A+ A-

படித்ததில் பிடித்தது :மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி

படித்ததில் பிடித்தது :மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி

நேற்று மதியம் ஒரு நடை சென்று கொண்டிருந்த போது 3C of Life என்று பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை ஒரு பெண் அணிந்திருந்தாள். மகாத்மா காந்தி சாலை என்றுதான் பெயர். ஆனால் அநியாயத்துக்கு கவனத்தைச் சிதறடிக்கிறார்கள். தலையைக் குனிந்து கொண்டு போகவா முடியும்? உற்றுப் பார்த்து கண்டுபிடித்துவிட்டேன். ‘இந்த சொட்டை அங்கிளுக்கு லொள்ளையும் லோலாயத்தையும் பாரு’ என்று நினைத்திருப்பாள். நினைத்துவிட்டுப் போகட்டும். எனக்குத் தெரிந்ததெல்லாம் Currency, Calendar, Chart of Account தான். எத்தனை நாட்களுக்குத்தான் இதையே கட்டிக் கொண்டு மாரடிப்பது? புதிதாகக் கண்டுபிடித்தாகிவிட்டது. இந்த இடத்தில் மாரடிப்பது என்கிற சொல்லை வலிந்து திணிக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

தங்கவேலுவிடம் ஃபோனில் பேசியபடியே நடந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது. கண்ணுக்கும் வாய்க்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது போலிருக்கிறது. இல்லையென்றால் கண் செய்யும் வேலைக்காக பேச்சுக் குழறுமா? குழறிவிட்டது. தங்கவேலு அன்னூரில் வசிக்கிறார். பொறியியல் முடித்துவிட்டு அவரும் தினேஷ் பாபுவும் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்ன நிறுவனம் என்று சொல்லவில்லை பாருங்கள்- இணையதள வடிவமைப்பு உள்ளிட்ட மென்பொருள் சார்ந்த வேலைகள். நான்கைந்து வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாகன பராமரிப்பு நிறுவனங்கள்(Service center) மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு தேவையான மென்பொருட்களையும் வடிவமைத்துக் கொடுக்கிறார்கள். இவர்கள் செய்வது கூட பெரிய காரியமில்லை. வீட்டில் இருப்பவர்கள் நம்பி அனுமதித்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது.

இவர்களைச் சந்திக்கக் காரணமிருக்கிறது. நிசப்தம் தளத்தின் வடிவமைப்பை மாற்றிவிடலாம் என்று எண்ணி பெங்களூரில் ஒரு நிறுவனத்தை அணுகினேன். ஒரு பெரிய வீடு. அந்த வீட்டை வாடகைக்குப் பிடித்து கணினி நிறுவனமாக மாற்றியிருந்தார்கள். இருபத்தைந்து பேராவது வேலை செய்வார்கள். ஒரு மேலாளரை அழைத்துப் என்னிடம் பேசச் சொன்னார்கள். அவருக்கு ஒவ்வொன்றையும் ஆங்கிலத்தில் விளக்கி முடிப்பதற்குள் கண்ணாமுழி திருகிவிட்டது. ஆங்கிலத்தில் பேச முடியாது என்று இல்லை- புனைவு என்கிற வார்த்தைதான் வேண்டும் என்று சொல்வதற்கு அதைச் சொல்லி அர்த்தத்தையும் விளக்க வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் மென்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் அரை மணி நேரம் கூடி விளக்கி முடித்த பிறகு சில ஆயிரங்கள் வரைக்கும் கொடுக்க வேண்டும் என்றார். பணம் கூட பிரச்சினையில்லை. கிளம்பும் போது ‘நீங்க தமிழ்நாட்டில் எந்த ஊர்?’ என்றார். தமிழில்தான். இதை முதலிலேயே கேட்டிருந்தால் எவ்வளவு எளிமையாக இருந்திருக்கும்? ஏதாவது ஆங்கில இணைய தளத்தைக் காட்டி நான் விளக்கியிருந்தால் கூட பரவாயில்லை என்று விட்டிருக்கலாம். தமிழ் தளத்தைத்தான் விளக்குகிறேன். இப்படி நம்மைத் தமிழன் என்றே தெரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயங்கரமாக கடுப்பாகிவிடும். 

பெங்களூரில் ஒரு முறை படத்திற்குச் சென்றிருந்தோம். கோச்சடையான். பக்கத்து இருக்கைக்காரர்கள் படு வேகமாக ஓடி வந்தார்கள். தமிழில் பேசிக் கொண்டிருந்தவர்கள் என்னிடம் ‘excuse me..when the movie started?' என்று கேட்டார்கள். தமிழிலேயே கேட்டிருக்கலாம். ஆனால் ஆங்கிலம்தான். ‘வெளியே டீக்கடையில் விசாரிச்சுப் பாருங்க’ என்றேன். ஒரு முறைச்சலைக் காட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான். படம் முடிகிற வரைக்கும் கால்களைத் தூக்கி நாற்காலி மீது வைத்தபடியே படம் பார்த்துவிட்டு எழுந்து வந்தேன். இந்த மாதிரி ஆட்களை நம்ப முடியாது. வெறுக்கென மிதித்துவிட்டு ‘ஸாரி’ என்று முடித்துவிடுவார்கள்.

