இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜதிங்கா என்னும் கிராமம் ஒன்று உள்ளது. நமது வேடந்தாங்கல் என்னும் இடத்திற்கு ஆண்டுதோறும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவது உண்டு. ரஷ்யா போன்ற தூர தேசங்களில் இருந்தும் இத்தகைய பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து... களைகட்டும் வேடந்தாங்களில் பறவைகளைக் கண்டு ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக அலைமோதுவது நமக்கெல்லாம் தெரிந்த உண்மை.
இதேபோன்று ஜதிங்காவிற்கும் செப்டம்பர் முதல், நவம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவது உண்டு. ஆனால், இவைகள் இங்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, தங்கள் இனத்தை விருத்தி செய்வதற்காக வருவதில்லை.
இங்கு கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்வதற்காகவே வருகின்றன.
நம்புவதற்கும், ஜீரணிப்பதற்கும் கஷ்டமாக இருந்தாலும், இதுதான் உண்மை. பல காலமாக இங்கு இவ்வாறு நடந்து வருகின்றன.
இந்த மாதங்களில் இரவு 7 மணி முதல், 10 மணி வரை இந்தப் பகுதியில் பறக்கும் பறவைகள் அனைத்தும் அப்படியே தொப்... தொப்பென கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றன.
இவ்வாறு பறவைகள் இங்கு பெருமளவில் தற்கொலை செய்து மரணமடைவதைக் கண்காணிக்க அங்கு "வாட்ச் டவர்' ஒன்றை அரசு அமைத்துள்ளது. ஆனாலும், பறவை களின் தற்கொலையைத் தடுக்கவே முடியவில்லை.
இவ்வாறு பறவைகள் தற்கொலை செய்வதற்கு என்ன காரணம்?
ஜதிங்கா கிராமத்தில் அப்போது கடும் குளிர் நிலவும் காலம் அது. எனவே, கடும் பனி மூட்டம் காரணமாக குளிர் தாங்க முடியாமல் போய்விடுவதால் பறவைகள் மரணமடைவது நடைபெறுகிறது.
இந்தப் பருவ காலத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறுகின்றன. இந்தக் காந்தப் பண்புகள் பறவை களின் உடலுக்குள் பாய்ந்து, அதன் இயக்கங்களைப் பாதித்து விடுகின்றன.
இதனால் பறவைகளின் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி அவற்றைத் தற்கொலை செய்யும் எண்ணத்திற்குத் தூண்டுகின்றன. இதுவே பறவைகளின் தற்கொலைக்குக் காரணம் என்று ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் பறவைகளின் கூடுகள் சின்னாபின்னமாகி விடுகின்றன. அதுபோன்ற தருணத்தில் பறவைகள் தங்குவதற்கு இடமின்றி அலைமோதுகின்றன.
அப்போது அங்குள்ள பழங்குடியின மக்கள் இன்னொரு பகுதியில் ஒளி ஒன்றை ஏற்படுத்து கின்றனர். அவ்வாறு ஒளி கிடைக்கப் பெற்றதும் பறவைகள் அனைத்தும் அதனை நோக்கி வேகமாக இடம் பெயரும். அந்த நேரத்தில் அந்தப் பழங்குடியின மக்கள் நீளமான மூங்கில் கம்புகளைக் கொண்டு பறவைகளை அடித்துக் கொல்வதாகவும் சொல்லப் படுகிறது.
ஆனால், உண்மையிலேயே அங்கு என்னதான் நடக்கிறது? பறவைகள்தானாகவே தற்கொலை செய்கின்றனவா?
ஆனால், பறவைகள் தானாகவே தற்கொலை செய்து கொள்வதாகத்தான் பலரும் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மர்மம் இன்றும் தீரவில்லை!
நன்றி:தினமலர்
கருத்துரையிடுக