கூகுள் உடன் இணைந்து செயல்படும் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது.

தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, கூகுள் உடன் இணைந்து செயல்படும் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது.
டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

கூகுள் உடன் இணைந்து செயல்படும் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்பா, எஸ்.என்.ஏ. ஜய்தி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி தேடு இயந்திரத் தளமான கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் திட்டத்தைக் கைவிட ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் வசம் உள்ள தகவல்களுடன் வாக்காளர்களுக்கு இணையம் மூலம் வழிகாட்டும் வகையில், கூகுள் மூலமாக மிகப் பெரிய அளவில் திட்டம் ஒன்றை செயல்படுத்த பேச்சுவார்த்தை நடந்தன.
மக்களவைத் தேர்தலின்போது அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளை கூகுள் வரைபடம் மூலம் கண்டறிவது, ஆன்லைனில் வாக்காளர் பட்டியலை தகவல்களை அறிந்து கொள்வது, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் விரைவாக வெளியிடுவது என பல்வேறு சிறப்பு வசதிகளை கூகுள் உதவியுடன் செயல்படுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கூகுள் சார்பில் சில நாள்களுக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
அதேவேளையில், தேர்தல் ஆணையம் வசம் உள்ள 80 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் பற்றிய விவரம் உள்ளிட்ட தகவல்கள், கூகுளுக்குத் தரப்பட்டால், அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை உண்டாக்கும் என்று இணைய நிபுணர்கள் எச்சரித்தனர்.
குறிப்பாக, அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான என்.எஸ்.ஏ., இணையதளங்கள் வாயிலாக ஊடுருவி உலக நாடுகளில் வேவு பார்த்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கூகுள் உடனான திட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாகவே, இந்தக் கூட்டுத் திட்டத்தைக் கைவிடுவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.