A+ A-

உலகின் வல்லரசாக அமெரிக்கா இருக்கிறது இதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது?

உலகின் வல்லரசாக அமெரிக்கா  இருக்கிறது இதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது?

உலகின் வல்லரசு நாடாக இந்தியா மாறவேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி பேசுகிறார். அதைக்கேட்கும் எல்லோருக்கும் தேசிய உணர்ச்சி பொங்கத்தானே செய்யும்?

அப்படி உணர்ச்சிபூர்வமாக இருக்கிற ஒருவரிடம் “இப்போது உலகின் வல்லரசாக அமெரிக்கா  இருக்கிறது இதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது?” என்று கேளுங்களேன்.
“இங்கிலாந்து இருந்ததோ…? ” என்று இழுப்பார்.

 அதுக்கும் முன்னால? என்று கேட்டுப்பாருங்கள்.

மாட்டிக்கொள்வார். இரண்டு, மூன்று நாடுகளின் பெயர்களைச் சொல்லி ஒத்தையா, ரெட்டையா பார்ப்பார்.

இனிமேல் அப்படி குத்துமதிப்பாகப் பேசவேண்டிய அவசியம் இல்லை. அதனை ஆழமானமுறையில் ஆராய்ச்சி செய்துள்ளார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கஸ் மேடிஸன் எனும் பொருளாதார வரலாற்று அறிஞர். (http://www.ggdc.net/maddison/maddison-project/home.htm) அவர் உலகின் பல நாடுகளில் பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றவர். பல நாடுகளின் பண்டையப் பொருளாதார வரலாறுகளை அவர் தொகுத்தார்.

அந்த அனுபவத்தில் “உலகப் பொருளாதாரம் - ஒரு ஆயிரமாண்டு தொலைநோக்கு” “வரலாற்றுரீதியான புள்ளிவிபரங்கள்’ (The World Economy. A Millennial Perspective (Vol. 1). Historical Statistics (Vol. 2) எனும் நூல்களை 2006-ல் எழுதியுள்ளார்.

அவரது ஆய்வின்படி கி.பி. 1 ஆம் ஆண்டில் உலகின் மொத்த வருமானத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பங்கு 52.9 சதவீதம். கி.பி.1000 ஆம் ஆண்டில் உலகின் வருமானத்தில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம். ஆனால் அது கி.பி.1500 ஆம் ஆண்டில் 24.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதனால் தன்னைவிட அரைச் சதவீதம் கூடுதல் வருமானம் உருவாக்கிய சீனாவிடம் இந்தியா முதலிடத்தை இழந்துள்ளது.

மீட்ட அவுரங்கசீப்

1600களில் மொகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் மொத்தச் செல்வத்தைவிட இந்தியாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்த காலகட்டத்தில் சீனாவுக்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா இருந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஐரோப்பா இருந்துள்ளது.

கி.பி.1700-ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலம். அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தவர். அதனால், அவரது ஆட்சிக்காலத்தில் மீண்டும் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது. (24.4 சதவீதம்). அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு 1750-ல் சீனா மீண்டும் இந்தியாவை முந்தியது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியாவும், பிரான்சும் இருந்தன.

இங்கிலாந்தின் எழுச்சி

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி ஏற்பட்டது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதித்துவிட்டது. 1700 களின் கடைசியில் ஏற்பட்ட பஞ்சம் இந்தியாவின் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தைச் சாகடித்துள்ளது. அடுத்தடுத்து பல பஞ்சங்கள் இந்தியாவைத் தாக்கி மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுள்ளன.

1850களில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த இந்தியாவைத் தள்ளிவிட்டு இங்கிலாந்து ஏறிக்கொண்டது. மூன்றாம் இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது. 1875-ல் அமெரிக்கா இங்கிலாந்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது. இந்தியா நான்காம் இடத்துக்குப் போனது.

அமெரிக்க சகாப்தம்

1900 வரையான காலகட்டத்தில் அமெரிக்கா சீனத்தைத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறியது. சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா என இந்தியா ஐந்தாவது இடத்தில் உட்கார்ந்தது. 1925-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, என வரிசையின் இடையில் பிரான்ஸ் நுழைந்து இந்தியாவை ஆறாவது இடத்துக்கு தள்ளியது. அப்போதுதான் பிறந்த சோவியத்யூனியன் இந்தியாவுக்குப் பின்னால் நின்றது.

