A+ A-

கோயமுத்தூர் பற்றிய சிறு வரலாற்றுத் தொகுப்பு...

கோவன் என்ற மன்னன் (இருளர்) ஆண்ட பகுதி கோவன்புதூர் (கோயமுத்தூர்) என்ற மரபு வழி வரலாற்று செய்தி.

Coimbatore

கோவன் புதூர் > கோவன் புத்தூர் > கோயன் புத்தூர் > கோயம்புத்தூர் (அ) கோயமுத்தூர்


கோவன் பற்றிய வரலாறு குறிப்புகள்

சங்ககால இலக்கியங்களிலோ,அல்லது வரலாற்று ஆதரங்களிலோ இருளர் (உதாரணமாக விழுப்புரம் பகுதி வாழும் இருளர்கள் போல) பற்றிய செய்தி இடம் பெறவில்லை. இருப்பினும் கோவன் என்பவன் சோழனுக்கு நெருக்கமாகவும், பேரூர் கோவிலை நிர்மாணிக்கும் போது ,அந்த பகுதி வேளாளர்களுடன் கூடிப் பாடப்பட்டுள்ளமைக்கு கற் சாசனன்களே சான்று.


கோவன் என்ற ஒரு தலைவன் இவ்வகை யாக இறுதியாக தாம் வாழ்ந்த கோவனூரையும் விட்டு கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில் வெளியேறி தெற்கே ஆற்றுப் பாங்கான நொய்யலாற்று மருதக் கழனி வெளியில் புதிய ஊரை அமைத்து வாழத் தொடங்கிய போது அழைக்கப்பட்ட ஊர்தான் கோவன் புத்தூர் ஆகிய இன்றைய கோவை ஆகும்.
முதலாம் கோவனுக்கு பின்பு அடுத்த ஏழெட்டுத்தலைமுறை காலமும் கோவன் என்ற சொல் விருதுப் (பொதுப்) பெயராகி நிலைத்து விட்டதை நாம் அறிதல் வேண்டும்.
கொங்குச் சோழர்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் பேரூர்த் திருத்தலப் பணிகளில் ஈடுபட்ட போது இவ்வூர்த்தலைமை வேளாளரும் மன்னருடன் கூடிப்பாடுப்பட்டுள்தையே கற்சாசனங்கள் பேசும். இந்த முகமையாளர்கள் தான் கோப்பண்ண மன்றாடியார் என்று பேசப் படும் இன்றைய புரவிபாளையம் பெருநிலக் கிழார் குடும்பம் ஆகும். இவர்கள் சென்ற தலை முறை வரை இக்கோயிலின் முதன்மை அறங் காவலர்களாக இருந்து வந்துள்ளனர்.
எனவே கோவன் என்ற பெயர் ஒரு தொல்குடிப் பெயர் -அக்குடியினர் தலைமகன் ஒருவன் நிர்மாணித்த புத்தூரே ஆதிகாலக் கோவை நகரம் என்றும் புரிந்து மகிழ்வோமாக.


Coimbatore junction
Coimbatore junction(கோயம்புத்தூர் சந்திப்பு )

இன்று  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகராக காட்சியளிக்கும் கோவை நகரம், ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது.

கோயமுத்தூரின் இயற்கை அமைப்பு 

வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம்,
தெற்கே பழநி,
கிழக்கே கொல்லிமலை,
மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒருபகுதியாகும்.

கோயமுத்தூரின் வரலாறு

கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.

வஞ்சித்துறைமுகம் என அழைக்கப்படும் இப்போதைய கேரள கடற்கரையில் வந்திறங்கிய ரோமானிய வியாபாரிகள், கோவை வழியாக முட்டம் மற்றும் கொடுமணல் வந்து ரத்தின கற்களை வாங்கி சென்றுள்ளனர். திருப்பூரில் இருந்து 20 கி.மீ., தூரமுள்ள கொடுமணலில் நடந்த அகழ்வாராய்ச்சியில் இங்கு ரோமானியர்கள் வந்து சென்றதின் அடையாளமாக ஏராளாமான பொருட்கள் கிடைத்துள்ளன.

நதிகள்:

நொய்யல் நதி: கோவை நகரம் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக காட்சியளித்தது. கிடைத்த சில இடங்களில் நெல், கரும்பு, வாழை என பயிரிடப்பட்டது. இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட நொய்யல் நதியாகும்.

