A+ A-

தேக்கடி-- கேரளத்தின் பெரியாறு தேசியப்பூங்காவின் ஒரு பகுதி.

இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தேக்கடி’ கேரளாவில் மிகவும் விரும்பி விஜயம் செய்யப்படும் ஒரு விசேஷமான இயற்கைச் சுற்றுலாத்தலமாகும். பெரியார் காட்டுயிர் சரணாலயம் என்ற பெயராலும்அறியப்படும் கீர்த்தி பெற்ற இந்த சுற்றுலா மையமானது நடைபயணிகள், இயற்கை ரசிகர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள், சாகச விரும்பிகள், யாத்ரீகர்கள் மற்றும் குடும்பச்சுற்றுலா செல்வோர் என்று பலவகைப்பட்ட பயணிகளை ஈர்க்கிறது.

தேக்கடி புகைப்படங்கள் - பெரியார் வனவிலங்கு சரணாலயம் - பயணிகளுக்காக காத்திருக்கும் மூங்கில் படகு 
Image source: commons.wikimedia.org
கேரளா – தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் தேக்கடி காட்சியளிக்கிறது.
இங்குள்ள தேக்கடி காட்டுயிர் சரணாலயம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் தேடி வரும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். அற்புதமான காட்டுயிர் அம்சங்களும் தாவர இனங்களும் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளதே தேக்கடியின் அடையாள விசேஷமாகும்.
எஸ்டேட், காடு, விலங்கு, யானை, புலி … என்று சொன்னாலே ‘தேக்கடி!’ என்று முடிக்கும் அளவுக்கு இந்த சரணாலயம் தமிழ்நாட்டு மக்களிடையே வெகு பிரசித்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சமே இல்லை

வித்தியாசமான புவியியல் அமைப்பில் அமைந்திருப்பதால் மற்ற எந்த மலைவாசஸ்தலம் மற்றும் சரணாலயத்திலும் காணமுடியாத பல்லுயிர்ப்பெருக்க சூழல் இந்த தேக்கடி வனப்பகுதியில் நிலவுகிறது.
இதமான குளுமையான சூழல் தவழும் இந்த அழகுப்பிரதேசமானது பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பணப்பயிர்த் தோட்டங்களுடன் காட்சியளிக்கிறது. பல்வகையான வாசனைப்பயிர்களிலிருந்து வீசும் நறுமணம் இப்பகுதி முழுவதும் விரவியிருப்பதை நுகரும் அனுபவமே புத்துணர்ச்சியூட்டும் ஒன்றாகும்.
வளைந்து நெளிந்து செல்லும் மலைகளின் பின்னணியில் திரும்பும் இடமெல்லாம் தோன்றும் எழிற்காட்சிகள் இப்பகுதியை புகைப்பட ஆர்வலர்கள் நேசிக்கும் ஒரு சொர்க்கமாக மாற்றியுள்ளன.
குளுமையான சூழல் மற்றும் நவீன வசதிகள் நிறைந்த ஏராளமான ரிசார்ட் விடுமுறை விடுதிகளின் சேவைகள் போன்றவை இப்பகுதியை தேனிலவுப்பயணம் மற்றும் குடும்பச்சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகவும் பிரபலப்படுத்தியுள்ளன.
இயற்கை நடைப்பயணத்தை விரும்புபவர்களுக்கும், மலையேற்றப் பயணிகளுக்கும் பிடித்தமான அம்சங்களாக ஏராளமான ஒற்றையடிப்பாதைகள் மற்றும் மலையேற்றப்பாதைகள் தேக்கடி பிரதேசத்தில் நிறைந்துள்ளன.
இவை தவிர எல்லை தாண்டும் பயணம், காட்டு ரயில் , பாறையேற்றம் மற்றும் மூங்கில் மிதவை சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