25 வருட காலகட்டத்துக்குள் சோவியத்யூனியன், இங்கிலாந்தின் இடத்தைக் கைப்பற்றி 1950-ல் இரண்டா வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா என ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டோம்.

சீன மறுஎழுச்சி

1975-ல் ஜப்பான் இந்த வரிசையின் நடுவில் ஊடுருவி மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியும் சீனாவும் அதற்குப் பின்னால் நின்றன. ஐ நா சபையின் 2013 தகவல்கள்படி தற்போது சீனா இரண்டாம் இடத்தில் நிற்கிறது. ஜப்பான் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி, ரஷ்யாவுக்கு பிறகு 10வது இடத்தில் தற்போது இந்தியா உள்ளது.

இந்தியாவின் பழங்காலப் பொருளாதார வளர்ச்சியில் கி.மு.2800 முதல் 1800 வரையில் சிந்து சமவெளி நாகரிகம் செழித்து ஓங்கியிருந்தது எனக்கூறும் அறிஞர்கள் அங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர். பெரிய அளவுக்கு நகரமயமான நாகரிகமாக அது இருந்ததையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீளுமா இந்தியா?

மவுரிய பேரரசு,மொகலாய பேரரசுகள் மூலமாக உயர்ந்து ஓங்கி ஆயிரம் காலத்துப்பயிராக இந்தியப் பொருளாதாரம் உலகில் முதல் இடத்தில் நிலைத்து நின்றுள்ளது. இங்கிலாந்து நாட்டுக்கு இந்தியா அடிமையான காலத்துக்குப் பிறகு இந்தியா தடுமாறி, தடம் மாறி, தள்ளாடி வருகிறது. இடையில் அவுரங்கசீப்பால் மீட்கப்பட்ட இந்தியாவின் உலகின் முதல் பொருளாதார வல்லரசு என்ற அந்தஸ்து அதற்குப்பிறகு வந்த எந்த ஆட்சியாளர்களாலும் இன்னமும் சாதிக்கப்படாமல் கிடக்கிறது.

மீண்டும் முதலிடத்தை அடைய, உலகின் மாறிய சூழலுக்கு ஏற்ப தன்னை இந்தியா தகவமைத்துக் கொள்ளவேண்டும். முதல் நடவடிக்கையாக தனது மனித வளத்தை திறன்மிக்கதாக அது மாற்றிக் கொள்ள வேண்டும். இந்திய சமூகம் கல்வியில் சிறந்ததாய் மாறுவதுதான் அதற்கான அடிப்படையானத் தேவை. அந்தக்கல்வியை அடித்தளமாக கொண்டுதான் நாட்டின் வளங்களை விஞ்ஞானரீதியாக பயன்படுத்துகிற திறமைக்கு மக்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் எழுதப்படிக்க தெரியாதவர்கள் உலகிலேயே அதிகம் வாழும் நாடாக இன்னமும் இந்தியா நீடிக்கிறது. உலக வல்லரசாக இந்தியா மீண்டும் எழுவதை அது தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது.

உலகின் வல்லரசு நாடாக இந்தியா மாறவேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி பேசுகிறார். அதைக்கேட்கும் எல்லோருக்கும் தேசிய உணர்ச்சி பொங்கத்தானே செய்யும்? அப்படி உணர்ச்சிபூர்வமாக இருக்கிற ஒருவரிடம் “இப்போது உலகின் வல்லரசாக அமெரிக்கா இருக்கிறது இதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது?” என்று கேளுங்களேன். “இங்கிலாந்து இருந்ததோ…? ” என்று இழுப்பார். அதுக்கும் முன்னால? என்று கேட்டுப்பாருங்கள். மாட்டிக்கொள்வார். இரண்டு, மூன்று நாடுகளின் பெயர்களைச் சொல்லி ஒத்தையா, ரெட்டையா பார்ப்பார். இனிமேல் அப்படி குத்துமதிப்பாகப் பேசவேண்டிய அவசியம் இல்லை.