A+ A-

சிறுவன் உபதேசம்

சிறுவன் உபதேசம்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அரசனாம். அவனுக்குத் தான் அரசனாகவும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் ஆன்ம இலாபம் தரும் ஞான வினையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தணியாத ஆவல். உடனே மந்திரியைக் கூப்பிட்டு, “நம் நட்டில் உள்ள குருமார்கள் இங்கு அரண்மனைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஞான வித்தைகளை எனக்குப் பயமின்றி உபதேசிக்கலாம்; அப்படி செய்யும் உபதேசங்களில் என் மனதைக் கவரும் உபதேசம் எதுவோ அதற்கு, உபதேசித்தவர் கேட்பதைப் பரிசிலாகத் தருவோம்” என பறையறிவிக்கச் சொன்னான்.

வாயிலில் ஒரு ஆராய்ச்சி மணியையும் கட்டினான். வந்தவர்கள் மணியை அடிக்க, மந்திரி அவர்களை அழைத்துப் போய், நீராட, உண்ண, உடுக்க எல்லா வசதிகளையும் செய்துகொடுத்து அரசவைக்கு இட்டுச் செல்வார்.

இதைக் கேள்வியுற்ற குருமார்களும், அறிஞர்களும் அரசவை சென்று தங்களுக்குத் தெரிந்தவற்றை உபதேசிக்க மன்னனுக்குத் திருப்தி இல்லை. அவர்களையெல்லாம் விருந்தினர் மாளிகையிலேயே சிறை வைத்துவிட்டான்.

அவ்வூரில், ஒரு சிற்றூரில் அட்டகோணலுடன் விகாரமான சிறுவன் இருந்தான். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவனை உன் தந்தை யாரெனக்கேலிபேச, வீட்டுக்கு வந்தவன் அன்னையிடம், “என் தந்தை எங்கே?” எனக் கேட்டான். “அப்பா மகனே! உன் தந்தையை அரசன் சிறை வைத்துள்ளான்” என முழுக் கதையையும் கூற, “அம்மா! நான் போய் அப்பாவை மீட்டு வருகிறேன்” எனத் தாய் தடுத்ததையும் மீறிக் கிளம்பி அரசவை வந்தான். அவன் உருவையும், வயதையும் கண்டு எல்லோரும் எள்ளி நகையாடினார்கள்.

எல்லோரும் நகைத்ததைக் கண்ட சிறுவன் அரசனை நோக்கி, “ஏன் சிரித்தீர்கள்? என் உருவைக் கண்டா? அல்லது சிறுவனா நமக்கு உபதேசம் செய்யப் போகிறான்? என்று என் வயதைக் கண்டா?” என்று கேட்டான். ஒருவரும் பதில் பேசவில்லை.

பின்னரும் அரசனை நோக்கி,”அரசே! ஏன் நகைத்தீர்? குயவனைப் பார்த்து நகைத்தீரா? அல்லது பாண்டத்தைப் பார்த்து நகைத்தீரா? என வினவினான்.அரசனுக்குக் குயவன் என்றால் யார்? பாண்டம் என்றால் எது? எனப் புரியவில்லை. சிந்தை மருண்ட மன்னனோ, உடனே சிறுவனை நோக்கி, “எனக்கு ஞான உபதேசம் செய்வித்து அருளல் வேண்டும்; தங்களின் சித்தம் என்னவோ அதுபோல் நான் நடக்கிறேன்” எனக் கேட்டுக் கொண்டான்.

அதற்கு, சிறியவன், “அரசே! நீ உனக்குச் சொந்தமாக எண்ணியிருப்பதை எனக்குத் தானம் செய்; பின்னர் உபதேசிக்கிறேன்” என்றான்.

அரசன் : கழுத்தில் கிடந்த விலையுயர்ந்த மணிமாலையயும் என் ஆபரணங்களையும் தந்துவிட்டேன் என்றான்.

சிறுவன் : “இவையெல்லாம் உன் பிள்ளைகளுக்குறியது. உனக்கல்ல. எனவே வேண்டாம் .”

அரசன் – “இந்த நாட்டையே தருகிறேன்.”

சிறுவன் – “இந்த நாடு மக்களுக்குச் சொந்தம். இதுவும்வேண்டாம். உனக்கு உரிய, சொந்தமான பொருளை உணர்ந்து கொடு.”

அரசன் – “என் உடல் எனக்குத்தன் சொந்தம். அதைத் தருகிறேன்.”

சிறுவன் – “உன் உயிர் பிரிந்ததும், அது மண்ணுக்குச் சொந்தம். நீ தூங்கும்போது, உன் உடலின்மேல் ஒரு பாம்பு ஊர்ந்தாலும் உனக்குத் தெரிவதில்லையே? அப்படி இருக்க உனக்கு அது எப்படிச் சொந்தம்?”

இப்படியே ஒவ்வொன்றையும் சிறுவன் மறுத்துச் சொல்ல அரசனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள். தந்து விடுகிறேன் என்றான்.

“உன் மனம்தான் உனக்குச் சொந்தம். எல்லோர் முன்னிலையிலும் தானம் கொடு” என்றான் சிறுவன்.

அப்படியே தான சம்பிரதாயங்கள் முடிவடைய சிறுவன் வெளியில் புறப்பட்டான். அரசன் சிறுவனை நோக்கி, “குருவே! உபதேசம் செய்யாமல் செல்லுகிறீர்களே!” என வினவ அச் சிறுவன்,”அரசே! உன் மனதை எனக்குத் தானம் செய்தது உண்மையில்லை. இன்னும் உன் மனம் உன்னிடமே இருக்கிறது.எப்படி நான் உபதேசிக்காமல் செல்வதை நீ எப்படி உணர்ந்து கேட்டாய்?” என்றான்.

அரசன் திடுக்கிட்டு வணங்கி, “குருவே! உங்களின் ஆணைப்படியே நடக்கிறேன். இனி என் வயம் ஏதுமில்லை” என்றான்.

“சிறைப்பிடித்தவர்களை விடுதலை செய்க” என்றான் சிறுவன். அப்படியே நடந்தது. பின்னர் சிறுவன் உபதேசித்தான்.

என்ன உபதேசித்திருப்பான்?

“அரசே உருக்கண்டு எள்ளாமை வேண்டும். உன் உடலில் உயிர் உள்ளவரை உனக்கு உன் மனம் மட்டுமே சொந்தம். அதுவும் உணர்வு இருக்கும்போது மட்டுமே. தூங்கும்போது மனம் உனக்குச் சொந்தமல்ல. ஆகவே, உணர்வால் மனத்தை அடக்கு. எப்பொழுதும் நீ உன் உணர்விலேயே நில். அது உனக்கு இறைவனை அடைய வழிகாட்டும்.”

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அரசனாம். அவனுக்குத் தான் அரசனாகவும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் ஆன்ம இலாபம் தரும் ஞான வினையையும்