A+ A-

தொழிலதிபரின் மகன் சேட்டை...!

                                                தொழிலதிபரின் மகன்  சேட்டை...!

தொழிலதிபரின் மகன்  சேட்டை...!

ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் அதிக தீய பழக்கங்கள் கொண்டவனாக விளங்கினான்; அவனை திருத்த எவ்வளவோ முயன்றும் அந்த தொழிலதிபரால் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால், அவர் ஒரு வயது முதிர்ந்த ஞானியிடம் தனது பையனைத் திருத்த உதவி கேட்டார்.அந்த ஞானியும் ஒப்புக்கொண்டு அத்தொழிலதிபரின் பையனை சந்தித்து நடை பயணம் மேற்கொள்ள அழைத்து சென்றார்.

அச்சமயம் அவர்கள் இருவரும் வனப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கையில், அந்த வயதான ஞானி சிறுவனிடம் ஒரு சிறு செடியைக் காட்டி, “அதை உன்னால் பிடுங்க இயலுமா?” என்று கேட்டார்; சிறுவனும் உடனே அதைப் பிடுங்கிக் காட்டினான். பின்னர் ஞானி சற்று பெரிய தாவரத்தை காட்டி, “இதை பிடுங்க இயலுமா?” என வினவினார்; சிறுவனும் எளிதாகப் பிடுங்கிக் காட்டினான்.

சற்று தூரம் சென்ற பின் ஒரு முட்புதரைக் காட்டி, இதனைப் பிடுங்கிட முடியுமா என்று வினவ சிறுவனும் தனது சக்தியைப் பயன்படுத்தி அதைப் பிடுங்கிக் காட்டினான்; பின்னர் ஞானி ஒரு சிறிய மரத்தைக் காட்ட, பெரும்முயற்சி மேற்கொண்டு சிறுவன் அதை சாய்த்துக் காட்டினான். இப்பொழுது ஞானி வயது முதிர்ந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டி பிடுங்குமாறு சிறுவனிடம் கூற, சிறுவன் செய்வதறியாது நின்றான். அப்பொழுது ஞானி சிறுவனிடம், “பழக்கங்களும் இது போன்றதே!தீயப் பழக்கத்தை முளையில் கிள்ளி எறிந்துவிடலாம். ஆனால் அது வளர்ந்து விட்டால், அதிலிருந்து விடுபட்டு நற்பழக்கங்களை மேற்கொள்வது கடினம்.” என்று கூறினார்.

 தீய பழக்கங்கள் நமது வழக்கமாகி விட்டால், அவற்றிலிருந்து மீள்வது கடினம்; ஆகையால், அவற்றை ஆரம்ப கால கட்டத்திலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.