A+ A-

2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் - ஜி.ஹெச்.ஹார்டி

 ஜி.ஹெச்.ஹார்டி


உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநரும், கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.ஹெச்.ஹார்டி (G.H.Hardy) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7)

* இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் (1877) பிறந்தார். தந்தை பள்ளியில் கலை ஆசிரியர் மற்றும் நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தாயும் ஆசிரியர். 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார்.

* இவரது கணிதத் திறனுக்காக வின்செஸ் டர் கல்லூரியில் படிக்க உதவித் தொகை கிடைத்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார். பின்னர், அக்கல்லூரியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.

* இந்திய கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனிடம் இருந்து 1913-ல் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் கண்டதுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவரை அரிய பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வந்தார். அவருக்கு ஆசான், வழிகாட்டியாகவும் விளங்கினார்.

* அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்தார். இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு கணித உலகின் மகத்தான கட்டுரைகளாகப் புகழப்படும் 5 கட்டுரைகளை எழுதினர். அதில் ‘ஹார்டி - ராமானுஜன் அசிம்டாடிக்’ சூத்திரம் மிகவும் பிரசித்தம்.

* ‘கணிதத் துறையில் எனது மிகப் பெரிய பங்களிப்பு ராமானுஜனைக் கண்டெடுத்ததுதான்’ என பெருமிதத்துடன் கூறுவார். தன்னடக்கம் மிக்கவர். உலகக் கணிதமேதைகளை வரிசைப்படுத்தச் சொன்ன போது, ராமானுஜனுக்கு 100 மதிப்பெண் வழங்கியவர், தனக்கு 25 மதிப்பெண் மட்டுமே போட்டுக்கொண்டார். இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து ‘தி இந்தியன் கிளார்க்’ என்ற நாவல் 2007-ல் வெளிவந்தது.

* எட்மண்ட் லாண்டவ், ஜார்ஜ் போல்யா, இ.எம்.ரைட் உட்பட பல கணித மேதைகளுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். கணிதப் பகுப்பாய்வு, எண்கணிதக் கோட்பாட்டு பகுப்பாய்வு, எண் கோட்பாடு, முழு எண் பகிர்வுகள் உள்ளிட்ட ஏராளமான கணிதக் கோட்பாடுகளை மேம்படுத்தினார்.

*ராணுவம், போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு கணிதத்தை பயன் படுத்துவதை கடுமையாக எதிர்த்தார். ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே கணிதம் பயன்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கணிதம் தவிர இவர் ஆர்வம் கொண்டிருந்த ஒரே விஷயம் கிரிக்கெட்!

* இவர் எழுதிய ‘எ மேதமேடிசியன்ஸ் அபாலஜி’ என்ற கட்டுரை, சாமானியர்களுக்கும் கணிதத்தை புரியவைக்கிற அரிய படைப்பு. ஒரு கணித மேதையின் ஆழ்மனம் எவ்வாறு செயல்படுகிறது, கணிதத்தால் வரும் ஆனந்தம் ஆகியவை பற்றிய இவரது அரிய சிந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

* கணிதத் துறையில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகவும், லண்டன் மேதமேடிகல் சொசைட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராயல் மெடல், சில்வெஸ்டர் மெடல், காப்ளே மெடல் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹார்டி 70-வது வயதில் (1947) மறைந்தார்.