A+ A-

விசாரணை..!

 விசாரணை

விசாரணை..!

இரவு நேரம் 2 போலீஸ் அதிகாரிகள். கார்த்திக் மற்றும் அவரின் உதவியாளர் பிரவீன். அந்த ஊரின் அருங்காட்சியகம் நோக்கிச் சென்றனர். அந்த இடத்தைச் சென்று அடைந்ததும் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ‘வணக்கம் சார்’ என அங்கு ஏற்கனவே கூடி இருந்த சில காவலர்கள் இருவரையும் வரவேற்றனர். இந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று  கார்த்திக் உத்தரவிட்டார். 

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இரண்டு பழங்காலத்து சிற்பங்கள் மற்றும் சில வைரங்களைக் கொள்ளையர்கள் திருடி விட்டனர். இதைக் கவனித்து போலீசுக்கு அங்கிருந்த அருங்காட்சியகத்து காவலாளி தகவல் தெரிவித்துள்ளார்.

நடந்தவற்றை போலீஸ் கேமராவில் அங்கிருந்த காவலாளியின் உதவியுடன் பார்த்தனர். அங்கிருந்த நுழைவு வாயில் கேமராவுக்கு நேராக வந்த ஒரு முகமூடி அணிந்த திருடன், அந்தக் கேமராவை உடைத்தான். பின்பு நேராகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, அந்தத் திருடன் அருங்காட்சியகத்தின் அனைத்து கேமராக்களையும் நிறுத்துவது போன்ற காட்சிகளைப் பார்த்தனர்.

அவர்கள் சந்தேகப்படும்படி இருந்த அனைத்தையும் நோட்டமிட்டனர். கேமராவை நோக்கிச் சரியாக அந்தத் திருடன் நடந்து வருவதையும் எந்த ஒரு குழப்பமுமின்றி நேராகக் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்வதையும் கவனித்த அவர்களுக்கு இந்த இடத்தை ற்றி நன்கு தெரிந்த ஒருவர் தான் இதன் பின்னால் இருப்பதாக உணர்ந்தனர்.

தற்போது அவர்களின் சந்தேகம் மூன்று நபர்கள்மீது பாய்ந்தது.

ஒன்று அந்த அருங்காட்சியகத்தின் மேலாளர். அவருக்குத் தான் கட்டுப்பாட்டு அறை எங்கே இருக்கிறது என்ற விவரம் அனைத்தும் தெரியும்.

இரண்டாவது அருங்காட்சியகத்தின் காவலாளி. தினமும் ரோந்து போகும் அவர் திருடர்கள் வரும் நேரம் உறங்கியது சந்தேகத்தைத் தூண்டியது. மேலும் காவலாளிக்கும் கட்டுப்பாட்டு அறைபற்றிய தகவல்கள் தெரியும்.
 
மூன்றாவது அந்த அருங்காட்சியகத்திற்கு எதிரே புதிதாகக் குடி வந்திருந்த நபர். அந்த வீட்டிற்கு யாருமின்றி தனியாக அவர் மட்டும் நான்கு வாரங்கள் முன்பு குடி வந்திருந்தார். நுழைவு வாயிலின் வருகை பதிவேட்டில் அவரின் பெயர் பல முறை காணப்பட்டது. அருங்காட்சியகத்தைப் பல முறை சுற்றிப் பார்த்துப் பின் சரியான நாளுக்காகத் திட்டமிட்டு இருக்கலாம் என்று தோன்றியது.

முதலில் அங்கிருந்த அருங்காட்சியகத்தின் காவலாளியை அழைத்து விசாரித்தனர். ‘தினமும் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருக்கும் நீ நேற்று மட்டும் உறங்கியதாகக் கூறுகிறாய். சரியா?’ என்று கார்த்திக் தொடங்கினார்.

‘சார். நான் 11 மணிக்கு ரோந்து செல்வேன். நேற்று என்னவென்று தெரியவில்லை தேநீர் அருந்திய பின்பும் தூக்கம் வந்துக் கொண்டே இருந்தது. என்னை அறியாமல் உறங்கிவிட்டேன். 1 மணிக்குப் பொருட்கள் திருடு போன சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். போலீசுக்கு உடனே தகவல் அளித்தேன்’ என்று பதில் அளித்தார்.

