A+ A-

கிழ ஆந்தையின் அறிவுரை

கிழ ஆந்தையின் அறிவுரை 

இரவு நேரம். தெருவோரமாக நின்ற மின்கம்பத்தில் ஆந்தைகள் எல்லாம் கூட்டமாகக் கூடின. அந்த ஆந்தைகளில் பிரிதிவாதன் என்ற ஒரு ஆந்தையுமிருந்தது.

அந்த ஆந்தை மற்ற ஆந்தைகளைப் பார்த்து, ""நண்பர்களே! நாம் எல்லாரும் கூட்டமாகக் கூடி இருக்கிற இந்த இரவுப் பொழுதில், அழகான பாடல் ஒன்றினை நாம் எல்லாருமாகச் சேர்ந்து பாடலாமே!'' என்றது.

அதனைக் கேட்ட ஒரு கிழ ஆந்தை, ""பிரதிவாதா! உன் எண்ணத்தை உடனடியாக மாற்றிக்கொள். இந்த இரவு நேரத்தில் நாம் எல்லாரும் சேர்ந்து சப்தமிட்டால், இந்தத் தெருவாசிகளின் தூக்கம் கலைந்துவிடும். எல்லாரும் உடனேயே படுக்கையை விட்டு எழுந்து தெருவிற்கு வந்துவிடுவர்.

""நம்மைப் பார்த்தால் எரிச்சலில் கண்டதைக் கையிலெடுத்து நம்மைத் தாக்கினாலும் தாக்கி விடுவர். அதனால் நாம் சிறிதுநேரம் அமைதியாக இந்த மின்கம்பத்தில் இருந்துவிட்டு அதன் பின்னர் நம் இருப்பிடத்திற்கு செல்லலாம்!'' என்று அறிவுரை கூறியது.

எல்லா ஆந்தைகளும் கிழ ஆந்தையின் அறிவுரையை ஏற்றுக் கொண்டன. ஆனால், பிரதிவாதன் ஆந்தை மட்டும் கிழ ஆந்தையைக் கோபத்துடன் பார்த்தது. ""கிழவா! உனக்கு வயதாகிவிட்டதால் அறிவும் மழுங்கி விட்டது. அதனால்தான் எங்களின் மனநிலை தெரியாமல் எங்களை எல்லாம் உன்னைப்போன்று அஞ்சி ஓடச் சொல்கிறாய். மற்றவர்கள் வேண்டுமானால் உன் பேச்சைக் கேட்டு உன்பின்னால் வரட்டும். ஆனால், நான் என்றுமே உன் பின்னால் வரமாட்டேன்!'' என்று பிடிவாதமாக மின்கம்பத்தில் அமர்ந்து கொண்டது.

கிழ ஆந்தையின் பேச்சை மதித்த மற்ற ஆந்தைகள் எல்லாம் மின்கம்பத்தைவிட்டு சென்றுவிட்டன. பிரதிவாதன் மட்டும் மின்கம்பத்தில் அமர்ந்த படி பலமாக சப்தம் கேட்கும்படியாக "ஆ... ஆ... ஆ...' என்று கத்தியது.

வீட்டினுள் தூக்கத்தில் இருந்த தெருவாசிகளுக்கு, ஆந்தையின் சப்தம் சங்கு ஊதுவது போன்ற ஒலியை ஏற்படுத்தவே, அவர்கள் அனைவரும் படுக்கையைவிட்டு எழுந்து கதவைத் திறந்து வேகமாக வெளியே வந்து பார்த்தனர்.

அங்கே பிரதிவாதன் மின்கம்பத்தில் அமர்ந்தபடி, "ஆ... ஆ... ஆ...' என்று அலறிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட கூட்டத்திலிருந்த ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டது.

""ஆந்தையே! இரவு நேரம் என் வீட்டின் முன்னே வந்து அலறி என் தூக்கத்தை கெடுத்துவிட்டாயே... இதோ உன்னை என்ன செய்கிறேன் பார்!'' என்று கூறியபடி தன் நடை வாசலின் அருகே கிடந்த கல்லை எடுத்தார்.

மிகவும் நேர்த்தியாக குறி பார்த்து பிரதிவாதன் மீது எறிந்தார். அவர் எறிந்த கல் குறி தவறாமல் பிரதிவாதன் மீது நச்சென்று மோதியது.

அடுத்த நிமிடம் பிரதிவாதன் சுருண்டு தரையில் பொத்தென்று விழுந்தது. அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. அதனைக் கண்ட அந்தத் தெருவாசிகள் எல்லாம் ஓடிவந்து கற்களாலும், கம்பாலும் பிரதிவாதனைக் கண் மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர்.

"கிழ ஆந்தையின் அறிவுரையைக் கேட்டு நடந்திருந்தால், இப்போது நமக்கு இப்படி ஒரு ஆபத்து நேர்ந்திருக்காதே!' என்று மிகவும் கவலைப்பட்டது. பிரதிவாதனின் அழுகுரலைக் கேட்டு மனம் பொறுக்காத கிழ ஆந்தை, தூரத்திலிருந்த கம்பத்தில் உட்கார்ந்து கத்தத் தொடங்கியது. எல்லாரும் அதை அடிக்க ஓடினர். அந்த நேரத்தை பயன்படுத்திக் பிரதிவாதன் தப்பிப் பறந்தது. பறந்து கொண்டே அது கிழ ஆந்தைக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

மேலும் கதைகள்

.உன்னுடன் இருப்பது யார் ..? தெருவோரமாக நின்ற மின்கம்பத்தில் ஆந்தைகள் எல்லாம் கூட்டமாகக் கூடின. அந்த ஆந்தைகளில் பிரிதிவாதன் என்ற ஒரு ஆந்தையுமிருந்தது.