A+ A-

652 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல்..!

 சென்னை

652 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல்..! 

பழமைவாய்ந்த நகரமான சென்னைக்கு வயது 652 என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். மாதரசன்பட்டணம் (மதராசப் பட்டணம்) என்கிற சென்னை தொடர்பான தகவல்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பென்னேஸ்வர மடம் கிராமத்தில் உள்ள பழங்கால கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர்கள் வருகையால் நம் பழங்கால வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது சென்னை நகரத்தின் பிறந்தநாள் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

‘‘பென்னேஸ்வர மடம் கிராமத்தில் உள்ள பெரிய பாறை கல்வெட்டில் மதராசப்பட்ட ணம் குறித்து பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதியுடன் சென்னைக்கு வயது 652 ஆகிறது. வரலாற்றின்படி கூற வேண்டும் என்றால் சென்னைக்கு வயது எழுநூறு’’ என்கிறார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ‘‘சென்னை நகரத்தின் சில பகுதிகள் உருவாகி 2000 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்றைய மாம்பலம் பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருந்திருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் ரோமானியர் வெளியிட்ட நாணயம் மாம்பலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் முக்கியமான நகரம். அதன் ஒரு பகுதியாக திருவல்லிக்கேணி இருந்திருக்கிறது. பார்த்தசாரதி கோயிலில் பல்லவர் கால கல்வெட்டுகள் உண்டு. அவை சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்டவை. இன்றைய சென்னையின் பல பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. திருவலியதாயம்(பாடி), ஒற்றியூர், மணலி, திருமுல்லைவாயில் என சொல்லிக் கொண்டே போகலாம். மெட்ராஸ் என்பது சென்னை மாநகரமாக கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆங்கிலேயர்களால் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி உருவாக்கப்பட்டதாக கருதி, சென்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் சென்னையில் இருந்து 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னேஸ்வர மடம் கிராமத்தில் 1973-ம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறையால் பெரிய பாறைக் கல்வெட்டு ஒன்று படியெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில், சென்னையில் கடற்கரை ஒட்டி இன்றும் அதே பெயரில் இருக்கும் பல இடங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அன்றைய துறைமுக நகரங்களாக இருந்தவை.

விஜயநகர ஆட்சியின்போது முளுபாகல் மண்டலேஸ்வரனாக (ஆளுநர் பதவியில்) இருந்தவர் குமாரகம்பண்ணன். இவர் மதுரையில் சுல்தான்களை ஒழித்தவர். முளுவாய் ராஜ்ஜியத்தின் கீழ் பையூர் நாடு இருந்தது. பையூர் பற்றானது சோழர்களின் நிகரிலி சோழ மண்டலத்தின் கீழ் இருந்தது.

விஜயராஜேந்திரனின் கீழ் பையூரில் படைகளை வைத்து ஆட்சி செய்த சிற்றரசன் மதுராந்தகன் வீரநுளம்பன் ராசநாராயணன் கங்கப்பெருமாள் என்பவர் ஆவார். அவரது கல்வெட்டுகள் பென்னேஸ்வர மடம் பென்னைநாயனார் கோயிலில் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பையூர் பகுதி விஜயநகர ஆளுகையின் கீழ் வந்தது. முளுவாய் ஆளுநர் குமாரகம்பண்ண உடையாரின் படைத்தளபதி சோமப்பதண்ட நாயகனின் மகன் கூளிமாராயனின் வீரச் செயல்களை 31 வரிகளில் பெரிய கல்வெட்டாக வெட்டி வைத்துள்ளார். இந்த கல்வெட்டில்தான் சென்னையின் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அக்கல்வெட்டின் 16, 17வது வரிகளில்.... “...சானபட்டணம், புதுப்பட்டணம், மாதரசன் பட்டணம் சத்திக்குவரிய ...பட்டணம், நீலாங்கரையான்பட்டணம், கோவளம் மற்றுள்ள பல பட்டணங்களும், கரையும், துறையும் உட்படக் கொண்டு இராசாவின் கைய்யிலே காட்டிக்குடுத்து இராசபதமாந தாந’’ என்று குறிப்பிட்டுள்ளது.

இக்கல்வெட்டு கடந்த 1367-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெட்டப்பட்டது. நீர் பாசனத்துக்காக கண்டரக்கூளிமாராயன் பெருவாய்க்கால் வெட்டிய செய்தி, வீரப்பிரதாபங்களைப் பறைசாற்றுகிறது.

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துக்காக, தமிழகத்தில் உள்ள விஜயநகர காலத்துக் கல்வெட்டுகளை முனைவர் ஒய்.சுப்பராயலு, தொல்லியல் முனைவர் ராஜவேல், பூங்குன்றன் ஆகியோர், காவேரிப்பட்டணத்தில் நடந்த தமிழகத் தொல்லியல் கழகத்தின் 26-வது கருத்தரங்கில் திரும்பவும் படியெடுத்து மீளாய்வு செய்து சென்னையின் பழைய பெயரான மதராஸ் என்கிற பெயர் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்துள்ளனர்.

சென்னை 380 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது என கூறுவது வரலாற்றுப் பிழையாகும். சென்னை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரமாகும். பென்னேஸ்வர மடம் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் மூலம் மதராசப்பட்டணம் (எ) சென்னை ஜூலை 21-ம் தேதியுடன் 652 வயதை கடந்துள்ளது என்பதிலும், பழமையான நகரம் என பெருமை கொள்வோம்.’’