காட்டுயிர் அம்சங்களின் கருவறை

பெரியார் தேசிய இயற்கைப் பூங்கா அல்லது பெரியார் காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற சரணாலயத்துக்காகவே தேக்கடி பிரதேசம் பிரசித்தி பெற்ற பெயராக மாறியுள்ளது.
அடர்ந்த பசுமைமாறாக்காடுகளை கொண்டுள்ள தேக்கடி வனப்பகுதியில் யானைகள், சாம்பார் மான்கள், புலிகள், காட்டுப்பன்றி, சிங்க வால் குரங்கு, வரையாடு, மலபார் காட்டு அணில் மற்றும் நீலகிரி கருங்குரங்கு போன்ற உயிரினங்கள் வசிக்கின்றன.
1978ம் ஆண்டியில் பெரியார் காட்டுயிர் சரணாலயத்திற்கு புலிகள் சரணாலயம் என்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையிலும் பல நூதன சுற்றுலாத்திட்டங்கள் இந்த சரணாலயத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பெரியார் ஆற்றின் குறுக்கே உருவாக்கப்பட்டுள்ள ஒரு செயற்கை ஏரியும் இப்பகுதியில் காணப்படுகிறது. இந்த ஏரியில் படகுச்சவாரி சென்றபடியே சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளை ரசிக்கும் அனுபவமும் சுற்றுலாப்பயணிகளுக்கு காத்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஏரிக்கு நீர் அருந்த வரும் யானைக்கூட்டங்களை படகில் பயணம் செய்தபடியே பார்த்து ரசிப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் இந்த ஏரிப்பகுதி ஏற்றதாக உள்ளது.

உவகையூட்டும் இயற்கைக்காட்சிகள்

இயற்கைக்காட்சிகளின் தரிசனங்களுக்கும் சாகச அனுபவங்களுக்கும் எல்லையே இல்லை எனும் படியாக இங்கு எழில் அம்சங்கள் குவிந்திருக்கின்றன. தேக்கடியில் காட்டுயிர் சரணாலயம் மட்டுமல்லாமல் முரிக்கடி எனும் காப்பி தோட்டங்கள் நிறைந்த பகுதி, ஆப்ரஹாம் வாசனைப்பயிர் தோட்டம், கடத்த நாடன் களரி மையம் மற்றும் மங்களா தேவி கோயில் போன்ற இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களும் நிறைந்துள்ளன.
வந்தான் மேடு எனும் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏலக்காய் தோட்டத்தில் ஒரு ரிசார்ட் விடுதியும் உள்ளது. பலவிதமான வாசனைப்பயிர்கள் பயிராகும் தேக்கடியில் தரமான லவங்கம், வெந்தயம், வெள்ளை மற்றும் பச்சை மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, நட்சத்திர சோம்பு மற்றும் கொத்துமல்லி போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்கேற்ப பாரம்பரிய கேரள உணவுவகைகள் விதவிதமான சுவைகளில் இங்குள்ள உணவகங்களில் பரிமாறப்படுகின்றன.

இனிமையான பருவநிலை மற்றும் பயணத்திற்கு எளிதான போக்குவரத்து வசதிகள்

தேக்கடியின் விசேஷ அம்சமே இங்கு நிலவும் இனிமையான பருவநிலையும் எளிதில் சென்றடையக்கூடிய இருப்பிடமும் ஆகும். குளுமையான சூழலுடன் காட்சியளிக்கும் சுற்றுலாவுக்கேற்ற உவப்பான தன்மை இப்பகுதியின் விசேஷ அடையாளமாகும்.
கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்தும் சுலபமாக இந்த சுற்றுலாத்தலத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். மதுரை, கம்பம், கொச்சி (165 கி.மீ), எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம்(250 கி.மீ) போன்ற நகரங்களிலிருந்து தேக்கடிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
பிரபலமான சுற்றுலாத்தலமாக திகழ்வதால் தேக்கடியில் பலவகையான விடுதிகளும் ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகளும் கிடைக்கின்றன. சிக்கனமான ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை ரிசார்ட் விடுதிகளையும் கொண்டுள்ள தேக்கடியில் சுவையான உணவு மற்றும் நவீன வசதிகளுக்கு குறைவில்லை.
சாகச நடைப்பயணங்கள், ஏகாந்தமான இயற்கைச்சூழல் என்று சுற்றுலாப்பயணிகள் விரும்பும் பலவித அம்சங்களையும் இந்த தேக்கடி சுற்றுலாத்தலம் தன்னுள் கொண்டுள்ளது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் சாலை மார்க்கமாக தேக்கடிக்கு எளிதில் சென்றடையலாம். கேரள மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் கோட்டயம், கொச்சி மற்றும் திருவனந்தபுரம், போன்ற நகரங்களிலிருந்து தேக்கடிக்கு இயக்கப்படுகின்றன. பல பெருநகரங்களிலிருந்து தேக்கடிக்கு ஒருங்கிணைந்த கூட்டுச்சுற்றுலா சேவைகளும் தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகின்றன.
உயரம் : 