நொய்யல் ஆற்றின் குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பே 23 தடுப்பணைகள் கட்டி, 100 கி.மீ., தூரத்திற்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 36 குளங்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

கோவையின் நிலத்தடி நீர்மட்டம் அன்று சீராக இருக்க நொய்யல் ஆறும், இதன் குளங்களுமே முக்கிய காரணங்களாகும். நொய்யல் ஆற்றின் கரையில் திருப்பேரூர் என்று அழைக்கப்படும் இடத்தில் இப்போது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில்

லிங்க வடிவத்தில் இங்கு இருந்த சிவபெருமானுக்கு காமதேனு தினமும் பால் வார்த்து வந்தது. இதை அறியாத கன்று, காலால் இந்த இடத்தை இடறவே, இங்கு ரத்தம் வெளிவந்தது. இதை கண்டு காமதேனு வருந்தவே, சிவபெருமான் அங்கு தோன்றி, காமதேனுவுக்கு அருள்பாலித்தார். இந்த இடமே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலானது.

சிவபெருமானின் பக்தரான சுந்தரர் இங்கு வரவேண்டும் என்பதற்காக, இறைவனும் சக்தியும், சாதாரண உழவர் வேடத்தில் விவசாயம் செய்து, சுந்தரரை இங்கு அழைத்து வந்ததாக பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கோயிலுக்கு அப்பர் பெருமானும் வந்து சென்றதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

பேரூர் கோயிலில் விஜயநகர பேரசின் காலத்தில் மாதையன் என்ற மன்னர் கட்டிய தெப்பக்குளம் இன்றும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. பேரூர் கோயிலின் கனகசபை மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை. கி.பி. 17 ம் நூற்றாண்டில் அழகாத்திரி நாயக்கரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. அற்புதமான நடன அசைவுகளுடன் காணப்படும் இந்த சிலைகள் பேரூர் கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது.

18ம் நூற்றாண்டின் பாதிவரை, மைசூர் அரசர்களின் கைகளிலும் பின்னர் ஆங்கிலேயர்கள் கைகளிலும் கோவை வந்தது. 1799ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முழு அளவில் கோவையை கைப்பற்றி பல்வேறு சீர்திருத்தங்களை செய்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் நிலம் உள்ள பகுதியாகும். எனவே, இங்கு வெளிநாட்டு பருத்தியை விதைக்க திட்டமிடப்பட்டது. 1819ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் வியாபார அதிகாரியாக இருந்த ராபர்ட்ஹீத் என்பவர், போர்போன் என்ற பருத்தியை கோவைக்கு கொண்டுவந்து விவசாயிகளை விதைக்க வைத்தார். அப்போது முதல் பருத்தி உற்பத்தியும் இதை நூலாக மாற்றும் தொழிற்சாலைகளும் கோவையில் உதயமானது. இதுவே காலப்போக்கில் கோவையில் மிகப் பெரிய தொழிற்புரட்சியை உருவாக்கி, தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' என்ற பெயரை கோவைக்கு உருவாக்கி தந்தது.
coimbatore

வியாபாரம் பெருகுவதற்காக, 1856 ம் ஆண்டு, கோவையில் இருந்து போத்தனூர் வழியாக சென்னைக்கு இருப்பு பாதை போடப்பட்டது. பிறகு மேட்டுப்பாளையத்திற்கும், பின்னர் கோவை- ஈரோட்டிற்கு மற்றொரு இருப்பு பாதைகள் போடப்பட்டது.

அப்போதைய கோவை நகரின் வெளியே, 1862ம் ஆண்டு 190 ஏக்கரில் மிகப் பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. இது ஆறு ஆண்டுகள் கட்டப்பட்டு 1868 ம் ஆண்டு முடிக்கப்பட்டது. செக்கிழுத்த செம்மல் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அடைக்கப்பட்டது இந்த சிறையில்தான். இவர் இழுத்த செக்கு இன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவை நகரை நிர்வகிக்க 1865 ம் ஆண்டு முதல் நகரசபை அமைக்கப்பட்டது. அது இப்போது மாநகராட்சியாக உயர்ந்துள்ளது.

நன்றி-தினமலர் 

இன்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகராக காட்சியளிக்கும் கோவை நகரம், ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது.கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.