesla Roadster எனும் முதல் எலெக்ட்ரிக் கார் வடிவமைப்பில் ஈட்பட்டதற்காக Global Green 2006 product design award ஐ பெற்றார். பின்னர் இந்த காரை குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியிட முடியாமல் போக, பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க ஆரம்பித்தார் எலன் மஸ்க். அதன் பிறகு டெஸ்லா நிறுவனம் பல அதிரடி மாற்றங்களை சந்திக்க துவங்கியது. இறுதியாக 2008 இல் Tesla Roadster வெளிவந்தது.
மனைவி விவாகரத்து போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும் டெஸ்லா கம்பெனியை திறம்படவே நடத்திக்கொண்டு வந்தார் எலன் மஸ்க். டெஸ்லா பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றதற்கு Sedan Tesla Model S கார் மிக முக்கிய காரணம். $69,900 விலையுள்ள இந்த sedan Tesla Model S கார் பாதுகாப்பிற்க்கான பரிசோதனையில் 100 க்கு 99 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் பேட்டரிகள் 426 கிலோமீட்டர் தூரத்தை கிடக்கின்ற அளவில் உருவாக்கப்பட்டியிருந்தது.
தற்போதைய உலகம் ஆயிலை சார்ந்திருக்கிறது. சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய கேடாக அமைகின்ற ஆயில் கலாச்சாரத்தில் இருந்து உலகம் மின்சாரம் மூலமாக இயங்கக்கூடிய கார்களுக்கு மாறும். எலன் மஸ்க் அவர்களின் நம்பிக்கையான வார்த்தைகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின. விளைவாக 2013 க்குள் 10,500 Model S கார்கள் விற்பனை ஆயின.அதன் பிறகு டெஸ்லா பல முயற்சிகளை மேற்கொண்டு செய்துகொண்டே வருகிறது
யார் இந்த எலன் மஸ்க்? -
செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என அனைவரும் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சூழலில் செவ்வாயில் மனிதர்களை குறைந்த செலவில் குடியேற்றுவது எப்படி என சிந்தித்தார். விளைவு 2002 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவை மையமாக கொண்டு SpaceX நிறுவனம் துவங்கப்பட்டது.
எந்தவொரு நாட்டிலும் விண்வெளி சம்பந்தப்பட்ட விசயங்களை அரசு நிறுவனங்களே செய்யும். இதற்க்கு பாதுகாப்பு, அதிக முதலீடு போன்றவை காரணமாக இருக்கலாம். மார்ச் 2006 ஆம் ஆண்டு 100 மில்லியன் டாலரை முதலீடாக SpaceX இல் போட்டார். விண்வெளி ஆராய்ச்சிக்கு மிக முக்கியமானது ராக்கெட். ஏற்கனவே நிபுணத்துவம் பெற்ற ரஸ்யாவிடம் இருந்தோ அல்லது அமெரிக்காவிடம் இருந்தோ அதனை வாங்கலாம் என அணுகினார் எலன் மஸ்க்.
பேச்சுவார்த்தை நடத்தியதில் 15 மில்லியன் முதல் 65 மில்லியன் வரை விலை கூறியுள்ளனர். ஆனால் ராக்கெட் தயாரிப்பதற்கு தேவைப்படுகின்ற பொருள்களின் விலை இதில் வெறும் 2% தான். இதற்க்கு அதிகாரமயமாக்கல், போட்டி நிறுவனங்கள் இல்லாமை போன்றவை தான் காரணம் என புரிந்துகொண்டார். களத்தில் இறங்கினார்.
2006 இல் தனது முதல் பரிசோதனையை நிகழ்த்தியது . முதல் மூன்று முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. நான்காவது முயற்சியில் Falcon 1 வெற்றிகரமாக புவி சுற்றுவட்டபாதையை அடைந்தது. ஒருவேளை இதுவும் தோல்வியை தழுவி இருந்தால் SpaceX மூடப்பட்டிருக்கும் என்கிறார்கள். இந்த வெற்றிக்கு பிறகு $1.6 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை SpaceX போடுகிறது. அதன் பின்னர் அரசின் உதவி இன்றியே வெற்றிகரமாக பல ராக்கெட் என்ஜின்களை வடிமைத்தது SpaceX.
ஒருமுறை எலன் மஸ்க் கூறிய வார்த்தைகள் இவை. நாம் செவ்வாய் கிரகத்தில் இறக்க விரும்புகிறேன், வெறும் ஆசையோடு இல்லை என தனது கனவின் உறுதியை காட்டுகிறார். அதன் பிறகு விண்வெளிக்கு செல்லும் விமானங்களை வடிமவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது SpaceX. கனவை நோக்கி செல்கிறார் எலன் மஸ்க்.
எலன் மஸ்க் – ஹைப்பர்லூப்
சிலர் ஐடியாக்களை மட்டும் சொல்லுவார்கள்.அதனை செயல்படுத்த மிகப்பெரிய அளவில் முதலீடும் செய்து ஐடியாவை நிறைவேற்ற உழைக்கவும் செய்வார். அதுதான் எலன் மஸ்க் என்ன சொன்னாலும் உலகம் உற்று கவனிப்பதற்கு முக்கிய காரணம். அவரின் மற்றுமொரு சிந்தனை தான் ஹைப்பர்லூப்.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் என்பது மிக வேகமாக பயணிப்பதற்கு எலன் மஸ்க் கூறிய புதிய ஐடியா. ஆமாம், ஹைப்பர்லூப் இல் ஒரு குழாய் போன்ற அமைப்பு இருவேறு இடங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு இருக்கும். அதற்குள் மனிதர்கள் பயணிக்க வேண்டிய வாகனம் செல்லும். குழாய் போன்ற பகுதிக்குள் இருக்கும் குறைந்த காற்று அழுத்தம் மற்றும் உராய்வை குறைத்தல் போன்றவற்றின் மூலமாக அதிவேகத்தை அடைந்து பயணிப்பதே ஆகும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிக்கும் போது விமானத்தில் பயணிப்பதை காட்டிலும் விரைவாக செல்ல முடியும் என்பது எலன் மஸ்க் இன் வாதம்.
எலன் மஸ்க் உண்மைலேயாலுமே 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவே நான் பார்க்கிறேன். அதற்கு மிக முக்கிய காரணம், புதிய சிந்தனைகள் மட்டுமே அல்ல. எதிர்காலத்தில் மனிதர்களுக்கு எது பயன்படும் என்பதை அறிந்து தனது சொந்தப்பணத்தையே முதலீடாக போட்டு அரசுக்கு நிகராக தனி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கிறார்.