கடல் மட்டத்திலிருந்து 900 – 1800 மீட்டர்.
மழைப்பொழிவு : 2500 மி.மீ

தேக்கடி என்றதுமே யானைகள், முடிவில்லா சங்கிலித் தொடர் போன்ற குன்றுகள், நறுமணமூட்டும் வாசனை பொருட்களின் தாவரங்கள் ஆகியவை நம் கண்முன் விரியும். இங்குள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் மிகச்சிறந்த சரணாலயங்களுள் ஒன்றாகும். மேலும் இந்த மாவட்டம் முழுவதும் அழகிய தாவர வாசனைகள், மலையேற்றத்திற்கு ஏற்ற குன்று நகரங்கள் என்று காணுமிடமெங்கும் அழகின் மறுமவதாரமாகக் காட்சி அளிக்கும்


சாலை

குமுளியிலிருந்து வெவ்வேறு சுற்றுலாதளங்களுக்குச் செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. (4 கி.மீ தொலைவு).

தேக்கடியிலிருந்து முக்கியமான சில நகரங்களுக்கிடையிலான தொலைவு.
 • குமுளி : 4 கி.மீ (15 நிமிடங்கள்) சபரிமலை வழி.
 • புல்லுமேடு : 50 கி.மீ. (2 மணி நேரம்).
 • இடுக்கி : 65 கி.மீ (2 1/2 மணி நேரம்).
 • மூணாறு : 106 கி.மீ. (4 மணி நேரம்).
 • குமாரகோம் : 128 கி.மீ (4 மணி நேரம், சபரிமலை வழி).
 • எருமெலி : 134 கி.மீ (4 மணி நேரம்).
 • கொடைக்கானல் : 149 கி.மீ (5 மணி நேரம்).
 • ஆலப்புழா : 164 கி.மீ ( 5 மணி நேரம்).
 • கொல்லம் : 220 கி.மீ ( 6 மணி நேரம்).
 • ஊட்டி : 390 கி.மீ (11 மணி நேரம்).

குமுளியிலிருந்து பேருந்து புறப்படும் நேரம். 
 • தேக்கடி 9.30, 10.45, 11.30, 12.00, 12.30, 13.30, 15.30 மணி.
 • குமாரகோம் : 7.00 மணி.
 • மூணாறு : 6.00, 9.45, 13.30 மணி.
 • எர்ணாகுளம் : 7.00, 13.30, 15.15, 16.30, 17.15, 19.30 மணி.
 • திருவனந்தபுரம் : (குமுளியிலிருந்து) 8.40, 15.30, 16.15, தேக்கடியிலிருந்து 8.20, 15.15 மணி.
 • கோட்டயம் : அடிக்கடி பேருந்து வசதி உண்டு.
 • ஆலப்புழா: 11.15 மணி.
 • சேர்த்தலா: 14.15 மணி.
 • இடுக்கி: அடிக்கடி பேருந்து வசதி உண்டு.
 • சென்னை : 16.30, 19.00 மணி.
 • பாண்டிச்சேரி : 16.30 மணி.
 • மதுரை : 0115, 0515, 0525, 0645, 0716, 0720, 0730, 0755, 0835, 0940, 1030, 1045, 1120, 1155, 1300, 1315, 1320, 1420, 1515, 1540, 1550, 1650, 1705, 1800, 1840, 1905, 2045 மணி நேரம்
 • திண்டுக்கல் : அடிக்கடி பேருந்து வசதி உண்டு.
 • கொடைக்கானல் : குமுளியிலிருந்து கொடைக்கானலுக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. திண்டுக்கல் பேருந்து மூலம் நீங்கள் வத்தலகுண்டு வரை சென்றால் அங்கிருந்து கொடைக்கானலுக்கு (149 கி.மீ) அடிக்கடி பேருந்து வசதி உண்டு.
 • திருச்சி : 0855, 1045, 1925 மணி நேரங்களில்
 • பழனி : 0930, 1135, 1830, 1850 மணி நேரங்களில்

