A+ A-

விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை..!

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு, விவசாயிகள் இடையே இதுவரை 5 சுற்றுபேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே டெல்லியில் இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய வேளாண் துறையின் அழைப்பின் பேரில் 40 விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் அனுப்பிய கடிதத்துக்கு, 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 4 முக்கிய கோரிக்கைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை சட்டபூர்வமாக உறுதிசெய்ய வேண்டும். வேளாண் கழிவுகளை எரிப்பதற்காக விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்தமசோதாவை வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாய சங்க மூத்த தலைவர் அபிமன்யு டெல்லியில் நேற்று கூறும்போது, "எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 30-ம் தேதி டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைப் பகுதிகளில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம்.

அன்றைய தினம் மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் டிராக்டர் பேரணியை டிசம்பர் 31-ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளோம். மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது எங்களது 4 முக்கிய கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்" என்றார்.



புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.