இதே காரணத்திற்காக அந்த மென்பொருள் நிறுவனம் வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். அப்பொழுதுதான் தங்கவேலு, தினேஷ்பாபுவைப் பற்றித் தெரியும். Aspiremindz Tech Solutions என்று நடத்துகிறார்கள். அதற்கு வேண்டியே ஒரு நாள் அன்னூர் கிளம்பிச் சென்றிருந்தேன். பொறுமையாகக் கேட்டவர்கள் ஒரு நாளில் காரியத்தை முடித்துவிட்டார்கள். இன்னும் சில வேலைகள் பாக்கியிருக்கின்றன என்றாலும் இப்போதைக்கு இது போதும். ‘எவ்வளவுங்க?’ என்ற போது ‘கொடுக்கிறதைக் கொடுங்க’ என்றார்கள். பிழைக்கத் தெரியாத பையன்கள் என்று நினைத்துக் கொண்டேன். ‘நீங்களே சொல்லுங்க’ ‘அட நீங்க சொல்லுங்க’ ‘ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?’ என்கிற ரீதியில் ஆளாளுக்கு இழுத்து கடைசியில் சொற்பப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்கள்.

இருவருமே கிராமப்புறத்தில் படித்தவர்கள், அன்னூர் மாதிரியான ஊரில் அமர்ந்து கொண்டு இது போன்ற காரியங்களைச் செய்வதையெல்லாம் ஏதாவதொருவிதத்தில் ஊக்குவித்தாக வேண்டும். மருந்துக்கடையிலிருந்து மளிகைக்கடை வரைக்கும் இவர்களால் நுழைந்துவிட முடியும். வரவு செலவுக்கணக்கு, சாமான்களின் கையிருப்பு என எல்லாவற்றுக்கும் மென்பொருள் தயாரித்து விற்க முடியும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். வருமானமும் ஓரளவுக்கு இருக்கிறது என்கிறார்கள். கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவதில்லை. ஆனால் திருப்தியடையும் அளவுக்கான வருமானம்.

பொறியியல் முடித்த முக்கால்வாசிப் பேர்கள்  ‘வேலை கிடைக்கவில்லை அப்படியே கிடைத்தாலும் கிடைத்த வேலையில் சம்பளம் போதவில்லை’ என்றெல்லாம் புலம்பிக் கொண்டு அடுத்தவர்களைச் சபித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் வீட்டில் மாதம் இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு பெருநகரங்களில் ஏதாவது வேலை கிடைத்துவிடாதா என்று கவாத்து அடிக்கிறார்கள். இப்படியானவர்களுக்கு மத்தியில் தங்கவேலு, தினேஷ்பாபு போன்றவர்கள் ஒருவகையில் ரோல்மாடல்களாக இருக்கிறார்கள். பெருநகரங்களில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் மென்பொருட்களை சில ஆயிரங்களில் விற்றுக் கொண்டு உள்ளூரிலேயே மாமன் மச்சானோடு திரியும் இவர்களைப் பார்க்க சற்று பொறாமையாகவும் இருந்தது.

இதே போன்ற வேலையை ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் செய்ய முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். அப்படியே செய்வதாக இருந்தாலும் வீட்டில் விடமாட்டார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து பொறியியல் படித்துவிட்டு இந்த ஊரில்தான் இருக்க வேண்டுமா என்று பெற்றவர்களும் மற்றவர்களும் கேள்வி கேட்பார்கள். அழுத்தத்திலேயே ஓட வைத்து விடுவார்கள். வாழ்க்கையில் வென்றவர்கள் எல்லோருமே இத்தகைய அழுத்தங்களை ஒருவகையில் பொறுத்துக் கொண்டவர்கள்தான். அடுத்தவர்கள் எவ்வளவுதான் நசுக்கினாலும் தங்கள் முடிவை இறுகப் பற்றிக் கொண்டு தம் கட்டியவர்கள்தான். அப்படி தப்பித்தவர்கள்தான் தாங்கள் விரும்பியதை அடைகிறார்கள். மற்றவர்களின் வாழ்க்கை வழக்கமான சுழலில் சிக்கி பத்தோடு பதினொன்றாகிவிடுகிறது. தங்கவேலுவும் தினேஷ்பாபுவும் தம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. இவர்களைப் போன்றவர்கள் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று மனம் விரும்புகிறது. அதுதான் அவர்களுக்கும் நல்லது அவர்களைப் பின்பற்றப் போகும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் நல்லது.

சரி. முடித்துக் கொள்ளலாமா? 

முதல் பத்தியை வேறு மாதிரி ஆரம்பித்துவிட்டு முடிவை வேறு மாதிரி முடித்தாலும் திட்டுவார்கள். இப்படி இளைஞர்களை ஊக்குவிக்கும்படி எழுதிவிட்டு அந்த 3C என்ன என்று எழுதினாலும் திட்டுவார்கள். உரலுக்கு ஒரு பக்கம்தான் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி. இப்பொழுது நான் என்ன செய்யட்டும்?

நன்றி:நிசப்தம்

தங்கவேலு, தினேஷ்பாபுவைப் பற்றித் தெரியும். Aspiremindz Tech Solutions என்று நடத்துகிறார்கள். அதற்கு வேண்டியே ஒரு நாள் அன்னூர் கிளம்பிச் சென்றிருந்தேன். பொறுமையாகக் கேட்டவர்கள் ஒரு நாளில் காரியத்தை முடித்துவிட்டார்கள். இன்னும் சில வேலைகள் பாக்கியிருக்கின்றன என்றாலும் இப்போதைக்கு இது போதும். ‘எவ்வளவுங்க?’ என்ற போது