கார்த்திக் பிரவீனிடம் ஏதோ செய்கை செய்ய ‘சரி நீ செல்லலாம்’ என்றான் பிரவீன்.

அருங்காட்சியகத்தில் திருட்டு நடந்துள்ளது என்ற செய்தியைத் தெரிவித்து மேலாளரை நல்லிரவிலே அழைத்தனர். அவரிடம் விசாரணையைத் தொடங்கினர்.‘சம்பவம் நடக்கும்பொழுது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’ என்று பிரவீன் தொடங்கினான்.

‘சார் திருட்டு நடந்த 11 மணிக்கு நான் ஊரிலே இல்லை. என் நண்பனைக் காண பக்கத்து ஊருக்கு இரயிலில் சென்றுக் கொண்டிருந்தேன். காவலர்கள் என்னைத் தொடர்புக் கொண்டு திருட்டு நிகழ்ந்ததை கூறியதும், அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கி வேறு இரயில் பிடித்து இங்கே வந்தேன்’ என்று கூறினார் மேலாளர்.

‘சரி நீங்கப் போகலாம்’ என்று கார்த்திக் கூறினான். ஆனால் பிரவீனை உடனே அழைத்து அவர் கூறிய தகவல்களைச் சரி பார்க்கும்படி உத்தரவிட்டான். பிரவீன் விசாரித்ததில் அனைத்து தகவல்களும் உண்மை தான் என்று இரயில் நிலையத்தின் கேமராக்கள் மற்றும் பயனியர் தகவல்களைப் பார்த்ததில் தெரிந்தது.

அருங்காட்சியகத்திற்கு எதிரே தங்கியிருந்தவரை விசாரணைக்கு அழைத்தனர்.

‘இங்கு நடந்த திருட்டை பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? சந்தேகத்திற்குரிய வகையில் எதையாவது பார்த்தீர்களா?’ எனக் கேட்டான் பிரவீன்.

‘தினமும் இரவு சுமார் 11 மணிக்கு என் வீட்டிலிருந்து அருங்காட்சியகத்தை எதர்ச்சியாகப் பார்ப்பேன். ஒரு டார்ச் லைட் வெளிச்சம் மட்டும் தெரியும். இரவு ரோந்து பணியைக் காவலாளி மேற்கொள்வதாக நினைப்பேன். நேற்று இரவும் அவ்வாறு ஒரே ஒரு டார்ச் லைட் தெரிந்தது, ரோந்து பணியாக இருக்கும் என்று தான் நினைத்தேன். சந்தேகத்திற்குறிய வகையில் எதுவும் எனக்குத் தென்படவில்லை’ என்றுக் கூறினான் எதிர்வீட்டுக்காரன்.

‘சரி, நீ அருங்காட்சியகத்திற்கு அடிக்கடி வருவதற்கு காரணம் என்ன?’ என்று கார்த்திக் கேட்டான்.

‘சார், நான் வீட்டில் தனியாக வசிக்கிறேன். பேச்சு துணைக்கு யாருமில்லை. தனிமையை உணரும் வேளையில் எதிரே இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் பொழுதைக் கழிப்பேன்’ என்று பதில் உரைத்தான் எதிர் வீட்டுக்காரன்.

‘சரி, நீ செல்லலாம்’ என்று சிந்தித்தப்படி கூறினான் கார்த்திக்.

கார்த்திக்கும் பிரவீனுக்கும் 'யார் திருடியிருப்பார்?' என்று குழப்பமாக இருந்தது. அனைவர் கூறியதும் உண்மையாக இருந்தது. இருவரும் பல கோணங்களில் ஆழ்ந்து யோசித்துக் கொண்டே இருந்தனர்.

விசாரணையிலிருந்து சரியான காரணத்துடன் குற்றவாளியை கார்த்திக்கும் பிரவீனும் கண்டுபிடித்து விட்டனர். 

இவர்கள் மூவரில் யார் குற்றவாளியாக இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காரணத்துடன் குறிப்பிட மறவாதீர்கள்.