A+ A-

ஆவடி அருகே சைக்கிள் மீது தண்ணீர் டிராக்டர் மோதி 9ம் வகுப்பு மாணவி இறந்தாள்.

சென்னை : ஆவடி அருகே சைக்கிள் மீது தண்ணீர் டிராக்டர் மோதி 9ம் வகுப்பு மாணவி இறந்தாள். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை பொதுமக்கள் பிடித்து சரமாரி அடித்து உதைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி கோவில்பதாகை அசோக்நகர் ராணி அவென்யூவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் பவித்ரா (14). ஆவடி விஜயந்தா மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள்.


நேற்று காலை 8.30 மணிக்கு வழக்கம்போல வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டாள். ஆவடி டேங்க் பேக்டரி சாலை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் தண்ணீர் ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் திடீரென பவித்ராவின் சைக்கிள் மீது, டிராக்டர் மோதியது.இதில் நிலைதடுமாறி விழுந்த பவித்ரா, டிராக்டரின் சக்கரத்தில் சிக்கினாள். தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தாள். பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற டிரைவரை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலறிந்து பவித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு வந்தனர். பவித்ராவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். அதை பார்க்க உருக்கமாக இருந்தது.ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ. கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பொதுமக்களின் பிடியில் இருந்த டிரைவரை மீட்ட போலீசார் ஆவடி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

விசாரணையில் அவர், திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி (29) என தெரியவந்தது. அவரை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்கு பதிந்து முனுசாமியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது

ஆவடி அருகே சைக்கிள் மீது தண்ணீர் டிராக்டர் மோதி 9ம் வகுப்பு மாணவி இறந்தாள்.