தாவரங்கள்
171 புல் வகைகள், 143 மல்லிகை வகைகள் உட்பட 1965க்கும் மேலான பூக்கும் தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.

விலங்குகள்பாலூட்டிகள் : காட்டு யானை, சிறுத்தைப்புலி, சாம்பார் மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற 35 வகையான விலங்குகளை நாம் நீலகிரி தார் பகுதியில் படகுகளில் செல்லும்போதும் உயரமான பாறை நிலப்பகுதியில் செல்லம்போதும் காணலாம். மிகவும் அடர்ந்த நடு காட்டுப் பகுதிகளில் போனெட் மொகாக்கு, மலபார் ராட்சத அணில், பறக்கும் அணில், புலி, காட்டுப்பூனை, தேவாங்கு போன்றவை காணப்படுகின்றன.

பறவைகள் :
 வெளி நாடுகளிலிருந்து வந்த பறவைகளோடு சேர்ந்து 265 வகை பறவைகள் உள்ளன. ஹார்க்பில், ஸ்டார்கி, மரங்கொத்தி, கிங்பிஷ்சர், ராப்டார், கார்மோரன்ட், கிராக்கிள் மார்டர் முதலியன.

ஊர்வன :
 நல்ல பாம்பு, விரியன் பாம்பு, கரு நாகம், விஷமில்லாத பல விலங்குகள் மற்றும் ராட்சத பல்லி ஆகியவையும் இங்கு உள்ளன.

நீரில் வாழ்வன : 
தவளைகள், தேரைகள், காலில்லா காயிசிலியன்கள், பல வண்ண மலபார் வழுக்குக் தவளை, இந்திய தேரைகள், பங்காய்டு தவளைகள் இரு வண்ண தவளை.

மீன்கள் : 
பெரியார் ஏரி மற்றும் ஓடைகளில் பல்வேறு வகை மீன்கள் காணப்படுகின்றன. மாஷீர் என்னும் மிகவும் பயங்கரமான விளையாட்டு மீன் வகை மீனும் உண்டு. ஏரிகளில் காணப்படும் ஒரே பாலூட்டி வகையைச் சார்ந்த ஓட்டர்-ஐயும் படகு சவாரி செய்யும்போது காண முடியும்.

தாவர வகைகள் : 
தேயிலை, ஏலக்காய், மிளகு மற்றும் காப்பி, பயிர்கள், பெரியார் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

சரணாலய கவனிப்பு கோபுரங்கள்: 
பெரியார் காட்டின் உள்பகுதியில் இரண்டு கவனிப்பு கோபுரங்கள் உள்ளன. ரிசர்வேஷன், காடுகள் தகவல் மையம், தேக்கடி, தொலைபேசி: 322028 மூலம் செய்யப்படுகிறது.

அனுமதி வழங்கும் அதிகாரம் : 

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி, பெரியார் புலிகள் சரணாலயம், தேக்கடி.

தேக்கடி என்றதுமே யானைகள், முடிவில்லா சங்கிலித் தொடர் போன்ற குன்றுகள், நறுமணமூட்டும் வாசனை பொருட்களின் தாவரங்கள் ஆகியவை நம் கண்முன் விரியும். இங்குள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் மிகச்சிறந்த சரணாலயங்களுள் ஒன்றாகும்.